Monday, January 21, 2013

'நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து..........13 கி.ராஜநாராயணன்- ‘கரிசல் காட்டுக் கடுதாசி’



                ரு கலந்துரையாடலின்போது ஒருத்தர் என்னிடம் கேட்டார்., “உங்க புத்தகங்களின் தலைப்புகள் ‘க எழுத்து வரிசையைக் கொண்டிருக்கிறதே உங்களுக்கு அப்படி ஒரு ‘சென்டிமென்ட் உண்டா? என்று!

     பெயர்கள் சில வேளைகளில் இப்படித் தானாக வந்து அமைந்து கொள்கிறது எனபதுதான் சுவாரஸ்யம்.

     இந்தக் கட்டுரைகளில் கற்பனை இல்லை, இவைகளில் சிலது மட்டும், பரிமளிக்கம் பண்ணுவதற்காக எழுதப் பட்டவைகளில் கொஞ்சம் ‘கதை உண்டு, மற்றபடி அனைத்தும் நடப்புத்தான்.

     கட்டுரை என்றால் ஞாயப்படி ஒரு மாற்றமும் செய்யாம நூத்துக்கு நூறு – பெயர்கள் உட்பட – அப்படியேதானே சொல்ல வேண்டும்? ஆனால் இதில்த்தான் இருக்கிறது சிக்கல்! கிராமத்து மக்களோடு வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளனுக்கு, துல்லியமக அப்படியெல்லாம் ரோமத்தை ரண்டாகக் கீறிக்காட்டுவது போல செய்து காட்டமுடியாது.

            கதை என்று எழதினாலே, ‘யாரை வைத்து இது எழுதப்பட்டது என்று ஆராய்ச்சி நடக்கும்போது, கட்டுரை என்றால் எவ்வளவு சிரமம் என்பது தெரிந்தவர்களுக்குத்தான் தெரியும், ஆவலாதி வராமல் எழுதித் தொலைக்கணும்; தலையும் நனையாமல் சாஸ்திரமும் பொய்யாகாமல்க் குளிக்கணும்.

     நான் எழுதுகிறேன் எனபதே ரொம்ப நாட்களுக்கு இங்கே யாருக்குமே தெரியாமல் இருந்தது. கொஞ்சம் பிரபலம் ஆக ஆக, ரொம்ப தூரத்திலிருந் தெல்லாம் ஆட்கள் தேடிக்கொண்டு வரவர, சந்தேகம் பலப்பட்டுப் போச்சு, கிராமம் என்பது ரொம்பச் சின்ன வட்டம் தும்மினாலே ஊர் பூராவும் கேட்கும்!

     இதுக்குப்பிறகு என் சொந்தக்காரர்களே, “ஏம்பா.... நீ என்னமோ எழுதியிருக்கியாமெ; கொஞ்சம் கொடேன் படிச்சிப் பாக்கட்டும்... என்று வந்து கேட்க ஆரம்பித்தார்கள்.; நடோடிக்கதைகள் புத்தகத்தைத் தருவேன். அநேகமாய் அது திரும்பி வராது.

     அடுத்தபடியாக வந்து கேட்கிறவர்களுக்கு, ‘ இன்னார் வாங்கிக் கொண்டு போயிருக்கார்; கொண்டு வந்து தரட்டும் கொடுக்கிறேன் என்பேன்! இப்படிக் கொஞ்சநாள் வழுக்கிக்கொண்டிருந்தேன். மனசாரப புஸ்த்தகத்தை விலை கொடுத்து யார் வாங்கிப் படிக்கப் போகிறார்கள்!!

     ஒரு எழுத்தாளன் தன்னைச் சுற்றியுள்ள விஷயங்களை அப்படியே எழுத வேண்டும் என்ற லேசாகச் சொல்லி விடுவார்கள். அதிலுள்ள சீண்ரங்கள் அவர்களுக்குப் புரியாது. ஆனால் நாங்கள் அதை எழுதாமலும் இல்லை; எழுதவுமில்லை!

     எப்பவாவது நண்பர்களோடு பேசிக்கொண்டிருக்கும் போது சில நடப்புகளைச் சொல்லுவேன். ‘என்னது இப்படியும் நடக்குமா என்று கேட்டுச் சிரிப்பார்கள்.

     “..... கரிசல் கடுதாசிகள் ஒரு புதி உலகை தமிழர்களுக்குக் காட்டிக்கொண்டு வருகின்றன. கரிசல்க்காடு ஒரு விந்தை உலகமாக இருக்கிறது. தோண்டத்தோண்ட அந்த மண்ணிலிருந்து என்னென்னவோ கிடைக்கின்றன..’’
என்று கடிதத்தில் எழுதியிருக்கிறார் ரசிகமணியின் பேரன் தீப.நடராஜன் அவர்கள். உண்மைதான்; தோண்டத்தோண்ட வந்துகொண்டுதானிருக்கிறது!

இடைச்செவல்                    கி.ராஜநாராயணன்
13 – 3 - 88

No comments: