Sunday, March 01, 2009

தெரிந்த - கவனிக்கத் தவறிய முகங்கள்

கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக, 1964ல் 'கல்கி'யில் வெளியான 'பேசாத உறவு' முதல் சமீபத்திய 'இஞ்சி' வரையிலான திரு.பி.ச.குப்புசாமியின் கதைகளை அவதானித்து வருபவன் நான். அற்புதமான மரபுக்கவிஞரும், கதைக்கலைஞருமான அவர் எப்போதும் வாழ்க்கை பற்றிய ஆரோக்கியமான கனவுகளோடும், மனித நேயத் துடனுமே மாந்தர்களைக் கண்ணகலப் பார்த்து வருபவர் என்பதை 'எனி இந்தியன்' வெளியிட்டிருக்கும் 'தெரிந்த முகங்கள்' என்ற அவரது முதல் கதைத் தொகுப்பினைப் படிப்பவர்கள் அறிய முடியும். சிறுகதை வெளிப்பாட்டில் பெரும் சாதனைகளை
நிகழ்த்தி இருக்க வேண்டிய அவர், தனது குருநாதர் ஜெயகாந்தனைப் போலவே, வெகுகாலத்துக்கு முன்னரே கதைகள் எழுதுவதை நிறுத்தி விட்டவர். ஆன்மீகநாட்டம் மற்றும் 'எழுதி என்னவாகப் போகிறது' என்பதுடன் திரு.ராஜாராம் பதிப்புரையில்
குறிப்பிட்டுள்ளபடி எழுத்தின்மீது கொண்டுள்ள மகத்தான மரியாதை காரணமாகவும் எழுதுவதை நிறுத்தி வைத்திருந்தவரை, தற்போது 'வார்த்தை' இதழ் எழுத்துலகிற்கு
மீட்டிருப்பது இலக்கிய உலகுக்கு இதம் தரும் செயலாகும்.

இத்தொகுப்பில் உள்ள கதைகள் அனைத்துமே எதாவது ஒருவகையில் 'முகங்'களை அவர் எதிர்கொண்டதன் பல்வகை வெளிப்பாடாகவே உள்ளன.
எல்லாமே நமக்குத்தெரிந்த முகங்கள்தாம். ஆனால் நாம் கவனிக்கத் தவறிய -
குப்புசாமியின் பார்வைக்கு மட்டும் புலப்பட்டிருக்கிற மென்மையும் மேன்மையும்
கொண்ட மகத்தான மனிதர்களின் முகங்கள். அவர்கள் பெரும் லட்சியவாதிகள் அல்லர். வாழ்க்கையை அதன் போக்கில், தர்க்கிக்காமல் - 'கங்கவரம்' கதையின்
நாயகியான காமுவைப்போலவே - மௌனமாக ஏற்றுக் கொண்டிருக்கும் சாதாரண
மனிதர்கள். நாம் கவனிக்கத் தவறவிட்ட இவர்களை இக் கதைகளின் மூலம் நம் அருகே கொணர்ந்து காட்டியுள்ளார் ஆசிரியர்.

இவர் அழகிய முகங்களை ஆராதிப்பவர் என்பதை இத்தொகுப்பில் உள்ள பலகதைகளில் காண முடியும். பணிநிமித்தமாய்ப் போகும் இடங்களில் எல்லாம் 'அந்தக் காலகட்டத்தில் நான் தனித்தனியே அந்த ஜனங்கள் எல்லோரையும் முகம் தெரிந்துகொண்டேன்' என்று 'சகுந்தலா சொல்லப்போகிறாள்' கதையில் எழுதுகிறார்.

'அசட்டுத்தனத்தின் ஆழங்கள்' என்ற கதையிலும் அவர் பார்வையில் தென்படுகிற முகங்களை இப்படி வருணிப்பார்: 'ஜன்னலூடே பார்க்கும் பல முகங்களும் வரிசையாய்த் தெரிந்தன. பேசுகிற முகங்கள்.... சிரிக்கின்ற முகங்கள்.... ஆழ்ந்து யோசிக்கிற முகங்கள்.....'

'கங்கவரம்' கதையின் நாயகி காமுவின் கன்னி கழியாத சோகத்தைச்
சித்தரிக்கும்போது அவளது முகத்தை, 'வாழ்வின் ரசம் ஊறித் ததும்ப வேண்டிய இந்த முகம்...' என்று இரங்குவார். காமு, மாடத்தில் அகல்விளக்கை வைத்துவிட்டு திரியைத் தூண்டிக் கொண்டிருந்ததைக் குறிப்பிடும்போது, 'முகம் எப்படி இருந்தது தெரியுமா? அதுவும் ஏற்றப்பட வேண்டிய ஒரு விளக்குபோலவே இருந்தது!' என்று உருகுவார்.

- இங்ஙனம் அவர் அறிந்த முகங்கள் எல்லாம் அவரால் ஆராதிக்கப் பட்டவையே. படித்தபின் அவை நமக்கும் தெரிந்த முகங்களாகி விடுகின்றன.
நூலின் தலைப்பான 'தெரிந்த முகங்கள்' குறிப்பிடுகிற முகங்கள் வேறாயினும் அது எல்லாக் கதைகளுக்குமே ஓரளவு பொருந்திப் போகின்றன.

இதே மாதிரி, 'கனவு'ம் இவர் கதைகளில் அதிகம் இடம் பெற்றுள்ளன. ஒரு கலைஞனுக்கு, அதுவும் ஒரு கவிஞனுக்கு 'கனவு' இயல்புதானே?

முதல் கதையே - 'கிருஷ்ணாரெட்டியின் குதிரைச்சவாரி'யே, கனவு பற்றியது தான். இக்கதையில் வரும் இவரது பால்ய நண்பன், அடிக்கடி விதம்விதமான குதிரை களின் மீது சவாரி செய்வதாய்க் கனவு காண்பவன். பல ஆண்டுகளுக்குப் பின்னர் அவனைச் சந்திக்கும்போது அத்தகைய கனவுகள் அடியோடு நின்று போயிருந்தன.
காரணம் பின்னாளில் ஒரு பெண்ணுடன் ஏற்பட்ட தேக சம்பந்தமான உறவு என்று தெரிகிறது. கனவு இங்கே பால் விழைவின் குறியீடாக வருகிறது.

'சகுந்தலா சொல்லப் போகிறாள்' என்கிற கதையில் அவளை அறிமுகப் படுத்தும் இடத்தில், 'எத்தகைய கிராமப்புறமாக இருந்தபோதிலும் அங்கே ஒரு
அழகிய கனவு தோன்றும் போலும்... சகுந்தலா ஒரு கனவு போன்றவள்' என்று
சித்தரிப்பார். இது வேறு கனவு!

'அசட்டுத்தனத்தின் ஆழங்கள்' கதையில், 'எனது கனவுகள் காலத்தின்
அடிவானம் நோக்கி உருவமிழந்து போய்க் கொண்டிருப்பதைப்போன்ற ஒரு பிரமை யுடன் அவள் போவதையே பார்த்துக்கொண்டிருந்தேன்' என்று தன் சிதைந்த
கனவைச் சொல்லுகிறார்.

'மீள்வதில் என்ன இருக்கிறது?' என்ற கதையில் காட்டும் கனவு ஆன்மீகம் கலந்த காவியக் கனவு. 'காதலைப் பற்றியும், பெண்களைப் பற்றியும் அதுவரை நான்
கனவுகள் மட்டுமே கண்டு ஏங்கிக் கொண்டிருந்தேன். அந்தக் கனவின் பெண்கள் இந்தப் பூமியில் இல்லை. அவர்கள், இராமகிருஷ்ணரின் வாக்கினால் விவரிக்கப்பட்டு,
சக்தியின் பிரபைகள் என அவரால் பூஜிக்கப்பட்ட தத்துவங்களிலே இருந்தனர்.
அந்தியின் கருநிறச் சாயை படிந்த நெடும் பாலைவனங்களுக்கும், கடல்களுக்கும் அப்பால் உள்ள வேறுதேசங்களின் காவியங்களிலே இருந்தனர். குத்துவிளக்கின் சுடரொளியில் பிறந்து, எனது மனோபாவங்களின் உருவக்கோடுகளுக்குள் வந்து நுழைந்த வானத்துக் கனவுகளிலே இருந்தனர்' என்று கவித்துவத்தோடு எழுதுவார்.

இத்தொகுப்பில் உள்ள கதைகளில் மிகச்சிறப்பானவை என 'சகுந்தலா
சொல்லப்போகிறாள்', அசட்டுத்தனத்தின் ஆழங்கள்', 'மீள்வதில் என்ன இருக்கிறது?' என்கிற கதைகளைச் சொல்லலாம். இக்கதைகள், வித்தியாசமான பத்திரிகையாளராகப் பேசப்பட்ட திரு.'சாவி'யால் அங்கீகரிக்கப்பட்டு 'தினமணி கதிரி'ல் 'நட்சத்திரக் கதை' என முத்திரை இடப்பட்டு பரிசு பெற்றவை. சாவியின் அங்கீகரிப்பு அக்கால கட்டத்தில் பொருட்படுத்தக்கூடியாதாக இருந்தது.

இக்கதைகள் நிறைவேறாத ஆனால் அதற்காக இடிந்து போய்விடாத
காதல்களைச் சொல்பவை. இக்காதல்களில் அசட்டு உருக்கம் இல்லை; ஆயாசம் இல்லை; ஏமாற்றம் இல்லை; ஏக்கம் இல்லை. பாத்திரங்கள் சோக உருவிலேயே
வார்க்கப்பட்டவை என்றாலும் மற்றவர் நலன்மீது, மகிழ்ச்சியான வாழ்வின்மீது அக்கறை கொண்ட சுயநலமற்ற காதல்கள். இவரது கதைகளில் வரும் பெண்கள் அனைவருமே எதுவும் பேசுவதில்லை. மௌனம் சாதிப்பவர்கள்; கண்ணியமும் மென்மையும்
மிக்கவர்கள். காதலர்களும் காதல்மொழிகள் பேசி வழிபவர்கள் அல்லர்; காதலை
வெளிப்படுத்தத் தயங்குகிறவர்கள். எட்டி நின்று ஆரவாரமின்றி அடக்கி வாசித்து,
காதலை உணர்த்துகிறவர்கள். காதல் நிறைவேற வேண்டும் என்கிற பிடிவாதமும் அற்றவர்கள். இக்கதைகளில் சஸ்பென்ஸ் என்கிற உச்ச கட்டங்கள் இல்லை. இவை மென்மையாய் சப்தமின்றி சிலுசிலுத்து ஊர்ந்து செல்லும் ஓடைநீர் போன்றவை. மனதை உறுத்தாத இதம் தருபவை. 'பேசாத உறவு' என்கிற கதை அப்படிப்பட்ட, நெஞ்சுக்கு இதமான ஒரு கதை.

'சகுந்தலா சொல்லப்போகிறாள்' கதையில் வரும் சின்னப் பெண் ஒருத்தி,அவளுக்கு வயதாலோ, மனதாலோ எவ்வகையிலும் பொருத்தமற்ற ஒரு சவடால்ப் பேர்வழிக்கு மணம் முடிக்கப்பட்டுவிடுவாளோ என்று கதை சொல்லியின் கவலையைச் சொல்லி, அந்தப் பெண் சகுந்தலா, தான் அதற்கு மறுப்புச் சொல்லப்போவதாகச் சொல்வதைக் கேட்டு அது நடக்க வேண்டும் என்று ஆதங்கப்படுவதைச் சொல்கிறது.

'அசட்டுத்தனத்தின் ஆழங்கள்' காதல் வயப்படவர்கள் தனது செயல்கள்அசட்டுத்தனம் என்று அறிந்திருந்தும் பிரக்ஞையுடனேயே அதன் அடியாழத்துக்கே சென்றுவிடுகிற பேதைமையைச் சொல்கிறது. 'காதல் வயப்பட்ட உள்ளம், அற்பமான விஷயங்களைக்கூடப் பைத்தியக்காரத்தனமாய்ப் பெரிதுபடுத்திக் கொள்கிறது' என்கிற சுய இரக்கமும் காட்டப்படுகிறது.

'மீள்வதில் என்ன இருக்கிறது?'- கதையில் வரும் காதலன், காதலியின் அன்புக்காக அவளது காலடியில் சரணாகதி அடைந்தும், அவள் அவனது காதலைஅவ்வப்போது சுவீகரிப்பதும், நிராகரிப்பதுமாய்க் கோலம்காட்ட - தனது காதலின்
தீவிரத்தால் மனநோயாளி ஆகிப் போவதையும், அதிலிருந்து மீள அவன் மரணத்தின் விளிம்புக்கே சென்றுவிடும்போது, அவனைப் பார்க்க வருகிற அவளை கடைசி
நேரத்திலாவது தனது ஆண்மையைச் சிறுமைப்படுத்த அனுமதிக்கூடாது என்று
வைராக்கியமாக இருப்பவன் - நேரில் கண்டதும் 'இனி மீள்வதில் எந்த அர்த்தமும் இல்லை' என்று மீண்டும் சரணாகதி அடைகிற அவலத்தையும் சொல்கிறது.

'பேசாத உறவு' கதையில், கதைநாயகன் சிவராமனுக்கு பக்கத்து வீட்டுப் பெண் பத்மாமீது காதலில்லாத ஈர்ப்பு உண்டாகிறது. அவளுக்கும் அவனிடம்
மரியாதையும் நாணமும் கொண்ட ஈடுபாடு இருக்கிறது. ஒருநாள் அவளுக்குத்
திருமணமும் ஆகி குழந்தையும் பிறக்கிறது. என்றாலும் அவளது கணவனைவிட தனக்கே அவளிடம் பாசம் காட்ட உரிமை இருப்பதாக எண்ணுகிறான். தன் குழந்தைக்கு அவள் இவனது பெயரையே வைத்திருப்பதை அறிந்து புளகாங்கிதம் அடைகிறான். அவர்கள் இருவரும் என்றைக்கும் பேசியதில்லை. பேசக்கூடிய உறவு அவர்களுக்குள் இருந்ததில்லை. இறுதிவரை அந்த உறவு பேசாத உறவாகவே நின்று விடுகிறது.

'கங்கவரம்' என்கிற கதை 'ஆனந்த விகடனி'ல் பிரசுரமான கதை. இருபது வயது இளைஞனாய் சாரங்கன் கங்கவரம் கிராமத்துக்கு வேலைக்காகச் சென்ற
போது, மனதுக்கு ரம்மியமாய் எத்தனையோ விஷயங்கள் இருந்தபோதும் அக்ரஹாரத்தில் வயது கடந்த பின்னும் திருமணமாகாமல் 'கோரிக்கையற்றுக் கிடக்கும் வேரில் பழுத்த பலா'வாய், கனவுகளின் சருகாய் இருந்த காமு என்கிற ஏழைப்பெண்ணுக்காக மனம் அலைக்கழிக்கப்படுகிறான். அறிவும், அழகும் நிறைந்த அவள் எப்படி ஒருவராலும் அங்கீகரிக்கப்படாதவளாக இருக்கிறாள் என்ற பரிதாப உணர்ச்சி அவளைப் பார்க்கும் போதெல்லாம் அவனுக்கு எழுகிறது. கடைசியில் ஒரு நாள் அவன் வேறு ஊருக்கு
மாறுதலாகி அந்த ஊரைப் பிரியவேண்டி வருகிறது. ஊருக்குப் புறப்படு முன், கடைசித் தடைவயாக அவளைக் கோயிலில் பார்க்க நேர்கிறது. அதுவரை அவளிடம் எதுவும் பேசியிராத அவன், மனம் உருகி 'உங்களைப் பார்த்தால் வருத்தமாய் இருக்கு....உங்களுக்குச் சீக்கிரம் கல்யாணம் ஆகணும்' என்று சொல்லிவிட்டுப் பதிலை
எதிர்பாராமல், கால்கள் தடுமாற வெளியேறுகிறான். வெகுகாலத்துக்கு காமுவை அவனால் மறக்க முடியவில்லை. கங்கவரமும் பிறகு ஒரு கனவு போலாகியது.

'விருது' என்றொரு கதை. ஜெயகாந்தன் அவர்கள் 'குமுதத்'துக்காக ஒருமுறை தயாரித்த சிறப்பிதழில் அவரால் தேர்வு செய்யப்பட்டு வெளியானது.
'நல்லாசிரியர் விருது' எப்போதும் 'வாங்கப்படுவதா'கவே பேசப்படுவதும், ஒருபோதும் 'கொடுக்கப்பட்டுள்ளது' என்று சொல்லப்படுவதில்லை என்பதும் கல்வித்துறையில் பேசப்படுகிற கேலி. இக்கதையில் அதனை மையமாகக் கொண்டு, நல்லாசிரியர்
விருதுக்கு ஆசிரியர் மனுப்போடும் கேவலத்தைச் சாடி, நல்லாசிரியரைத் தேடி
அரசாங்கமே விருது வழங்கிக் கௌரவிக்க வேண்டும் என்கிற தார்மீக நெறியைச்
சுட்டிக் காட்டுகிறது கதை.

'இஞ்சி' என்கிற கதை ஒரு நேர்மையான, கடமை உணர்வு மிக்க ஒரு
பாரஸ்டர் பற்றியது. குப்பையில் கொட்டப்படும் இஞ்சித் துண்டுகள், காலம் கடந்தும் முளைத்து எழுவதுபோல வாழையடி வாழையாய் நேர்மையான அதிகாரிகள்
தோன்றாததின் குறியீடாக கதை சொல்லப்படுகிறது.

தொகுப்பின் தலைப்பிலான கடைசிக்கதை 'தெரிந்தமுகங்கள்' சற்றே
நீளமானது. இதைக் கதை என்று சொல்வதைவிட பரவசமான அனுபவங்களின்
வெளிப்பாடு என்பது சரியாக இருக்கும். ஜெயகாந்தன் அவர்களே தனது அணிந்துரை யில் குறிப்பிட்டுள்ளதுபோல அவரையும் அவருடன் நெருக்கமான ஐந்து திருப்பத்தூர் நண்பர்களையும் பற்றிய ஒரு சுவாரஸ்யமான கதைபோன்ற அறிக்கை. இதில் வரும்
சித்தர் போன்ற சாமியாரையும், புகழ்பெற்ற மடத்தின் தலைவரையும் தெரிந்த முகங்களாய் நம்மால் அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது.

திரு.குப்புசாமியின் எழுத்து முழுவதுமே கலைத்தன்மையும், இலக்கிய நயமும் கொண்டவை. உவமைகள் அழகும் ரசனையும் மிக்கவை. வருணனைகள் எப்போதும் கவித்துவம் மிக்கவையாய் இருக்கும். இத்தொகுப்பிலும் எண்ணி எண்ணி ரசித்து
மகிழும்படியான வருணனைகளும் உவமைகளும் காணக் கிடக்கின்றன. உதாரணத் துக்கு:

'மருண்டு தாழ்ந்த அந்த வதன மாதுரியமும், சிறிதே இமைத்த அந்த இமைகளின் மகா சாந்தமும், மெதுவாய் மடிந்த அந்த அதரங்களின் புதுமையும்
அவன் நெஞ்சில் இதமாய் நுழைந்தன'. (பேசாத உறவு)

'அந்த நாட்களில் நான் எழுதிய கடிதங்களை எல்லாம் நினைத்துக்
கொண்டேன்....எனது சொற்கள் அவளைச் சூழ்ந்து ஒளி செய்யும் சுடர்கள் போன்றி ருந்தன. கவிதையின் லயமும், கனவின் வர்ணமும் கொண்டு அவள் காதலைப் புனைந்துரைத்தன...! மூடு பல்லக்குகள்போல் எனது மௌனமான கடிதங்க¨ளை
ஏந்திச் சென்று அவள்பால் முறையிட்டன'. (அசட்டுத்தனத்தின் ஆழங்கள்)

'இத்தொகுப்பு குப்புசாமியை மீள் அறிமுகம் செய்வதன் மூலம் இலக்கிய உலகிற்கு ஒரு புதிய கொடையை அளிக்கிறது. மேன்மையைக் கௌரவிப்போம்'
என்கிறார் திரு.ராஜாராம் பதிப்புரையில். ஆனால் இந்த வெளிப்பாடும் வெளிச்சமும்
திரு,குப்புசாமியை இலக்கியப் படைப்பின் மீட்சிக்குத் தூண்டுமா அல்லது 'மீள்வதில் என்ன இருக்கிறது?' என்று முன்போல மௌனமாகிவிடுவாரா என்பது அவருக்கு
நெருக்கமானவர்களின் கவலையாக இருக்கும். எனினும், இத்தொகுப்பு அவரிட
மிருந்து மேலும் பல அரிய படைப்புகளை வாசகர் எதிர்பார்க்கச் செய்வதாக உள்ளது என்பதை மட்டும் அவருக்குச் சொல்லியாக வேண்டும். O

நூல்: அறியாத முகங்கள்
ஆசிரியர்: பி.ச.குப்புசாமி
வெளியீடு: எனி இந்தியன் பதிப்பகம், சென்னை.

1 comment:

முனைவர் இரத்தின.புகழேந்தி said...

பி.ச.குப்புசாமி பற்றிய பதிவு ப்டித்தேன் நன்று .புகழேந்தி.