Saturday, March 26, 2005

உவமைகள் வர்ணனைகள் - 37

நான் ரசித்த உவமைகள்-வருணனைகள் - 37

பாரதியார் கதைகளிலிருந்து:


1. கந்தர்வ லோகத்துக்குப் போய்ச் சேர்ந்தவுடனே என்னையறியாமல் ஓர் ஆனந்தம் உண்டாயிற்று. அதி ரமணீயமான சங்கீதத் தொனி கேட்டது. அவ்வொலி பொன்னாற் செய்யப்பட்ட தொண்டையினையுடைய பெண் வண்டுகளின் ரீங்காரம் போலிருந்தது. அன்று, அது சரியான உவமையாக மாட்டாது. உயிருக்குள்ளே இன்னிசை மழையை வீசிக்கொண்டேயிருந்தது போலத் தோன்றிய அவ்வொலிக்கு இன்ன உவமை சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை.

- 'ஞானரதம்'.

2. குழந்தை சந்திரிகைக்கு இப்போது வயது மூன்றுதானாயிற்று. எனினும், அது சிறி தேனும் கொச்சைச் சொற்களும், மழலைச் சொற்களும் இல்லாமல் அழுத்தம் திருத்தமாக வார்த்தை சொல்லும். அந்தக் குழந்தையின் குரல் சிறிய தங்கப்புல்லாங்குழலின் ஓசையைப்போன்றது. குழந்தையின் அழகோ வருணிக்குந் தரமன்று; தெய்வீக ரூபம்; வனப்பின் இலக்கியம்.

- 'சந்திரிகையின் கதை'.

3. மழை முழங்குகிறது. மின்னல் சூறையடிக்கிறது. சுருள் மின்னல், வெட்டு மின்னல், வட்ட மின்னல், ஆற்று மின்னல்..........

மின்னல் வீச்சிலே கண் கொள்ளை போகிறது. இடி என்றால் இடியா? நம்முடைய சினேகிதர் பிரமராய அய்யருக்குத் தொண்டை, இடிபோல கர்ஜனை செய்வதையொட்டி, அவர் மாலைதோறும் பேசுகிற திண்ணைக்கு இடிப் பள்ளிக் கூடம் என்று பெயர் சொல்வார்கள். அவரெல்லாம் இந்த நிஜ இடியைக் கண்டு கலங்கிப் போய் விட்டார்.

- 'மழை'.

4. வேதபுரத்தில் ஒரு புது மாதிரிக் குடுகுடுப்பைக்காரன் புறப்பட்டிருகிறான். உடுக்கை தட்டுவதிலே முப்பத்தைந்து தாளபேதங்களும், அவற்றிலே பல வித்தியாசங்களூம் காட்டுகிறான். தாள விஷயத்தில் மகா கெட்டிக்காரன். உடம்பு மேலே துணிமூட்டை சுமந்து கொண்டு போவதில்லை. நல்ல வெள்ளை வேஷ்டி உடுத்தி, வெள்ளைசட்டை போட்டுக் கொண்டிருக்கிறான். தலையிலே சிவப்புத் துணியால் வளைந்து வளைந்து பெரிய பாகை கட்டியிருக்கிறான். பாகையைப் பார்த்தால் நெல்லூர் அரிசி மூட்டையிலே பாதி மூட்டையைப் போலிருக்கிறது. நெற்றியிலெ பெரிய குங்குமப் பொட்டு; மீசையும் கிருதாவுமாக மிகவும் விரிந்த பெரிய முகத்துக்கும் அவனுடைய சிவப்பு நிறத்துக்கும் அந்தக் குங்குமப் பொட்டு நன்றாகப் பொருந்தியிருக்கிறது. ஆள் நெட்டை; தடியன். காலிலே ஹைதராபாத் ஜோடு மாட்டியிருக்கிறான். நேற்றுக்
காலையிலே, இவன் நம்முடைய வீதி வழியாக வந்தான். உடுக்கையிலே தாள விஸ்தாரம் நடக்கிறது. பெரிய மிருதங்கக்காரன் வேலை செய்வதுபோல செய்கிறான்.

- ' புதிய கோணங்கி'.

5. ரவீந்திரநாத டாகூர் சொல்வது போல் இவளுடைய தலைமயிர் முக்காற் பங்கு பழமாகவும், காற்பங்கு காயாகவும் இருந்தது. அதாவது , முக்காற் பங்கு நரை; பாக்கி நரையில்லை.

- 'குழந்தைக் கதை'.

6. சில சமயங்களில் ஜமீந்தார் ஏறு குதிரை சவாரி செய்வார். இவருக்கென்று தனியாக ஒரு சின்னக் குதிரை மட்டம். - ஆட்டைக் காட்டிலும் கொஞ்சம் பெரிது- தயார் செய்து கொண்டு வருவார்கள். அதன் மேல் இவர் ஏறி உட்கார்ந்தவுடனே அதற்கு முக்கால்வாசி மூச்சு நின்று போகும். பிரச்சினை கொஞ்சம்தான் மிஞ்சியிருக்கும்.எனினும் இவருக்குப் பயம் தெளியாது. இவருடைய பயத்தை உத்தேசித்தும்
குதிரையை எப்படியாவது நகர்த்த வேண்டும் மென்பதை உத்தேசித்தும் முன்னும் பின்னும் பக்கங்களிலுமாக ஏழெட்டு மறவர்கள் நின்று அதைத் தள்ளிக் கொண்டு போவார்கள். ஜமீந்தார் கடிவாளத்தை ஒரு கையிலும் பிராணனை மற்றொரு கையிலும் பிடித்துக் கொண்டு பவனி வருவார்.

- 'சின்னச் சங்கரன் கதை'.

7. தாய் தந்தையர் வைத்த பெயர் கோவிந்தராஜுலு. அவன் தானாக வைத்துக் கொண்ட பெயர் கலியுக கடோற்கசன். அவன் உயரம் ஐந்தேகால் அடியிருக்கலாம். குண்டுருளை போலே வைரமான உடம்பு. இவன் மேலே மோட்டார் வண்டி ஓட்டலாம். மாட்டு வண்டி விடலாம். இவன் தலை ரோமத்தில் முந்நூறு ராத்தல் கல் தொங்கவிடலாம். இவன் தலையில் நாற்பது பேர் அடங்கிய பெரிய தொட்டிலை
நிறுத்தி வைக்கலாம். இவன் இரண்டு விரல்களைக் கொண்டு மகாபாரத புஸ்தகத் தைக் கிழித்துப் போடுவான். இவன் பல்லினால் கல்லைப் பேர்த்துப் போடுவான். இவன் நகத்தால் கதவைப் பிளப்பான்.

- 'கலியுக கடோற்கசன்'.

8. "கயிற்றினிடத்தில் பேசினால் அது மறுமொழி சொல்லுமா?"

பேசிப் பார். மறுமொழி கிடைக்கிறதா இல்லயா என்பதை.

ஆனால் அது சந்தோஷமாக இருக்கும் சமயம் பார்த்து வார்த்தை சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் முகத்தைத் தூக்கிக் கொண்டு சும்மா இருந்து விடும்; பெண்களைப் போல.

- 'காற்று'.

9. குள்ளச்சாமி நெடிய சாமி ஆகிவிட்டார். நாலே முக்கால் அடிபோல் தோன்றிய குள்ளச்சாமியார் ஏழே முக்கால் அடி உயரம் வளர்ந்து விட்டார். ஒரு கண்ணைப் பார்த்தால் சூரியனைப் போல் இருந்தது. மற்றொரு கண்ணைப் பார்த்தால் சந்திரனைப் போல் இருந்தது. முகத்தின் வலப்புறம் பார்த்தால் சிவன் போல் இருந்தது. இடப்புறம் பார்த்தால் பார்வதியைப்போல இருந்தது. குனிந்தால் பிள்ளை யார் போல் இருந்தது. நிமிர்ந்து பார்க்கும்போது மகாவிஷ்ணுவின் முகத்தைப்போலே தோன்றியது.

- 'சும்மா'.

10. சிறிது நேரத்துக்குள் புயல் காற்று நின்றது. அங்கே ஒரு தோணி வந்தது; தோணியின் அழகு சொல்லி முடியாது. மயில் முகப்பும், பொன் நிறமும் கொண்டதாய் அன்னம் நீந்தி வருவது போலே மெதுவாய் என்னருகே வந்த அத்தோணியிடையே ஒரு மறக்குமாரன் ஆசனமிட்டு வீற்றிருந்தான். அவன் முகத்தினொளி தீயொளியைப் போலே விளங்கிற்று.

- 'கடல்.

- தொடர்வேன்.

- அடுத்து இராஜேந்திரசோழன் படைப்புகளிலிருந்து.

- வே.சபாநாயகம்.

2 comments:

Thangamani said...

பாஞ்சாலி சபதத்தில் பாஞ்சாலியைப் பற்றிய வர்ணனைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

கேடற்ற செல்வம், திரு, இன்ப விளக்கு, என்றெல்லாம் ஒரு முழுப் பாடலையும் எழுதியிருப்பார்.

பாடல் இப்போது நினைவில் இல்லை.

நல்ல பதிவு. நன்றிகள் பல.

Aruna Srinivasan said...

மிகவும் ரசித்தேன். நன்றி. அடிக்கடி இப்படி எடுத்துப் போடுங்கள்.

அருணா.