Saturday, May 09, 2009

இந்திரா பார்த்தசாரதியின்-'ஏசுவின் தோழர்கள்'

'கவிதைகள் பிடிக்கும்; கதைகள் பிடிக்கும்; என்றாலும், எல்லாவற்றையும்விட மனிதர்களை நையாண்டி செய்வது மிகவும் பிடிக்கும் மார்க் ட்வெய்னுக்கு. அவர் ஒரு முழுநேர நையாண்டிக்காரர். அரசியல்வாதி, எழுத்தாளர், சீர்திருத்தவாதி, வாத்தியார், அப்பா, அம்மா, பாதிரியார், பரலோகத்திலிருக்கும் பரமபிதா - எவரையும் விட்டுவைத்ததில்லை ட்வெய்ன். பிடித்து இழுத்து வந்து, முச்சந்தியில் நிறுத்தி, வேண்டியமட்டும்பரிகாசம் செய்துவிட்டு, கிழித்துத் தோரணம் கட்டிவிட்டுத்தான் மறுவேலை.' -என்று எழுதுகிறார் 'மருதன்'பிரபலஎழுத்தாளர்
'மார்க் ட்வெய்ன்' பற்றி.

நமது 'இந்திரா பார்த்தசாரதி' அவர்களும் அப்படித்தான். ஆனால் அவர் முழுநேர நகைச்சுவை எழுத்தாளர் அல்லர். அவரது படைப்புகளில் காணப்படும் உரையாடல்களில் எல்லாம் வரிக்குவரி கேலி, நையாண்டி என மென்னகை பூக்க வைப்பவர். அவரது பாத்திரங்களின் பேச்சுக்கள் அறிவுஜீவித்தனமானவை. எப்படி இவர்களால் இவ்வளவு சாமர்த்தியமாய்ப் பேச முடிகிறது என்று வியக்க வைப்பவை. ஆனால் அந்த அறிவுஜீவி பாத்திரங்கள் அனைவருமே இ.பா தானே! அதனால் வியப்பதற்கு ஏதுமில்லை. படிக்க எடுத்தால் முடிக்காமல் கீழே வைக்க முடியாத எழுத்து இ.பா அவர்களுடையது.

மருதன் மேலும் சொல்வார்: 'மனிதர்களைக் கண்டாலே ட்வெனுக்கு நகைப்பு வந்ததற்குக் காரணம் இதுதான் - 'போலியான கௌரவம், போலியான நாகரீகம், போலியான சடங்குகள் சம்பிரதாயங்கள் எல்லாவற்கும் புனித வட்டம்!' இ.பாவும் அப்படித்தான். அரசியல்வாதிகளின் போலித்தனத்தை, அவர்களின் அறியாமையை மக்களின் பேதைமையை முடிந்த இடங்களில் எல்லாம் சுருக்சுருக்கென்று குத்தாமல் விட்டதில்லை அவர். 'ஏசுவின் தோழர்கள்' நாவலிலும் அப்படித்தான். அரசியல்வாதிகளையும் அவருடன் சேர்ந்த மேல்மட்ட
வாசிகளையும் இரக்கமின்றி கேலி செய்வதைப் பார்க்கிறோம்.

இந்திரா பார்த்தசாரதி அவர்கள் போலந்து நாட்டில் வார்சா பல்கலைக் கழகத்தின் வருகைப் பேராசிரியராக 1981 முதல் 1989 வரை ஐந்தாண்டு காலம் பணியாற்றினார். அந்த ஐந்தாண்டுகளும் அந்த நாட்டின் பிரச்சினைக்குரிய காலகட்டம். போலந்து மக்கள் நிகழ்த்திய மக்கள் புரட்சியை நேரில் பார்க்கும் வாய்ப்பை எதிர்பாராது பெற்றவர். அப்போது அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் வேறு யாருக்கும் எளிதில் கிட்டியிராத அபூர்வ அனுபவங்கள். ருஷ்யாவின் பிடியில் சிக்கித் தவித்த மக்கள் - உடைக்கும், உணவுக்கும், அற்ப பற்பசைக்கும், மைல் கணக்கில் க்யூ வரிசையில் நின்று வாங்கிய பரிதாபம்! அத்தனையயும் இ.பா அவர்களின் படைப்பு மனம் பதிவுசெய்து வைத்திருந்து இந்தியா திரும்பியதும் அற்புதமான நாவலாக - போலந்தின் புரட்சிக் காலகட்ட வரலாற்றைச் சொல்லும் புதினமாக 'தினமணி கதிரி'ல் தொடராக வெளியிட்டார். பின்னர் நூலாக வெளிவந்ததின் செம்பதிப்பாக இப்போது கிழக்குப் பதிப்பகம் அந்நாவலைச் சிறப்பாக வெளியிடுள்ளது.

போலந்து நாட்டு மக்களின் பிரச்சினையாலும் அது எங்கும் எல்லா மக்களுக்குமான பிரச்சினைதானே என்பதால் நாவலை வாசிக்கும் நமக்கு அது அன்னியப் பிரச்சினையாகத் தோன்றாமல் நம்மூர்ப் பிரச்சினை போலத் தோன்றுவதற்கு ஆசிரியரின் அரிய படைப்புத் திறனே காரணம்எனலாம்.அனுபவங்களின் பதிவுதான் என்றாலும் ஒரு புதினத்துக்குக்கான செறிவுடன் ஒரு இந்திய - தமிழ்ப் பாத்திரத்தின் கலாச்சார வீழ்ச்சியை
உள்சரடாகக் கொண்டு நாவல் சுவைபடப் பின்னப்பட்டுள்ளது.


கும்பகோணத்துக்கு அருகில் உள்ள நாச்சியார்கோயிலின் வைதீகக் குடும்பத்தைச் சேர்ந்த ஏழை அர்ச்சகர் ஒருவரின் மகனான திருமலை நரசிம்மாச்சாரி தாத்தாச்சாரி என்பவர் வறுமையால் படிக்க வைக்கமறுக்கப்பட்டு, சகோதரியின் பிடிவாதத்தால் சென்னை சென்று படிக்கிறார். படிப்பு என்கிற புரட்சி அவரை வீட்டினின்றும் அந்நியப்படுத்துகிறது. அடுத்த புரட்சியாக அரசியலில் சேர்வதும், மூன்றாவது புரட்சியாய் உலக சமாதான மாநாட்டில் கலந்து கொள்ளப் போலந்து நாட்டுக்குச் செல்வதும், அங்கேயே ஒரு போலிஷ் பெண்ணை மணம் முடிப்பது நாலாவது புரட்சியுமாய் அவரது வாழ்க்கையே புரட்சி மயமாய் இருக்கிறது. புரட்சி எல்லாம் முடிவுற்று கொஞ்ச நாளில் மனைவியோடு இந்தியா திரும்பியபோது அவரது பெற்றோர்கள் இல்லை. சகோதரிகளுக்குத் திருமணம் செய்து கொடுத்து வீடும் போய்விடுகிறது. தில்லியில் வேலை கிடைக்க அங்கே இல்லறம் நடத்தியபோது ஒரு பயங்கரம் நிகழ்கிறது. அவரது மனைவியைக் கடத்திச் சென்று பலாத் காரமாய்க் கற்பழித்து விடுகிறார்கள். அதனால் அவள் மன நோயாளியாகிவிடவே அதற்கு மேலும் இந்தியாவில் இருக்க விரும்பாமல் மனைவியுடன் போலந்துக்குக்கே திரும்பி விடுகிறார். அப்போது போலந்தில் இருந்த அவர்களது பெண் ஆஷா தன் அம்மா மனநோயாளி ஆனதற்குக் காரணமான இந்தியாவை வெறுக்கிறாள். அவரது மனைவி சாகும்போது, அவர் திரும்ப இந்தியா செல்லக்கூடாது என்று கேட்டுக்கொண்டபடி, அது முதல் தனது பண்பாட்டு வேர்களை அறவே துண்டிக்க முயன்று, அடைந்த தோல்வியில் கொஞ்சம் கொஞ்ச
மாய்க் கரைந்து கொண்டிருக்கிறார். மகளுக்கும் அவருக்கும் இடையே மௌனச் சுவர். அவள் தன் அப்பாவிடம் இந்தியாவைப் பற்றி எதுவும் விவாதிப்பதில்லை. ஆனால் இந்தியா பற்றி நிறைய நூல்க¨ளைப் படித்திருப்பதுடன் அவரிடமிருந்து கற்ற சமஸ்கிருதத்தில் ஈடுபாடும் அப்பாவின் தாய்மொழியான தமிழை அறியாதவளாயும் இருக்கிறாள். பின்னர் ஒரு மன நிலையில் இந்தியாவிற்குச் சென்றுவர அவள் விருப்பம் தெரிவிக்கையில் அவர் உடன் செல்ல விரும்பாமல் அவளை மட்டும் செல்ல அனுமதிக்கிறார்.

இந்தியாவில் அப்பாவின் வேர்களைத் தேடி ஆஷா உள்ளூர்ப் பெண் ஒருத்தியின் உதவியுடன் நாச்சியார் கோயில் மற்றும் கும்பகோணம் என அலைந்து தன் மூத்த அத்தையைச் சந்திக்கிறாள். அந்த அத்தை அவளது அப்பாவின் உயர்வுக்குத் தூண்டுதலாய் இருந்தவள் - தன் தம்பியின் இவ்வளவு நாளைய உதாசீனத்தைப் பொருட்படுத்தாது அவரது மகள் தேடி வந்ததை எண்ணி உருகிப் போய்த் தம்பியைப் பற்றி பாசத்துடன்
விசாரிக்கிறாள். ஆனால் வறுமையால் உடலை விற்றுத் தாயைக் காப்பாற்றி வரும் அத்தையின் மகள் - பொறுப் பற்ற, நன்றியில்லாத மாமாவின் புறக்கணிப்பைப் பொறுக்க முடியாதவளாய் அவளிடம் பேசவோ அவள் வந்திருப் பதை ஏற்கவோ விரும்பாமல் உதறுகிறாள். அதனால் அத்தை அவளை அவள் தங்கியிருக்கும் விடுதிக்குப்போய் சந்திப்பதுடன் தன்னுடன் போலந்துக்கு வர ஆஷா அழைப்பதை மறுத்து தன் குடும்ப நினைவாக குடும்பத்து குங்குமச் சிமிழ் ஒன்றை அவளுக்குத் தருகிறாள். கடமையிலிருந்து தப்பியோடிய தன் அப்பாவின் கொடுமை
யான புறக்கணிப்பைச் சிறிதும் எண்ணாது தன்னிடம் அடையாளச் சிக்கல் சிறிதுமின்றி பாசம் காட்டும் அத்தையின் பண்பும் கலாச்சாரப் பெருமிதமும் கண்டு ஆஷா மிகவும் நெகிழ்ந்து போகிறாள்.

போலந்து திரும்பியதும் தன் தந்தையிடம் அதுவரை இல்லாத நெருக்கத்துடன் அணுகி, அத்தையைச் சந்தித்தையும் அவள் குங்கும்சிமிழ் கொடுத்ததையும் அவள் அவரை மறக்காது பாசத்தோடு விசாரித்ததையும் சொல்லி அவரைக் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்குகிறாள். அவளது உணர்வையறிந்து அதனால் அதிர்ச்ச்¢ அடைந்த அவர் சீக்கிரமே உயிர் விடுகிறார்.

போலந்து சென்ற இ.பா அவர்கள் இந்தக் காட்சிகளினூடே தன்னையும் பாத்திரமாக்கி நாவலுக்கு நம்பகத் தன்மையை அளித்திருக்கிறார்.

நாவலில் கதையைவிட சுவாரஸ்யம் தருவது இ.பாவின் பாத்திரங்களின் அறிமுகம், அவர்களது உரையாடல்கள் - இவற்றினூடே செய்யும் அரசியல் மற்றும் சமூக விமர்சனங்கள். ருஷ்யா, போலந்து, இந்தியா, தமிழ் நாடு, இந்தோ - போலிஷ் உறவு, மற்றும் கம்யூனிசம் சோஷலிசம் பற்றியெல்லாம் அநாயசாமாய்ச் செய்யும் விமர்சனங்கள் எள்ளலும், நையாண்டியும், அங்கதமும், நகைச்சுவையும், தெறிப்பும் மிக்கனவாய், வாசிப்பு நம்மை மகிழ்வூட்டுகிறது.

உடனடி ரசனைக்காக சில எடுத்துக் காட்டுக்கள்:

போலந்து பற்றி ஒரு அறிமுகம்: 'இந்த நாட்டைப் பாருங்கள். இங்கு புதிதாகக் கட்டப்பட்ட 'பழைய' நகரில் வார்சாமக்கள் குடியேறி இருக்கிறார்கள். இங்கு மக்களின் சராசரி வருமானமும், இரண்டு ஜோடி ஷ¥க்களின் விலையும் ஒன்றுதான். ஆனால் ஏழைமை இல்லை. சர்ச் திருவிழாக்களை தேசீய நாட்களாகக் கொண்டாடும் கம்யூனிஸ்ட் நாடு. சமூக அமைப்பில் எந்தத் துறையிலும் ஓர் ஒழுங்கு முறை இல்லாவிட்டாலும் டிரெய்ன்கள் குறித்த நேரத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றன. ஒரு பக்கம் அரசாங்கத்தின் கடுமையான தணிக்கை உத்தரவுகள். இன்னொரு பக்கம் அரசாங்கத்தை ஏளனம் செய்யும் கிண்டல் இலக்கியங்கள், நாடகங்கள். இங்கு மக்கள் டாலர்களை வாங்கலாம், விற்கலாம். ஆனால் வைத்துக் கொள்ளக்
கூடாது. இங்குள்ள ஹோட்டல்களில் 'வெயிட்டர்களோடு ஆங்கிலத்திலோ அல்லது ஜெர்மனியிலோ பேசலாம்; சமையற்காரரிடம் பிரெஞ்சில். ஆனால் அமைச்சரோடு ஒரு மொழிபெயர்ப்பாளரை வைத்துக்கொண்டுதான் பேச வேண்டும். சாதாரண பகுத்தறிவை வைத்துக் கொண்டு புரிந்து கொள்ள முடியாத நாடு இது!'

ருஷ்யா பற்றி: 'அலாரம் அடித்தது. எழுந்து உட்கார்ந்தேன். ரஷ்ய கெடிகாரம் கண்டிப்பு நிறைந்த குரலில் எழுப்பும்போது விழிப்பு வராமல் போகாது.'

'ஐந்து நிமிஷங்களுக்குப் பிறகு அவள் கவுண்டருக்கு அருகே இருந்த சுழற் கதவைத்தாண்டி வந்து விட்டாள். மாஸ்கோவில் இவ்வளவு சீக்கிரம் வெளியே வந்திருக்க முடியாது. பாஸ்போர்ட் புகைப்படத்தையும் நேரில் காணும் முகத்தையும் குறைந்தது பதினைந்து நிமிஷங்களாவது உற்றுப் பர்த்துக் கொண்டிருப்பார்கள்.'

போலந்து சோஷலிசம் பற்றி: 'இதுதான் சோஷலிசம். எல்லாவறிற்கும் பற்றாக்குறை, குறிப்பாக வீடுகளுக்கு. கோர்ட்டில் விவாகரத்தை அனுமதிக்கும்போது, கணவன் வீடு கிடைக்கும்வரை மனைவியுடன் இருக்கலாமென்று சொல்லி விட்டார்கள்.'

'அமெரிக்காவின் ஆதரவைப் பெற ஜனநாயகம்; சோவியத் யூனியனின் நட்புறவுக்காக சோஷலிசம். இரண்டு கருத்துக்களின் குறைகளையும் எடுத்துக் காட்டும் வகையில், பட்டினி கிடக்கும் பெரும்பான்மையான மக்கள். அவர்களின் பிரதிநிதிகளாகத் தங்களைச் சொல்லிக் கொண்டு அவர்களைச் சுரண்டிப் பிழைக்கும் ஆளும்கட்சித் தலைவர்கள்... சோஷலிச ஜனநாயகம் என்ன சாதிக்கவில்லை?'

இந்தியா பற்றி: 'இந்தியக் கிராமங்களில் தொன்றுதொட்டு வரும் பண்பாட்டுப் பிரக்ஞையையே கல்வி அறிவாகக் கொண்ட வயதான மக்களுடைய வாழ்க்கையைப் பற்றிய நம்பிக்கை எந்த சக்தியாலும் அழிக்க முடியாதது.'

'கிராமீயப் பண்பாடு இந்தியா முழுவதும் ஒன்றுதான். இதில் சந்தேகமில்லை. சமயமும் புராணக்கதைகளும் இந்த ஒற்றுமையை சரித்திர ரீதியாக ஏற்படுத்தித் தந்திருக்கின்றன. மொழி வேற்றுமை என்பது இதைப் பொறுத்தவரையில் சம்மந்தமில்லாத விஷயம். ஆனால், அரசியல் பிரக்ஞையின் ஆளுகைக்குட்பட்ட நகர்ப்புற நாகரீகம் இந்தியாவைப் பல குட்டி நாடுகளாகக் காட்டுகிறது.'

'அரசியல் என்பது இந்தியர்களிடையே பரவி இருக்கும் ஒரு புதிய மதம். ஒரு புதிய மதத்தைத் தழுவுகிறவர்களுக்கு இயற்கையாக இருக்கக்கூடிய ஆவேசமும் வெறியும் இந்தியாவில் எப்படித் தலைவிரித்தாடு கின்றன? ஒரு காலத்தில் பண்பாட்டால் ஒன்றுபட்டிருந்த மக்கள் இன்று அரசியலால் பிளவுபட்டுக் கிடக்கிறார் கள்.'

'சொல்லுக்கும் செயலுக்கும் இடையே உள்ள இடைவெளி இந்தியாவிலிருப்பதுபோல் வேறெங்குமே இல்லை என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.'

'இந்தியாவில் இருப்பதுபோல் சமுதாயம் இல்லாவிட்டால் 'அன்னை தெரஸா'க்கள் உருவாக மாட்டார் கள். இது மனித நாகரீகத்துக்கு நஷ்டம்'.

'இந்திய மனப்பான்மை, எதையும் சாசுவதமாக இருப்பதையே விரும்புகிறது. ஆயுள்முழுதும் உழைக்கும் கெடிகாரம், பேனா, டைப்ரைட்டர், ·பிரிட்ஜ், கார், ஏன் வாழ்க்கை முழுவதையும் தாக்குப் பிடிக்க்கூடிய திருமணங்கள்!....' இதற்கு என்ன காரணம்? சீதோஷ்ணநிலை என்றுதான் சொல்ல வெண்டும். மாறுதல் அதிக மில்லாத சீதோஷ்ணநிலை. மேல்நாடுகளில் அப்படி இல்லை.'

'இந்தியாவில் தேசீய உணர்வு என்பது அறவே இல்லை. 'இது என்னுடையது' என்ற உணர்வு மேலோங்கியுள்ளதேயன்றி, 'இது நம்முடையது' என்ற உணர்வு நாட்டில் இல்லை'.

'உலகத்திலேயே மிகவும் மலிவவானது இந்திய ரத்தந்தான் எனக்குப் படுகிறது.'

தமிழர்கள் பற்றி: 'தமிழர்கள் எங்கு சென்றாலும் சரி - தில்லியிலோ, பாம்பேயிலோ, நியூயார்க்கிலோ,பாரிஸிலோ - அங்கெல்லாம் ஒரு குட்டித் தமிழ்நாட்டுச் சூழ்நிலையை உருவாக்க முயல்கிறார்கள். இந்தவிதத்தில், அவர்களுக்கும் யூதர்களுக்கும் எந்த வித்தியாசமுமில்லை'.

'தமிழ்நாட்டில் அரசியலே சமயமாகிவிட்டது. அரசியல் தலைவர், மதகுரு மாதிரி தொண்டர்கள் பக்தகோடிகள்.'

போலிஷ் - இந்தியர் ஒப்புமை: 'போலிஷ்காரர்களுக்கும் இந்தியர்களுக்கும் ஒரு விதத்தில் நல்ல ஒற்றுமை. கெடிகாரத்தைத் துச்சமாக மதித்தல்.'

'போலந்தில் காணும் ஒருமுரண்பாடு, புகை வண்டிகள் நேரத்துக்கு வருவதுதான். இதற்கு என்ன காரணம் என்று போலிஷ்காரர்களாலேயே சொல்ல முடியவில்லை. இந்தியாவில் இத்தகைய முரண்பாடுகளேஇல்லை. எங்கள் நாட்டில் காலத்துக்கு மதிப்பில்லை என்பது எந்தத் துறையிலும் தெரியும். நேரம் தவறுவது,
வாக்குத் தவறுவது என்பவை எங்கள் தேசீயப் பண்பாடு.'


இவையல்லாமல் ஆங்காங்கே பாசுரங்களும் திவ்யப் பிரபந்தமும் இதமாய் விரவி ஆசிரியரின் வைணவ இலக்கிய ஈடுபாட்டினையும் தெரிவிக்கிறது.

- மேலே காட்டியவை மாதிரிகள்தாம்! 'இ.பா'வின் அற்புத மொழியாற்றலையும் சொல்லாட்சியையும்,
சுகமான நடைச்சிறப்பையும் முழுமையாய் அனுபவிக்க நாவலை முழுதுமாய்ப் படிப்பதுதான் வழி! ஆனால் அலுப்பில்லாத வாசிப்பும், ரசனையும் உறுதி!

முடிக்குமுன் கதைநாயகி ஆஷா, இந்தியாவுக்குத் திரும்பிப்போகு முன்பாக நமது பேராசிரியருக்கு எழுதியுள்ள கடிதத்தின் வரிகளை வாசகர்களுக்குக் காட்டி முடிப்பது நாவலின் தலைப்புக்கு விளக்கமாக அமையும் என் நம்புகிறேன்:

'நீங்கள் போலிஷ் மக்களை ஒரு சமயம் 'ஏசுவின் தோழர்கள்' என்று குறிப்பிட்டது என் நினவுக்கு
வருகிறது. வரலாற்று நிர்பந்தத்தினால் எற்பட்ட இப்பிணைப்பும் - ஏசு, மார்க்ஸ் ஆகிய இருவருக்குமிடையே எங்கள் நாட்டில் ஏற்பட்ட பிணைப்பைக் கூறுகிறேன் - தவிர்க்க முடியாது என்றுதான் எனக்கு இப்போது
தோன்றுகிறது. மனிதாபிமான அடிப்படையை வைத்துக்கொண்டு பார்க்கப்போனால் ஏசுவுக்கும், மார்க்ஸ¤க்கும் என்ன வேறுபாடு இருக்கிறது? மார்க்ஸ் எதிர்பார்த்ததுபோல் தொழிலாளர் புரட்சி இங்கிலாந்தில் உருவாகி இருந்தால் மார்க்ஸிஸம், புதிய சவால்களை ஏற்று, பரிணாம நிலையில், புதிய பரிமாணங்களைப் பெற்றிருக் கூடும். அவ்வாறு ஏற்பட்டிருந்தால், இன்றைய உலகின் வரலாறே வேறு மாதிரி இருந்திருக்கும். அவ்வாறு
நிகழவில்லை என்பதுதான், நிகழும் சம்பவங்களுக்கிடையே உள்ள பிணைப்பின் தவிர்க்க முடியாத உண்மை.

நாங்கள் ஏசுவின் இரண்டாவது வருகைக்காகக் காத்திருக்கிறோம். சிலுவை ஏந்திய கையில் அரிவாளும்
கத்தியும் இருக்கக்கூடும்.' 0



நூல் : ஏசுவின் தோழர்கள்.
ஆசிரியர் : இந்திரா பார்த்தசாரதி.
வெளியீடு : கிழக்கு பதிப்ப்ககம், சென்னை.

1 comment:

Chithan Prasad said...

வணக்கம்
இ பா - வே.சபாநாயகம் இணைந்தால் வாசிப்பவர்களுக்கு பாற்கடல் அமிர்தம் தான் - சித்தன்.
பொறாமையாக உள்ளது. யுகமாயினி மட்டும் நாளேடாக இருந்தால் உங்கள் பதிவு தினமும் இடம் பெறும்.
சித்தன்