Tuesday, January 18, 2011

இவர்களது எழுத்துமுறை - 23.நகுலன்

1. 'ஏன் எழுதுகிறேன்?' என்றால் 'என்னால் எழுதாமல் இருக்க முடியாது
என்பதால் எழுதுகிறேன்'.

2. சிருஷ்டி நியதியில் எனக்கு நான் யார் என்று தெரியாது என்பதனால்,
என் உருவம் எனக்குப் புலப்பட, என் உலகம் எது என்று கண்டுபிடிக்க
நான் எழுத்தை நாடுகிறேன்; ஏனென்றால் அது என் வழி. ஆனால் என்னை
நான் தெரிந்துகொள்ள ஏதாவது ஒரு பிரதிபலிப்புத்தான் பயன்படுகிறது;
அந்தப் பிரதிபலிப்பு, பிரதிபலிப்பு என்பதாலேயே, என் நிதர்சனக்
காட்சியைத் தருவதில்லை; ஆனால் இந்த ஐயமும் நிழலாடுவதால்தான் மற்ற
பிரதிபலிப்புகளைவிட இந்தப் பிரதிபலிப்பு ஒரளவு எனக்கு நிதானத்தைத்
தருகிறது.

3. எப்படி எழுதுகிறேன்? என் அனுபவத்தை வைத்துக் கொண்டு பதில்
சொல்ல முயற்சிக்கிறேன். கொஞ்ச வருஷங்களாக எங்கும் இடம் கிடைக்காத
எழுத்தாளனாக இருந்த நிலை மாறி, புகுந்த இடமும் சில காரணங்களால்
புளித்துவிட்ட நிலை வந்ததும், ஏன் எழுதுகிறேன் என்பதைத் தெரிவித்திருந்த
நான், இப்போது எப்படி எழுதுகிறேன் என்பதையும் அறிந்து கொண்டி
ருக்கிறேன். குறிப்பிட்ட கட்டங்களில் என் உள்ளத்தில் ஒரு கட்டுக்கடங்காத
பரபரப்பு ஏற்படுகிறது. சமயம் எப்படியும் இருக்கலாம். அதிகாலை, நடுநிசி,
பகல் வேளை, மாலை, இந்தப் பரபரப்பை கழித்துத் தீர்க்க நான் எழுத
ஆரம்பிக்கிறேன். எழுதுகையில் சிறுகதை, சிறுகவிதையாக இருந்தால் ஒரே
இருப்பில் இருந்து எழுதிவிடுவது என் வழக்கம். இந்தக் கட்டங்களில்கூட
சிருஷ்டிவேதனையின் அதிதீவிரத் துடிப்பைத் தீர்க்க நடுநடுவே கட்டிலில்
சென்று நான் படுத்துக்கொள்வதும் உண்டு! பல ஆசிரியர்கள் கூறியபடி,
இந்த முதல் கட்டத்தில் என்னால் என் படைப்பை விமர்சனாக மாறி நின்று
பார்க்க முடிவதில்லை. நான் செய்ததை சீர்திருத்தச் சில சமயங்களில்
ஒரு கால இடை இடையீடு வேண்டிஇருக்கிறது. ஆங்கிலக் கவிஞன்
கூறியபடி சிருஷ்டி விஷயத்தில் அனுபவத்திற்கும் அதைக் கலையாக
மாற்றும் கட்டத்திற்கும் ஏற்படும் கால இடையீடு இயற்கையாக அமைவது;
இது செயற்கையாக நான் அமைத்துக் கொள்வது.

4. கதைகளுக்குக் கரு எவ்வாறு அமைகிறது? ராமசாமி எழுதிய மாதிரி
அனுபவம் கண்ணாடிச் சில்; எழுதுவனின் திறமைதான் அதற்கு ரசப்பூச்சுப்
பாய்ச்சுகிறது. நான் எழுதத் தேர்ந்தெடுக்கும் அனுபவம் என் மன
வார்ப்பைக் காட்டுகிறது. இந்த அனுபவத் துணுக்கு அடிமனத்திலிருந்து
சிருஷ்டிப் பரப்பில் வெடித்துக் கொண்டு வருகிறது. இதற்கு ஒரு பூர்ணத்
துவத்தைக் கொடுப்பது எழுதுபவனின் படிப்பு, மனோவிலாசம் அனுபவம்
மேலும் பலவற்றினால் உருவாக்கப்பட்ட அடிமனத்தின் செழிப்புதான்.

5. ஒரு நோட்புக்கில் என் கலை ஈடுபாட்டை, எனக்குள்ள கலைத்திறனை
சோதனை செய்ய, வேறு யாருக்குமின்றி, எனக்காகவே ஒரு சில
சிறுகதைகளை எழுதிக் கொண்டிருக்கிறேன். இது அவசியமா என்று
கேட்டால், இன்று தமிழ் இலக்கிய உலகம் இருக்கும் நிலையில் இதற்குமேல்
என்னால் எதுவும் செய்ய என்று தோன்றவில்லை. இவைகளைத்
திரட்டிப் பார்க்கையில் எழுத்தாளன் கற்பனை எவ்வாறு ஒரு குப்பைக்கூடை
என்பதும், இந்தக் குப்பைக கூளத்தில்தான் எவ்வாறு ஒன்றிரண்டு
தானியங்கள் மிஞ்சுகின்றன என்பதையும் சொல்ல வேண்டும். 0

No comments: