Friday, February 18, 2005

உவமைகள் வர்ணனைகள் - 35

நான் ரசித்த உவமைகள்-வருணனைகள் - 35:

ராஜம் க்¢ருஷ்ணன் படைப்புகளிலிருந்து:

1. அவளுடைய பசிகளுக்கு மானம், மரியாதை, நேர்மை, நாணயம் என்ற ஒன்றன் மேல் ஒன்றான உறைகள் உண்டு. வெங்காயத் தோலிகளைப் போல் ஒன்றன்மேல் ஒன்றாக உறைகளைப் போட்டுப் பச்சையான பசிகள் என்ற குருத்துக்களை மூடி வைத்துக் கொள்ளவேண்டும் என்று அவளுடைய குஞ்சுகளுக்குக் கற்பிக்கப் போராடுகிறாள்.

- 'பூந்தோட்டமும் குடிசைகளும்' குறுநாவலில்.

2. கண்கள் எங்கோ பாதாளத்தில் கிடக்கின்றன. குச்சி குச்சியாக, நரைத்து ஒடிந்து சிலும்பிய கூந்தல் - சகிக்காத இரட்டைப் பின்னல் - பிழிந்த எலுமிச்சை மூடி போல ரத்தம் சப்பிய முகத்தில் மூக்குத் தொளையிலும், காதுத் தொளையிலும் ஈர்க்குத் துண்டுகள் நீட்டிக்
கொண்டிருகின்றன. எலும்பு முட்டிய கழுத்தில் தொள தொளப்பான ஆஸ்பத்திரிச் சட்டைக்கு மேல் பிசுக்கேறிக் கறுத்த தாலிச் சரடு.

- 'பவுடர்' குறுநாவலில்.

3. அவளைப் பார்த்ததும் திகைத்தாள் லட்சுமி. பிரம்மதேவன் மனம் போனபடி கை மண்ணை உருட்டி அப்பி, ஒரு நவீனபாணி சிற்பம் உருவாக்கினாற் போல கரணை கரணையாக, கோர்வை இல்லாத அவலங்கள். இரட்டை மண்டையில் நரையில்லை; ஆனால் மண்டை தெரியும் கூந்தல். நெற்றியில் பெரிதாக கருஞ்சிவப்பு ஒட்டுப் பொட்டு. இந்தக் கருப்பு முகத்துக்கு இவ்வளவுதான் அழகு செய்ய முடியும் என்றது வெள்ளைக்கல் தோடு; பேசரி. கழுத்தில் பருமனாக விழித்துப் பார்க்கும் தாலி........... இவளைக் கல்யாணம் செய்து கொண்டவன் யாரோ!

- 'நேத்திர தரிசனம்' கதையில்.

4. ஒரு பாட்டம் அடித்து மழை ஓய்ந்தாற்போல் இருக்கிறது. தாயின் முகம் இறுகிப்போகிறது. விக்கித்துப் போய் சொல் எழும்பாமல், பிடித்து வைத்த மண் குன்றுபோல் உட்கார்ந்திருக்கிறாள். வளையங்கள், சங்கிலி வளையங்கள்....ஒன்றுக்கொன்று மாட்டிக் கொண்டு திருப்ப முடியாமல் கழுத்தைப் பிணிக்கின்றன. திரும்ப முடியாது; திரும்பிப் பார்க்கவும் மறந்து போகிறது. இந்தச் சங்கிலிக் கணுக்களை யார்,
எப்போது துண்டித்து......... தாயின் தலை துவண்டு சாய்கிறது.

- 'கண்ணுக்குத் தெரியாத சங்கிலிக் கணுக்கள்'.

5. இந்த நெருக்கங்களில் டீச்சருக்கு ஒரே பசுமையாக இருந்தது அந்த மாமரம்தான். அது யார் எப்படிப் போனாலும் பூத்தது. தை, மாசி வந்து விட்டால் பூரித்துப் புது மணப்பெண் கோலம் கொள்ளும். பழைய ஒல்லிக் குமரியா அது? இப்போது கிளை களை நான்கு திசையிலும் பரப்பி, பின்புறத்து மாட்டுக் கொட்டகையிலும் ஆக்கிரமித்திருந்தது. அது பிஞ்சுகள் விட்டு, காய்த்து, கனக்கக் கனக்க நகைகள் குலுங்க மஞ்சள் பூச்சுடன் திகழும் பேரிளம் பெண்போல் காட்சி அளிக்கும் காலத்தில் பள்ளி மூடி விடுவார்கள்.

- 'டீச்சரும் மாமரமும்'.

6. ஈர்க்கு மலர்ந்தாற் போன்று,அது வயசுக்கு வந்துவிட்டது. வயசை யார் கண்டார்கள்? மழை கொட்டிய நாள் ஒன்றில் அது பிறந்ததுதான் நினைவு. பூ மலர்ந்து விட்டது. மூத்தார் மக்களும் ஓரகத்தியும் மைக்கு செட்டு வைத்து, பந்தல் சோடித்து, குறையில்லாமல் கொண்டாடினார்கள்.

- 'பக்தி'.

7. வாழ்க்கையின் இடிபாடுகளில் அவலாய் நசுங்கினாற்போன்ற உடல். வெயிலில் காய்ந்து கருகிய முகம். ஏதேதோ பொன்னாபரணக் கனவுகளுடன் வளர்த்து விடப்பட்ட காதுகள் வீண் வீண் என்று வயோதிகத்தைத் தம்பட்டம் அடித்துக் கொண்டு கிழிந்து தொங்குகின்றன.

- 'அவல்காரி'.

8. மனித இதயங்களின் ஒட்டுறவின் தேனைச் சுவைத்த அவள் இப்போது, பொருள் மதிப்பின் உறவுகளில் கசப்பைச் சுவைக்க வேண்டியிருக்கிறது.

- 'தலைமுறைச் சங்கிலிகள்'.

9. ஆனால்.......கட்டிலில் படுத்திருக்கும் இந்தக் கணவன்...... மலையாக ஒரு பாம்பு கழுத்தில் ஆரமாக வளைந்தாற்போல் இருக்கிறது. இவளறியாமலே அது கழுத்துக்கு வந்திருக்கிறது. அது மலைப்பாம்பாகப் பருத்துக் கனத்து இவள் கழுத்தை நெரிக்கு
முன்.........

- 'ஆரங்கள்'.

10. 'நாட்டுப்புறக்கலை' அரங்கேறுகிறது. கறுத்த முகங்களில் அடர்ந்த கறுப்புப் புருவங்களும் கண்களும் செயற்கையாய் மிகைப் படுத்தப்பட்ட பின்னணியில், பவுடர் பூச்சுக்களில் ஜிகினாத் தூள்கள் பளிச்சிடுகின்றன. உதடுகளும் கன்னங்- களும் பளீர் ரோஸ் சிவப்பு. மார்பகங்களில் மட்டும் ஜிகினாத் தாமரைகள் ஒட்டி 'மானம்' மறைக்க, இடையில் அதே ஜிகினாச் சல்லடம் விளங்க முப்பத்தைந்துக்குக் குறையாத நான்கு உடல்களில் வயிற்றுச் சதைகள் குலுங்க, கரகமென்ற பெயரில் தலைகளில் ஏறிய வண்ணப் பிளாஸ்டிக் ஜிகினா அலங்காரங்கள் சரிந்தும் சாய்ந்தும் ரசிகர்களை மகிழ்விக்க, 'நாட்டுப்புறக்கலை நிகழ்ச்சி' தொடங்கி விட்டது.

- 'விழிப்புணர்வு'.

- மேலும் வரும்.

- அடுத்து வ.ரா படைப்புகளிலிருந்து.

- வே.சபாநாயகம்.

1 comment:

tamil said...

தங்களின் உவமைகள், வர்ணனைகள் என்ற தலைப்பின் கீழ் வருபவற்றை தொடர்ந்து ஆவலுடன் வாசித்து வருகிறேன். மேலும் தொடருங்கள்.
வாழ்த்துக்கள்...

please visit to my homepage.
http://shanmuhi.yarl.net/