Monday, January 07, 2013

நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து....11. கல்கி - விந்தனின் 'முல்லைக்கொடியாள்'

விந்தன் கதைகளைப் படிப்பதென்றால் எனக்கு
எப்போதும் மனதிலே பயம் உண்டாகும். 
படித்தால்,மனதில் என்னென்ன விதமான
சங்கடங்கள்உருவாகுமோ. எப்படிப்பட்ட  
வேதனைகளுக்குஆளாக நேருமோ 
என்ற பயம்!

ஒரு காலத்தில் தமிழ் நாட்டில் சிறிய கதைகளும்

பெரிய கதைகளும் பெரும்பாலும் ஒரு 
சாதியாரைப்பற்றியே வந்து கொண்டிருந்தன. 
எழுதுகிறவர்களும் படிக்கிறவர்களும் 
பிராமணர்களாக இருந்தபடியால் அந்தச் 
சாதியாரைப் பற்றியே கதைகள்  
எழுதப்பட்டன.அந்தக் கதைகளில் 
கையாளப்பட்ட தமிழ் நடை, பிராமணர்கள்
குடும்பங்களில் வழங்கும் தமிழாகவே இருந்தது.

மற்ற சாதிக்காரர்கள் அதிகமானபோது

பிராமணக் கதை, பிராமணத் தமிழ் 
ஆகியவற்றைக் குறித்து வாசகர்களிடையே 
புகார்கள் எழுந்தன.

இதன்பேரில், மற்ற சாதியாரை பற்றிய கதைகள்

பல வரத் தொடங்கின. பிராமண எழுத்தாளர்கள்
கஷ்டப்பட்டு வேறு சாதியாரைப் பற்றிக் கதைகள்
எழுதும்போது அவர்கள் வர்ணிக்கும் நடை உடை
பாவனைகள் அவ்வளவு சரியாயிருப்பதில்லை

மிகச்சிரமம் எடுத்துகொண்டு எழுதினாலும்
சில சமயம் 'ராபனா என்று குட்டை
உடைக்கும்படியான தவறுகள் நேர்ந்துவிடும்.
இன்னொரு அபாயமும் அதில்
ஏற்படுவதாயிற்று.

கதை என்றால், அதில் நல்ல பாத்திரங்களும்
வருவார்கள்; துஷ்டப் பாத்திரங்களும் வருவார்கள்.
பிராமணர்களைப் பற்றி யார் என்ன எழுதினாலும்

அதைப் பற்றிச் சாதாரணமாக ஆட்சேபம்
எழுவதில்லை.அவர்களை என்ன பாடுபடுத்தி
எப்படி வதைத்தாலும் கேள்வி முறையிராது.
ஒரு பிராமண கதாபாத்திரத்தைத் தலை
மொட்டையடித்துக் கழுதை மேலேற்றி வைத்து
ஊர்வலம் விட்டால், கதை படிப்பவர்களில் சிலர்
அருவருப்படைவார்கள்; சிலர் சிரிப்பார்கள். 

ஆனால் யாரும் சண்டைக்கு வரமாட்டார்கள்.

ஆனால் ஓரு செங்குந்தரையோ, ஒரு வன்னிய
குலத்தவரையோ, ஒரு அரிசன சகோதரரையோ

கதையில் பொல்லாதவனாகச் செய்திருந்தாலும்
வந்தது மோசம்; அந்தக் குலத்தைச் சேர்ந்தவர்கள்
கதையைப் படிக்க நேர்ந்துவிட்டால் ஆசிரியரோடு
துவந்த யுத்தம் செய்ய வந்துவிடுவார்கள்.

இதன் காரணமாக, மற்ற சாதிகளைச் சேர்ந்த
ழுத்தாளர்கள்கூடத் தத்தம் சமூகக் குடும்ப
வாழ்க்கைகளைப் பற்றி எழுதத் தயங்கிப்

பிராமணத் தமிழில் பிராமணக் குடும்பங்களைப்
பற்றின கதைகளை எழுதினார்கள்!

அதெல்லாம் ஒரு காலம். அந்தக் காலம் போய்
தமிழ்நாட்டு இலக்கிய உலகத்தில் சாதிப்

பிரச்சினை ஒருவாறு தொலைந்து. எந்தச்
சாதியாரைப் பற்றியும் பயமில்லாமல் கதை
எழுதலாம் என்ற நிலைமை ஏற்பட்டது. இந்த
சமயத்தில் நவயுக மறுமலர்ச்சி எழுத்தாளர்கள்
தோன்றினார்கள். ருஷ்யக் கதைகளையும்
மற்ற மேனாட்டுக் கதைகளையும் படித்தார்கள்.

அந்தக் கதைகளைப் போல் இந்த நாட்டு ஏழை
எளிய மனிதர்களையும் உழைப்பாளி

மக்களையும் பற்றிக் கதை எழுதத்
தொடங்கினார்கள்.

மிராசுதார்களையும்,தாசில்தார்களையும்,
ஐ.சி.எஸ்.காரர்களையும் வக்கீல்மார்களையும்
கைவிட்டு விட்டு,ஏழைக் குடியானவர்களையும்,
ஆலைத் தொழிலாளர்களையும், ரிக் ஷா

வண்டிக்காரனையும்,சுமை கூலிக்காரனையும்
பற்றிக் கதை எழுதத் தொடங்கினார்கள்.

ஆனால் எவ்வளவுதான் அனுதாபத்துடனும்

இலக்கியப் பண்புடனும் எழுதினாலும் அந்தக்
கதைகள்,கதை என்ற முறையில் 
நன்றாயிருக்குமே தவிர,அவற்றில் 
உண்மை ஒளி தோன்றுவதில்லை.

பாடுபட்டு அறியாதவன் பாட்டாளியின் 

துயரத்தைப் பற்றியும், சேற்றில் இறங்கி 
அறியாதவன் குடியானவனுடைய கஷ்டத்தைப் 
பற்றியும் என்னதான் கண்ணீரில் பேனாவைத்
தோய்த்துக்கொண்டு எழுதினாலும், அந்தக்
கதைகளில் மற்ற எல்லாச் சிறுகதை
இலட்சியங்களும் இருக்கலாம்;உள்ளத்தை
ஊடுருவித் தைக்கும் படியான இதயம் ஒன்றிய
ஈடுபாடு இருப்பதில்லை.

அப்படிப்பட்ட உண்மை ஒளிவீசும் சிறுகதைகளை
எழுதுவதற்கு ஏழை எளியவர்களிடையேயிருந்தும்
உழைப்பாளி மக்களிடையே யிருந்தும் 

ஆசிரியர்கள் தோன்ற வேண்டும்;  
அவர்களுடைய எழுத்தில் இலக்கியப் பண்பும் 
பொருந்தியிருக்க வேண்டும்.

மேற்கூறிய இலட்சணங்கள் பொருந்திய கதை
ஆசிரியர்களில ஒருவர் விந்தன். உழைப்பாளி
மக்களிடையே பிறந்து வளர்ந்து உழைத்துப்
பண்பட்டவர். ஏழை எளியவர்கள், தொழிலாளிகள்,
பாட்டாளிகளின் சுக துக்கங்களை இதயம் ஒன்றி
அநுபவித்து உணரும் ஆற்றல் பெற்றவர்.

மனிதனுக்கு மனிதன் செய்யும் அநீதியையும்
கொடுமையையும் காட்டும்போது, “விந்தனுடைய
தமிழ் நடையின் சக்தி உச்சநிலை அடைகிறது.

விந்தனுடைய கதைகளைத் தமிழ் மக்கள்

ஆர்வத்துடன் வரவேற்றுப் படித்து மேலும் 
மேலும்கோபமும் ஆத்திரமும் அடைவார்கள் 
என்றும்அதன் பலனாக மூகத்திலுள்ள 
அநீதிகளையும்கொடுமைகளையும் ஒழிக்க 
ஊக்கங்கொள்வார்கள் என்றும் நம்புகிறேன்.

 
- ரா. கிருஷ்ணமூர்த்தி (கல்கி)

No comments: