Tuesday, June 21, 2005

நினைவுத் தடங்கள் - 33

எங்கள் பெரியப்பா முரடர். மனைவி, பிள்ளை யாரும் எதிரில் நின்று பேச முடியாது. வாயில் வண்டைச்சொல்தான் திட்டுவதற்கு வரும். ஆட்களையெல்லாம் வசவுகளால் தான் அழைப்பார். அவர் முசுடு என்பதால் ஊரிலும் யாரும் கிட்டே நெருங்குவதில்லை. பேசவே முடியாது என்றால் அவருக்குப் புத்திமதி சொல்ல முடியுமா? அவரைவிட மூத்த, அடுத்த தெரு சொந்தம் ஒருவர்தான் - அவரை ஒருமையிலும், 'டா' போட்டும் பேசக்கூடியவர். மனைவி மக்களுக்கு முக்கியத் தேவை என்றால் கூட அவர்தான் வந்து சொல்ல வேண்டும். ஊர்ப்பரம்பரை பெரிய மனிதர் என்ற கர்வம் நிறைய. அதனால் தெருவில் நடக்கும்போது எங்கோ வெகு தூரத்தில் பார்வை- அரிமா பார்வை போல - பார்த்தபடி
நடப்பாரே தவிர, பக்க வாட்டில் யாரையும், யார் வீட்டையும் பார்க்க மாட்டார். யாரிடமும் வழியில் நின்று பேசமாட்டார். யார் வீட்டுத் திண்ணையிலும் உட்கார மாட்டார். ஊர் `உஷார் கமிட்டி'த் தலைவர் என்பதால் பஞ்சாயத்து எதுவும் அவரிடம் தான் வர வேண்டும்.

எங்கள் வீட்டெதிரில் ஒரு கல் -விளக்குத் தூண் வெகு நாட்கள் நின்றது இப்போதும் நினைவில் நிற்கிறது. அதற்குக் காரணம் அந்தத் தூணின் முக்கியத்துவம் தான். ஊரில் ஏதும் திருட்டு நடந்து ஆள் பிடி பட்டால் அந்தத் தூணில் கொண்டு வந்து கட்டி விடுவார்கள். மந்தைப் புளிய மரத்திலிருந்து ஒருபாகம் அளவிலான மிலார் கள் பத்துக்குக் குறையாமல் வெட்டிக் கொண்டு வந்து, திருட்டுக்கொடுத்தவர் எங்கள் குறட்டில் வைத்து விடுவார். பெரியப்பா உள்ளே இருப்பார். தெரு நிறைய, வேடிக்கை பார்க்க ஆணும் பெண்ணும் குழந்தைகளுமாய் ஒரு பெரிய பயங்கரக் காட்சியைப் பார்க்கப்போகிற படபடப்பில் இடித்துக் கொண்டு நிற்கும். பெரியப்பா வெளியே வருவதை கண்கொட்டாது அத்தனை பேரும் எதிர் பார்த்திருப்பார்கள். உள்ளே தகவல் போய் வெகு நேரம் ஜனங்களைக் காக்க வைத்த பின்னரே, இடுப்பு நாலுமுழ வேட்டியை நெஞ்சுவரை உயர்த்திக் கட்டியபடி தொண்டையைக் காறியபடி வருவார். அவருக்கு ஆஸ்த்துமா தொந்தரவு உண்டு. அதனால் எப்போதும் தொண்டையைக் காறியபடியே இருப்பார். கச்சலான உடம்பு. அதில் பலம் ஏதும் இருக்குமா என்று சந்தேகம் ஏற்படும்.

அவர் தலை தெரிந்ததும் 'கப்'பென்று கூட்டம் சப்தமெழுப்பாமல் அடங்கி புலிக் கூண்டிலிருந்து வரும் புலியைப் பார்க்கிற அச்சத்தோடு பார்க்கும். பெரியப்பா தலை உயர்த்தி கல் கம்பத்தில் கட்டப்பட்டிருப்பவனைத் தீர்க்கமாகப் பார்ப்பார். பூனை எலியைப் பார்க்கிற மாதிரி இருக்கும். அதிலேயே அவனுக்குப் பாதி உயிர் போய்விடும்.

'ஹ¥ம்......' என்றொரு ஹ¥ங்காரம் எழும். ''என்ன ?'' என்பது போல புகார் சொன்னவனைப் பார்ப்பார். அவன் தன் களத்தில் அல்லது வீட்டுக்குள் ராத்திரி நெல் திருடியதைச் சொல்லவும், நிமிர்ந்து குற்றம் சாட்டப்பட்டவனைப் பார்த்து, ''டலே! நெஜமா?" என்று கர்ஜிப்பார். எவ்வாளவு நெஞ்சழுத்தும் உடையவனாலும் அவர் முன்னே பொய் சொல்ல முடியாது. நடுங்கியபடி, 'சாமி! இனிமே செய்யமாட்டேன் சாமி!'' என்று பயத்தோடு அலறுவான்.

அவ்வளதுதான்! 'வீச்'சென்று பாய்ந்து அடுக்கி வைக்கப் பட்டிருக்கும் புளிய மிலாரை அள்ளிக் கொண்டு அவனெதிரில் போய், கண் மூக்குப் பாராமல் சரமாரியாக விளாசுவார். ஏதோ சாமியாடியின் ஆவேசம் போல வெறித் தாக்குதலாக அது இருக்கும். பரிதாபத்துக்குரிய அந்த மனிதனில் ஓலம் தெருவே எதிரொலிக்கும். குழந்தைகள் அக் குரூரத்தைப் பார்த்து வாய் விட்டு அழாமல் தேம்புவார்கள். அதிகபேருக்கு
அது பார்த்துப் பார்த்து மரத்துப் போன காட்சி. சிலை போல- பாரதி எழுதியபடி 'நெட்டை மரங்களாய்' நின்று பார்த்திருப்பார்கள். கை ஓய்கிறவரை, அல்லது மிலாறுகள் தீர்கிர வரை இந்தச் சித்திரவதை நடக்கும். யாரும் தட்டிக் கேட்பதில்லை; கேட்கவும் முடியாது. அவர்தான் நீதிபதி. அவர் தருவதுதான் தண்டனை. கிரேக்க அரசர்கள் அடிமைகளைப் புலியுடன் மோதவிட்டு அந்தக் குரூரத்தை ரசித்த அந்தக் காலத்து மாக்களைப் போலத்தான் இந்த இருபதாம் நூற்றாண்டுத் துவக்கத்திலும் மக்கள் மாக்களாக இருந்தார்கள். போலீஸ் எல்லாம்
இப்படிபட்ட கிராமங்களில் நுழைந்து தலையிடுவதில்லை. இது போல ஊர்ப் பெரிய மனிதர் வைத்ததுதான் சட்டம்.

இதனால் எங்கள் பெரியப்பாவின் வம்சத்தையே ஊர் மறைவாகத் தங்களுக்குள்ளே கரித்துக் கொட்டும். அதற்காகப் பெரியப்பா ஒரு நாளும் கவலைப் பட்டதில்லை. ஆனால் அவரது வாரிசுகள் பின்னாளில் கவலைப்பட நேர்ந்ததுதான் காலத்தின் கட்டாயம். ஆனல் அந்தக் கொடூரத்துக்குச் சாட்சியாய் நின்ற கல்க் கம்பம் இன்றும் மக்கள் நாவில் புழக்கத்தில் இருப்பது தான் வரலாற்றின் நிதர்சனம். பஞ்சாயத்து, போலீஸ், நீதிமன்றம் என்று வந்துவிட்ட இந்த நாளிலும், வழக்கு என்று வந்து வாய்ப் பேச்சில் ஒருவன் கட்டடையாத தருணங்களில் அவர்களை அற்¢யாமலே, மனதில் பதிந்து விட்ட வாசகமாய், '' எலேய்! எதாவது மறுத்துப் பேசுனே- நடுத்தெருப்பிள்ளை வீட்டுக் கல்த்தூணுலே
புடிச்சுக் கட்டிடுவேன்!" என்றுதான் வரும். (எங்கள் தெருதான் நடுத்தெரு; நடுத்தெருப்பிள்ளை வீடு என்பது எங்கள் வீட்டைக் குறிக்கிறது) ஆனால் சொன்னபடிக் கட்டிவைக்க அந்தத் தூண் தான் இப்போது அங்கு இல்லை!

- தொடர்வேன்.

- வே.சபாநாயகம்.

1 comment:

ENNAR said...

தாங்கள் எந்த ஊர்