Tuesday, April 11, 2006

நான் கண்ட சிஷெல்ஸ் - 15

15. சிஷெல்ஸ் விநாயகர் கோயில்

சிஷெல்ஸில் தமிழர்கள் 200 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வந்திருந்தும், அவர்களில் பெரும்பாலோர்- ஏறத்தாழ 4000 பேர் இந்துக்களாக இருந்தும் அவர்களுக்கென்று ஒரு வழிபாட்டுத் தலம் இல்லாமலிருந்தது. 1980 களில் தமக்கென்று ஒரு கோயில் வேண்டுமென்ற ஏக்கம் இங்குள்ள இளைஞர் சிலருக்கு எழுந்தும் தக்க ஆதரவோ, உற்சாகமோ கிடைக்காததால் அது செயல் வடிவம் பெற இயலவில்லை. 1984ல் ஈழத்தமிழரான மறவன்புலவு கி.சச்சிதானந்தம் அவர்கள் ஐக்கிய நாடுகள் உணவு வேளாண்மைத்துறை ஆலோசகராக நியமிக்கப்பட்டு வந்ததும் ஒரு உந்துதல் கிடைத்தது. அவரது முயற்சியால் சிஷெல்ஸ் இந்து கோயில் சங்கம் உருவாக்கப் பட்டது. திரு.கே.டி.பிள்ளை அவர்களை இச்சங்கத்துக்குத் தலைவராக்கினார்கள்.

கோயிலுக்கு நிலம் வாங்குவதிலும் நிதி எழுப்புவதிலும் திரு.சிவசண்முகம் பிள்ளை அவர்கள் தலைவருக்குப் பெரும் துணையாக இருந்தார்கள். வங்கி மூலமும், தமிழ்நாட்டு நடிகர் காலஞ் சென்ற திரு.ஜெய்சங்கர், அந்நாள் அறந்¤லைய அமைச்சர் திரு. ராஜாராம் போன்றோரின் உதவியாலும் மக்கள் நன்கொடையாலும் கோயிலுக்கு நிலம் வாங்கி கணபதி ஸ்பதியைக் கொண்டு வரைபடம் தயாரித்து 1990ல் அடிக்கல் நாட்டினார்கள். ஞானபூமி ஆசிரியர் திரு.மணியன் அடிக்கல் நாட்டினார்.

ஆரம்பத்தில் 'குயின்சி சூப்பர் மார்க்கட்' மேல் மாடியை வாகைக்கு அமர்த்தி கோயில் மாதிரி அமைத்து பிரார்த்தனை மண்டபம் உருவாக்கப் பட்டது.

சுவாமி படத்தை வைத்து வழிபாட்டைத் தொடங்கியுள்ளனர். பின்னர் தமிழ் நாட்டிலிருந்து விநாயகரின் வெண்கலச் சிலை ஒன்றைக் கொணர்ந்து, ஞாயிறு தோறும் பஜனை, பூஜை நடத்தினர். 1988ல் தொடங்கிய ஆலயப்பணி 1990ல் முடிவடைந்தது. ஆறாயிரம் சதுர அடியில் ஆலயம் எழும்பியது. விநாயகர், துர்க்கை, நடராஜர், முருகன், திருமால் ஆகிய தெய்வங்களை ஆலயத்தில் நிறுவி சைவ, வைணவ இரு சமயத்தாரும் ஏற்கும் படி ஆலயம் அமைந்தது.

'அருள்மிகு நவசக்தி விநாயகர் திருக்கோயில்' என்று அழைக்கப்படும் இத் திருத்தலத்தின் ஆலய மகாகும்பாபிஷேகம் 6.5.1992ல் நடைபெற்றது. தமிழகத்திலிருந்து திரு. ராஜாராம் அவர்களும், மொரீஷியசிலிருந்து கல்வி அமைச்சர் திரு.ஆறுமுக பரசுராமன் அவர்களும், சிஷெல்ஸின் எல்லா அமைச்சர்களும் பங்கு பெற்ற இக் கும்பாபிஷேக நிகழ்ச்சி தமிழர்களுக்கு ஒரு பொன்னாளாக அமைந்தது. இந்த ஆலயம் எழும்பிய பின்னர்தான், இந்துமதம் பற்றி முழுமையாக சிஷெல்ஸ் மக்களும், ஆட்சியாளர்களும் அறிந்தனர். அவர்களுக்கும் இந்த ஆலயம் பிடித்துப் போய் நிதி உதவியும் பிற உதவிகளும் செய்திருக்கிறார்கள். இப்பொது சிஷெல்ஸ் நாட்டில் அடையாளம் சொல்லக் கூடிய இடமாக இந்த ஆன்மீகத் தலம் அமைந்து விட்டது. சீஷெல்ஸ் வரும் சுற்றுலாப் பயணிகளும் ஆலயத்துக்குத் தவறாமல் வந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.

கோயிலில் தினசரி மூன்று கால பூஜை நடக்கிறது. இரண்டு அர்ச்சகர்களும், மேள வாத்தியக்காரர்களும் ஒரு ஓதுவாரும் தமிழகத்திலிருந்து அழைத்துச் செல்லப் பட்டு அவர்கள் நிரந்தரமாகத் தங்க வீட்டு வசதியும் கணிசமான ஊதியமும் இந்து கோயில் சங்கத்தால் வழங்கப் படுகிறது.

ஆலயத்தில் தைப்பூசத் திருவிழா ஆண்டுதோறும் மிகச் சிறப்பாகக் கொண்டா டப்படுகிறது. அன்று பக்தர்கள் முருகனுக்குக் காவடி எடுத்து வேண்டுதலை நிறை வேற்றுகிறார்கள். சீஷெல்ஸ் அரசாங்கம் தைப்பூசத்தன்று அரசு விடுமுறை அறிவித்துள்ளது. அன்று இந்து வர்த்தகர்களும் வர்த்தக நிறுவனங்களையும் மூடி விடுகிறார்கள். விநாயகர்சதுர்த்தி, புத்தாண்டுப் பிறப்பு, நவராத்திரி போன்ற விசேஷ நாட்களில் கோயிலில் பக்தர் கூட்டம் அலைமோதுகிறது. அர்ச்சகருக்கு தாராளமாக தட்சணையும் உண்டியில் மனநிறைவோடு நிறைய காணிக்கையும் செலுத்தி மகிழ்கிறார்கள். பக்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டு வருமானமும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. கோயில் பணியும் விரிவடைந்து கொண்டே வருகிறது. தற்போது ராஜ கோபுரம் எழுப்பும் வேலை தொடங்கப் பட்டு முடியும் தருவாயில் இருக்கிறது.

திரு.கே.டி.பிள்ளை அவர்கள் தலமையில் தொடங்கப்பட்ட இந்து கோயில் சங்கப் பணிகளில் திரு.சிவசண்முகம் பிள்ளை, திரு.சிவசுப்ரமணியன், திரு.பழனி, திரு பாலசுந்தரம் ஆகியோரது அயராத முயற்சிகளும் பெரிதும் பேசப்படுகின்றன. மகளிரும்- திருமதிகள்.சரோஜினி சிவசுப்ரமணியன், வாசுகி, சித்ரா, வசந்தி, ஜெயா பாலசுந்தரம், சாந்தா நாயர், ரேணு, கலா, மங்களநாயகி ஆகியோர் தொடர்ந்து ஆலய சேவையில் ஆர்வமும் அர்ப்பணிப்பும் செலுத்தி வருவதும் நினைவு கூரத் தக்கது.

இந்துகோயில் சங்க நிகழ்வுகள் பெருக வளர்ந்து இந்நாட்டின் வரலாற்றுப் பதிவாக அமைந்துள்ளது. இந்த வளர்ச்சியின் விளைவாக இந்நாட்டு இந்துக்களுக்கும் தமிழர்களுக்கும் வலுவான கலாச்சார அடித்தளம் அமைந்திருப்பது போற்றுதலுக்கு உரியதாகும். அடிக்கடி தமிழகத்திலிருந்தும் யாழ்ப்பாணத்திலிருந்தும் ஆன்மீகச் சொற்பொழிவாளர்கஆளையும் இசை, நாட்டிய வல்லுனர்கஆளையும் அழைத்து வந்து ஆன்மீக உணர்வைப் பெருக்கி வருகிறார்கள். மொத்தத்தில், என் பார்வையில் அங்கு வாழும் தமிழர்கள் அயல் நாட்டில் இருக்கிறோம் என்கிற உணர்வின்றி தாய்நாட்டில் இருப்பது போன்ற மன நிறைவுடன் ஆனால் தாய் நாட்டை விட மிக வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
உலகில் எப்பகுதிக்குச் சென்றாலும் தமிழர்கள் தங்கள் தனிமுத்திரையைப் பதிப்பவர்கள் என்பதை சீஷெல்ஸ் தமிழர்கள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு- மகளும் மாப்பிள்ளையும் நம்மை விட்டு வெகு தொலைவில் உடனே வந்து அடிக்கடி பார்க்க முடியாதபடி இருக்கிறார்களே, இந்நிலையில் நிரந்தரக் குடியுரிமை பெற்றுத் தங்கிவிட முடிவு செய்து விட்டார்களே என்றகிற கவலை அங்கு போய்ப் பார்க்கும்வரை இருந்தது. அங்கு சென்று 70 நாட்கள் தங்கி அங்குள்ள தமிழர்களின் நிறவான வாழ்வினைப் பார்த்தபிறகு "நீங்கள் இங்கேயே நிறைவாக, நிம்மதியாக வாழுங்கள். காலமும் தூரமும் இந்த அறிவியல் உலகில் சுருங்கி விட்ட நிலையில் சந்திப்பது அப்படி ஒன்றும் சிரமமானது அல்ல; நம்மூரில் இத்தகைய வளமான வாழ்வும் கௌரவுமும் இன்றைய தமிழக அரசியல் சூழ்நிலையில் வாய்க்காது" என்று வாழ்த்தி விடைபெற்றோம்.

நாங்கள் திரும்பிய 17-9-2005 அன்று அந்த அதிகாலையிலும் என் மகள் மற்றும் மாப்பிள்ளையின் நண்பர்களும் எனக்கு அங்கே ஏற்பட்ட நண்பர்களும் குடும்பத்துடன் வந்து வழியனுப்பி வைத்தது என்றும் என்னால் மறக்க முடியாத ஒன்றாகும்.
வே.சபாநாயகம்

- நிறைகிறது.

- வே.சபாநாயகம்

1 comment:

Nirek said...

Hello uncle,
jus read your remarks on comparison of seychelles life and india life in the end line of your article. I dont think India life is anyway less to any country in world.
If you cant live with your dear ones, even heaven will make you feel like hell. and converse holds true too. Isn't it?