Monday, January 03, 2011

இவர்களது எழுத்துமுறை - 22.நாஞ்சில்நாடன்

1. சிறுகதையின் இலக்கணம், அழகு, சீர்மை, கலைவெளிப்பாடு, சமூகஅக்கறை,
தொனி...எத்தனை சொற்கள் இல்லை தமிழில். எல்லாம் காலத்துக்குக் காலம்,
கோணத்துக்குக் கோணம், இடத்துக்கு இடம் மாறும் தன்மைத்தன. மாறாத சில
உண்டு. மனிதநேயம், சொல்வதில் நேர்மை....நான் வரித்துக் கொண்ட
இலக்கணங்கள் அவை. அதில் சோர்வில்லை தளர்வில்லை இன்றும் எனக்கு.

2. கதைகளில் நான் இன்னும் வாழ்வது புலனாகிறது. மனம் புதிய படைப்பு
வேகம் கொள்கிறது. தமிழ்ச் சிறுகதை இலக்கியம் எனும் தளகட தொடர்
ஓட்டத்தில் என்னாலும் சிறிது தூரம் ஓட முடிந்திருக்கிறது என்பது ஆசுவாசம்
தருவதாக இருக்கிறது. கோப்பையை யார் முத்தமிடுகிறார்கள் என்பதில்லை
என் ஆர்வம். ஓட்டம் தொடர்ந்து கொண்டிருகிறது என்பதிலும் ஜீவன்
வறண்டு போகவில்லை என்பதிலும் எனக்கு சமாதானம் உண்டு.

3. எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை
அல்ல; ஆத்மசோதனையோ சத்யசோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும்
முயற்சி அல்ல; பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையைப்
புரிந்து கொள்ளும் முயற்சி; என் சுயத்தைத் தேடும் முயற்சி!

4. எனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால்
அவை வாசிக்கவும், பரிசீலிக்கவும், விவாதிக்கவும் படவேண்டும் என்பது
என் எதிர் பார்ப்பு.

5. பிறந்து வளர்ந்த இடம் பற்றி, என்னுடைய சூழல் பற்றி, என்னுடைய
நேரடி அனுபவங்கள் பற்றி எனக்கு நிறைய சொல்வதற்கு இருந்தது. இதை
ஒரு பகிர்தல் என்று வைத்துக் கொள்ளலாம். இந்தப் பகிர்தலுக்கு
என்னுடைய சிறுகதைகளையும், நாவல்களையும் பயன்படுத்திக் கொண்டேன்.
இப்படித்தான் தொடங்கினேன். பின்னால் எனக்கென்று ஒரு பார்வை
ஏற்பட்டது. இது சிறு வயதிலேயே கூட இருந்திருக்கலாம். ஆனால் அது
துலக்கம் பெறாமல் இருந்தது. பிறகு ஒரு துலக்கம் கிடைத்த பிற்பாடு
மேலும் தீவிரமாய் என்னால் எழுத முடிந்தது.

6. இந்த வடிவங்கள் உக்திகள் பற்றி விஷயங்களை எல்லாம் கற்றுத்
தேர்ந்துகொண்டு நான் எழுத வரவில்லை. எனக்கெது எளிதாக வாய்த்தோ,
எனக்கெது எளிதாக எழுத வந்ததோ அதில் தான் நான் தொடர்ந்து
சென்றேன். இந்த வடிவச் சிக்கல்களுக்குள்ளாக நான் எப்போதும்
திகைத்து நின்றதில்லை. 0

No comments: