Sunday, March 22, 2009

நான் ஏன் எழுதுகிறேன்?

'நான் ஏன் எழுதுகிறேன்' என்று இதுவரை நான் சிந்தித்ததில்லை. இப்போதுதான் அதுபற்றிச் சிந்திக்கிறேன்.

சின்ன வயதில், ஐந்தாம் வகுப்புப் படிக்கும் போது நவராத்திரிக்கு வீடு வீடாய்ப் போய் பிள்ளைகள் கோலாட்டம் அடிப்பது எங்கள் பள்ளியின் வழக்கம். அதில் ஒரு கும்மிப் பாட்டு. 'சிதம்பரக் கும்மி' யில்
ஒரு நாலு வரி:
'நாலு புரத்திலும் கோபுரமாம் - அதில்
நடுவில் எங்கணும் மாளிகையாம்
காலோராயிரம் கொண்டொரு மாளிகை
கட்டியிருப்பதைப் பாருங்கடி' - என்று சிதம்பரம் கோயில் பற்றி வரும்.

அடிக்கடி பாடிப்பாடி இந்த வரிகள் என் நாவில் புரண்டு கொண்டேஇருக்கும். இதை ஒட்டி ஏனோ எங்கள் ஊருக்குப் பக்கத்தில் உள்ள புகழ்பெற்ற விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலின் ஐந்து கோபுரங்களைக் காட்டி பாடத் தோன்றியது.

'நாலு புரத்திலும் கோபுரமாம் - அதன்
நடுவிலும் ஒரு கோபுரமாம்'

......என்று பாடினேன். அதற்கு மேல் எழுதியதாக ஞாபகமில்லை. கும்மிப் பாட்டின் சந்தமும் நயமும் மனதுள் உறைந்து அப்படி எழுத ஆசை எழுந்ததால் பாடி இருக்கிறேன்.

எனது அடுத்த முயற்சியும் பாட்டுதான். எட்டாம் வகுப்போ என்னவோ படித்துக் கொண்டிருக்கிறேன். 'வாழ்க்கை' சினிமாப் படம் வந்து எல்லோர் நாவிலும் அப் படத்தின் புகழ் பெற்ற பாடலான 'எண்ணி எண்ணிப் பார்க்க மனம் இன்பங் கொண் டாடுதே......' ஒலித்த காலம். எங்களூரில் சித்திரை மாதத்தில் சிறுதொண்டர் நாடகம் எங்கள் ஊர்ப் பையன்களால் நடிக்கப்படும். அந்த நாடகத்தில் பாட என் தோழன் ஒருவன் நாடகத்தில் பபூன் வேஷம் கட்டுபவன் - நான் பாட்டுக் கட்டுவேன் என்கிற நம்பிக்கை உடையவன் - அதே மெட்டில் ஒரு பாட்டு எழுதித் தரச் சொன்னான். என் திறமையை அவன் மதித்ததால் எழுந்த ஆர்வத்தில் நானும்,

'எண்ணி எண்ணிப் பார்க்க மனம்
வெண்ணையா உருகுதே
என்னைக்குத்தான் கோடைகாலம்
போகுமிண்னு தோணுதே!

தண்ணித் தண்ணி யிண்ணு
தவியாத் தவிக்குதே
தாகத்துக்கு ஐஸ் போட்ட
ஆரஞ்சுண்ணு கேக்குதே!'
என்று எழுதிக் கொடுத்தேன்.

அந்தப் பாட்டுக்கு அபாரமான அப்ளாஸ். பத்தாம் வகுப்பு வரை எனக்கு வசனத்தில் எழுத வாய்ப்பு ஏதும் வந்ததில்லை. எழுதவும் தோன்றியதில்லை. அப்போது புதிதாக எம் பள்ள்¢க்கு வந்த தமிழாசிரியர் வித்துவான் சாம்பசிவரெட்டியார் பத்திரிகைகளில் கவிதைகள் கட்டுரைகள் எழுதிவருபவர் - பள்ளியில் 'கலைப்பயிர்' என்றொரு கையெழுத்துப் பத்திரிகை தொடங்கி எங்களைக் கதை, கட்டுரை, கவிதை எழுதத் தூண்டினார். அப்போதே நான் நிறையப் படிக்கத் தொடங்கி இருந்தேன். நிறைய நாவல்களும் கதைகளும் படித்திருந்தேன். கல்கியில் 'பொன்னியின் செல்வன்' முதன் முதலாகத் தொடராக வந்த சமயம். அதைப் படித்ததால் உண்டான தூண்டுதலால் நாமும் கதை எழுதிப் பார்க்கலாமே என்று ஆசை வந்தது. அப்போது தமிழாசிரியர் 'கலைப்பயிரு' க்குக்கதை எழுதச் சொன்னதால், நான் படித்த திண்ணைப் பள்ளிக் கூட ஆசிரியரை வைத்து 'எங்கள் வத்தியார்' என்று நடைச் சித்திரம் போன்ற ஒன்றை எழுதிக் கொடுத் தேன். அதை மிகவும் பாராட்டிய எங்கள் தமிழாசிரியர் 'கலைப்பயிர்'பத்திரிகையிலும் 'இந்த மாணவனிடம் எழுத்து திறைமை இருக்கிறது. இக்கதையைப் பத்திரிகைக்கு அனுப்பினால் பிரசுரமாகும்' என்றெழுதினார். எனக்குப் பரவசமாகி அவரிடமே எந்தப் பத்திரிகைக்கு எப்படி அனுப்புவது என்று கேட்க அவர் தான் எழுதிக்கொண்டிருந்த 'நாரண துரைக்கண்ணன்' ஆசிரியராக இருந்த 'ஆனந்தபோதினி'க்கு அனுப்ப வழிகாட்டினார். உடனே அவர் சொன்னபடி வெள்ளைத் தாளில் ஒரு பக்கம் மட்டுமே எழுதி தபாலில் அனுப்பி வைத்தேன். பள்ளிக்கூடத்துப் பையனின் கதையைப் போடுவார்களா என்றெல்லாம் சிந்திக்கத் தோன்றவில்லை. ஏதோ ஒரு நம்பிக்கை, ஆசிரியர் கொடுத்த தைரியம் அனுப்பி விட்டேன். பிறகு அதை மறந்து போனேன். ஆனால் இரண்டு மாதம் கழித்து அக்டோபர் 1950ல் அது 'ஆனந்தபோதினி'யில் பிரசுரமானதை ஆசிரியர் அழைத்துக் காட்டினார். 'குபீலெ'ன்ற ஒரு பரவசம் மயிர்க்காலில் எல்லாம் பரவி நானும் எழுத
லாம் என்ற நம்பிக்கை வந்து அதனால் எழுதத் தொடங்கினேன். அதற்குத் தூண்டுதலாய் இருந்த
தமிழாசிரியரும், மாணவன் என்று உதாசீனம் செய்யாது எழுத்தை மட்டுமே மதித்து வெளியிட்ட நாரண துரைக்கண்ணன் அவர்களுமே என்னை எழுதச் செய்தவர்கள்.

என் முதல் கதையே பிரசுரமானதாலும் தொடர்ந்து என் எழுத்துக்கு அங்கீகாரம் கிட்டியதாலுமே நான் எழுதுகிறேன். நான் வலிந்து கதைகள் எழுதுவதில்லை. என்னைச் சுற்றிலும் நான் பார்த்த, கேட்ட, என்னைப் பாதித்த நிகழ்வுகள் என்னை எழுதத் தூண்டுகின்றன. மாந்தர்களின் பெருமை சிறுமைகளை, வாழ்வின் சோகத்தை, அவலத்தை, எக்களிப்பை - கற்பனையை அதிகம் கலக்காமல், பார்த்தவாறே யதார்த்த வாழ்வைச் சித்தரிக்க விரும்புகிறேன். மனித நேயமும் வாழ்வில் நம்பிக்கையுமே என் கதைகளின் அடி நாதமாகும். மற்றபடி புதுமைப்பித்தன் சொன்னதைப்போல உலகை உத்தாரணம் செய்யும் நோக்கத்திலோ சீர்கெட்ட சமூகத்தைத் திருத்தி அமைக்க வேண்டும் என்ற ஆர்வத்திலோ நான் எழுதவில்லை.

என் முதல் கதை பிரசுரமாகாதிருந்தால் நான் தொடர்ந்து எழுதியிருக்க மாட்டேன். ஆரம்ப காலத்தில் நாரணதுரைக்கண்ணன் அவர்களும், எஸ்.எஸ்.மாரிசாமி அவர்களும் என் எழுத்தை அங்கீகரித்து அவர்களது ஆனந்தபோதினி, பிரசண்டவிகடன், இமையம், பேரிகை ஆகியவற்றில் தொடர்ந்து பிரசுரித்ததால் நம்பிக்கை வளர்ந்து பின்னர் வணிக இதழ்களிலும் இலக்கிய இதழ்களிலும் எழுதினேன். பல போட்டிப் பரிசுகளிலும் வென்றேன். ஏதும் ந்¢கழ்வுகளோ, அகத் தூண்டுதலோ இருந்தாலொழிய நான் எழுதுவதில்லை. அதனால், போட்டிகளுக்கோ வேண்டுகோள்களுக்கோ எழுத முடிவதில்லை.

முடிவாகச் சொல்வதானால், என் எழுத்துக்குப் பத்திரிகைகளில் இடம் கிடைப்பதாலும் என்னைச் சுற்றி நிகழ்பவை என்னைப் பாதித்து எழுதத் தூண்டுவதாலுமே எழுதுகிறேன். 0

5 comments:

Vassan said...

மேலும் எழுதுங்கள். படிக்கப் பிடித்துள்ளது. நன்றி.

விருத்தாசலம் அருகில் சாத்தமங்கலம் என்ற ஊரில் தந்தை வழி உறவுகள் உண்டு. நல்ல மனிதர்கள்.
தொடர்பு விட்டு போய்விட்டது.

Sri Srinivasan V said...

Sir
vanakkam.
Enjoyed reading.
Thanks and Regards,
anbudan,
Srinivasan.

Nathanjagk said...

இரா.முருகனின் அரசூர் வம்சம் விமர்சனம் படிக்கலாம் என்று ஆரம்பித்து.. இந்த இடுகைக்கு வந்து சேர்ந்தேன். மழை நின்ற மாலைப் பொழுதில் தனியாக கிராமத்துச் சாலையில் நடப்பது போல் உங்கள் எழுத்து. இயல்பும் எளிமையுமாய் ஆர்வமூட்டும் நடை. வாழ்த்துகள்!

நிலாமகள் said...

//யதார்த்த வாழ்வைச் சித்தரிக்க விரும்புகிறேன். மனித நேயமும் வாழ்வில் நம்பிக்கையுமே என் கதைகளின் அடி நாதமாகும். மற்றபடி புதுமைப்பித்தன் சொன்னதைப்போல உலகை உத்தாரணம் செய்யும் நோக்கத்திலோ சீர்கெட்ட சமூகத்தைத் திருத்தி அமைக்க வேண்டும் என்ற ஆர்வத்திலோ நான் எழுதவில்லை//என்ன ஒரு நேர்மை குறையாத சத்தியமான வார்த்தைகள்...! உங்களுக்கான இடத்தை நிலைநிறுத்தும் வல்லமை பெற்ற எழுத்துகள்... பிரார்த்திக்கிறோம் நலமும் வளமும் நிலைபெற்று வாழ்கவென...

நெய்வேலி பாரதிக்குமார் said...

தமிழின் முதல் சிறு பத்திரிக்கை ஆனந்த போதினி என சமிபத்தில்தான் அறிந்தேன் . உங்கள் முதல் படைப்பு அதில் வெளிவந்தது ஆனந்தமான விஷயம்தான் . மணிக்கொடிக்கு முன்பே வந்த சிறுபத்திரிகை ஆனந்த போதினி அந்த வகையில் நீங்கள் மணிக்கொடிக்கு முந்தைய தலைமுறை எழுத்தாளர் என்பதில் எங்களுக்கு பெருமை. நம் வட்டாரத்தில் சிற்றிதழில் எழுதிய முதல் எழுத்தாளரும் நீங்கள்தான் என்று கருதுகிறேன். நீங்கள் எழுத காரணமாக இருந்த ஆசிரியருக்கும், நாரண துரைகணணனுக்கும் நன்றி சொல்வது எங்கள் கடமையாகிறது