Wednesday, January 05, 2005

களஞ்சியம்-14

எனது களஞ்சியத்திலிருந்து - 14: விவேகசிந்தாமணி விருந்து - 3:

செல்வமும் வறுமையும்:

விவேகசிந்தாமணி ஒரு யதார்த்த இலக்கியம். வாழ்க்கையில் நாம் அனுபவத்தில் காண்பவற்றையே ஒருஎச்சரிக்கை போல எடுத்துச் சொல்பவை அதன் பாடல்கள். செல்வம் இருப்பவர்க்கு நடைமுறையில் இருக்கும் மதிப்பும் அது இல்லாமல் போனால் ஏற்படும் சிறுமையும் பற்றி நிறைய சொல்லப்பட்டிருக்கிறது. செல்வம் ஒருவனுக்கு வாய்க்குமானால் உலகம் அவனுக்கு எப்படி மரியாதை தரும், அவன் வகை கெட்டுப் போனால் எப்படி அவனை நடத்தும் என்பதை ஒரு பாடல் சொல்கிறது:

பொன்னொடு மணி உண்டானால்
புலையனும் கிளைஞன் என்று
தன்னையும் புகழ்ந்து கொண்டு
சாதியில் மணமும் செய்வர்;
மன்னாராய் இருந்த பேர்கள்
வகைகெட்டுப் போவார் ஆகில்
பின்னையும் ஆரோ என்று
பேசுவார் ஏசுவாரே!

- ஒருவனுக்குப் பொன்னும் புகழும் உண்டானால், அவன் புலையன் என்று மக்களால் இழித்துரைக்கப் பட்டவன் என்றாலும் அவனைத் தம் உறவினன் என்று வலிந்து போய் உறவை ஏற்படுத்திக் கொண்டு தம்மையும் புகழ்ந்து கொண்டு தம்மைவிட உயர்ந்த சாதியில் திருமணமும் செய்து கொள்வார்கள். ஒரு காலத்தில் அரசராக இருந்தவர் பொருள் வரும் வழியற்றுக் கெட்டுப் போவார் எனின், 'அவர் யாரோ' என்று இழித்துப் பேசுவார்கள்.

(கிளைஞன் - உறவினன்)

இன்னொரு பாடல் 'பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை' என்ற குறள் வாக்கை ஒட்டி, இவ்வுலகில் பொருள் இல்லாதவருக்கு என்னென்ன இல்லாமல் போகும் என்பதைப் பட்டியலிடுகிறது:

பொருள் இல்லார்க் கின்பம் இல்லை;
புண்ணியம் இல்லை; என்றும்
மருவிய கீர்த்தி இல்லை;
மைந்தரின் பெருமை இல்லை;
கருதிய கருமம் இல்லை;
கதிபெற வழியும் இல்லை;
பெருநிலம் தனில் சஞ்சாரப்
பிரேதமாய்த் திரிகு வாரே.

- இவ்வுலகத்தில் பொருள் இல்லாதவர்க்கு இன்பம் கிடையாது; புண்ணியம் ஏற்படுவதில்லை; பொருந்திய புகழ் விளைவதில்லை; மக்களால் பெருமை உண்டாவதில்லை; நினைத்தபடி ஒரு செயலை செய்து முடிக்க முடிவதில்லை; மோட்சம் பெறவும் வழி இல்லை; இந்தப் பெரிய உலகில் அவர் நடமாடும் பிணமாகமே திரிவார்கள்.

அப்படிப் பொருள் இருந்தாலும் அவரது நிலைமை தளர்ந்தால் என்ன ஆகும் என்பதையும் ஒரு பாடல் சொல்கிறது:

நிலை தளர்ந்திட்டபோது
நீணிலத்து உறவும் இல்லை;
சலம் இருந்து அகன்றபோது
தாமரைக்கு அருக்கன் கூற்றம்;
பலவனம் எரியும்போது
பற்று தீக்கு உறவாம் காற்று;
மெலிவது விளக்கே ஆகில்
மீண்டும் அக்காற்றே கூற்றாம்.

( சலம் - நீர்; அருக்கன் - கதிரவன், சூரியன் )

- நீர் நிறைந்த பொய்கையில் உள்ள தாமரை மலருக்கு நட்பாய் இருந்த கதிரவனே நீர் வற்றிய காலத்தில் அதற்குப் பகையாய் மாறி அழிப்பான். அடர்ந்த தீக் காடுகள் தீப்பற்றி எரியும்போது அத் தீயினுக்கு காற்று உதவியாய் நிற்கும். அதே தீ ஒரு சிறுவிளக்கைப் போலச் சுருங்கினால் அதே காற்று எமனாகி அந்தத் தீயினை அழித்து விடும். அதுபோல செல்வம் நிறைந்த காலத்தில் நெருக்கமாய் இருந்தவர்கள் அது தவறிய காலத்தில் உறவு நீங்கிப் பகைவர் ஆவார்கள்.

இப்படி செல்வந்தராயிருந்த ஒருவர் வறியவர் ஆக நேர்ந்தால் அவரது நிலைமை எவ்வளவு பரிதாபத்துக்குரியதாக மாறும் என்பதை ஒரு பாடல் மிக உருக்கமாகச் சொல்கிறது:

தாங்கொணா வறுமை வந்தால்
சபைதனில் செல்ல நாணும்;
வேங்கைபோல் வீரம் குன்றும்;
விருந்தினர் காண நாணும்;
பூங்கொடி மனையாட்கு அஞ்சும்;
புல்லருக்கு இணங்கச் செய்யும்;
ஓங்கிய அறிவு குன்றும்:
உலகெலாம் பழிக்கும் தானே.

- ஒருவனுக்குத் தாங்க முடியாதபடி வறுமை வருமானால் நாலுபேர் கூடியிருக்கிற சபைக்குள் செல்ல மனம் வெட்கப்படும். வேங்கையைப் போன்ற அவனது வீரம் குறையும். விருந்தினர் வந்தால் அவரை எப்படி உபசரிக்கப் போகிறோம் என்று, அவரை எதிர் கொள்ள மனம் கூசும். பூங்கொடி போன்ற மென்மையான மனைவிக்கு - என்ன சொல்லி இழித்துரைப்பாளோ என - அஞ்ச வேண்டி வரும். அற்பர்கள் எல்லாம் மலினமாய்க் கருதி சகவாசம் கொள்ள விழைய, அவருக்கு இணக்கம் காட்ட நேரிடும். மென்மேலும் வளரவேண்டிய அறிவு குறையும். உலமெலாம் அவனைப் பழிக்கும்.

இப்படி இன்னும் பல நடைமுறை வாழ்வின் யதார்த்தங்களை விவேகசிந்தாமணி நூல் நெடுகச் சொல்லிக் கொண்டே போகிறது.

- மேலும் சொல்வேன்.

- வே.சபாநாயகம்.

1 comment:

Kasi Arumugam said...

அன்புள்ள ஐயா,

எளிமையாக இருக்கிறது, விவேக சிந்தாமணி. எனவே வாசிக்க அயர்வில்லாமல் இருக்கிறது. ஆனால் ஒரு விரக்தி மனநிலையே இதுவரை தெரிகிறது. மகிழ்ச்சி, ஊக்கம் ஆகியவை பற்றி ஏதும் இதில் இருக்கிறதா?

அன்புடன்,
-காசி