1. பத்திரிகைகளில் என் கதைகள் வெளிவந்ததனால் மட்டும் நான் என்னை
எழுத்தாளனக எண்ணிக்கொண்டுவிடவில்லை. நான் எழுதிவற்றைத் திருப்பி
ஒரு முறை படிக்கிறபோது என் நெஞ்சோடு கலக்கின்ற சுகத்தை என்னால்
உணர முடிந்தது. அந்த மயக்கத்திலே என்னுள்ளே ஆண்மையாக உள்ள
கலையுணர்ச்சி ஒரு வடிவம் பெற்று வெளிவருவதைக காண்கிற புதுமை
இன்பத்தை அனுபவிக்கிறேன். நானே ஒரு புதுப் பிறவி எடுப்பது போன்ற
ஆனந்தத்தை உணர்கிறேன். என்னை நானே புதிதாக அறிந்து கொள்கிற
முயற்சியாகவும் என்னை வெளிப்படுத்திக் கொள்ளும் ஒரு நல்ல வகையை
அறிந்துகொண்டுவிட்ட முயற்சியாகவும் அந்த அனுபவம் விளங்குகிறது.
2. எழுத்தாளன் என்கிற முறையில் நான் எனக்காக மட்டுமல்ல பிறருக்காகவும்
எழுதுகிறேன். அதாவது நான் பெற்ற இன்பம் இந்த வையகமும் பெறட்டும்
என்று அதைச் சொல்லிக்கொள்ளலாம்.
3. என்னைப் பாதிக்கிற விஷயங்கள், பாதிக்காத விஷயங்கள், நான்
விரும்புகிற விஷயங்கள், விரும்பாத விஷயங்கள் எல்லாவற்றையும் பற்றித்
தான் எழுதுகிறேன். காசுக்காக எழுதுகிறேன்; புகழுக்காக எழுதுகிறேன்;
தாட்சண்யத்துக்காக எழுதுகிறேன்; மிரட்டுவதற்காக எழுதுகிறேன்; மிரளாமல்
இருப்பதற்காக எழுதுகிறேன்; என்னுடைய எழுத்தைக்கொண்டு ஜகத்ஜாலம்
எல்லாம் பண்ணிவிட வேண்டும் என்று எழுதுகிறேன். என்னை உயர்த்திக்
கொள்ள எழுதுகிறேன். பிறரை உயர்த்தவும் எழுதுகிறேன். கீதாச்சாரியன்
சொன்னது பார்த்தனுக்கு மட்டும்தானா? எனக்கும் சரி. பலனைக் கருதாமல்
எழுதுகிறேன். பலன் கருதியும் எழுதுகிறேன். தன்னுடைய விருப்பு
வெறுப்பெல்லாம் அழுகல் சொத்தைக்கருத்தெல்லாம் விமர்சனம் என்று
ஓயாமல் புலம்புகிறானே அவனுடைய பட்டியலில் என்னுடைய பெயர்
இருக்கிறதா என்று பார்ப்பதற்காக எழுதுகிறேன். அதில் பெயர் இருக்க
வேண்டியதில்லை என்பதற்காகவும் எழுதுகிறேன்.
4. எனக்கு இன்னும் ஒரு நிறைவு பிறக்கவில்லை. எதையோ ஒன்றை
சாதிக்கிற வேகம் இன்னும் தணியவில்லை. என் சிந்தனையெல்லாம் எங்கோ
இருக்கிறது. என்னைச் சுற்றியுள்ள சிறுமைகள், என்னிடமே உள்ள குற்றங்
குறைகள், பலவீனங்கள் ஆசைகள், அபிலாஷைகள் எல்லாம் வற்றாத
ஜீவநதிகள் போல் வடிவதும் பெருக்கெடுத்து வருவதுமாக இருந்துகொண்டே
இருந்தாலும் என் சிந்தனை மட்டும் இமயத்தின் பனிச்சிகரத்தில் தூய்மையான
இடம் ஒன்றைத் தேடிக்கொண்டுதான் இருக்கிறது. பேதம் சிறிதும் இல்லாத
அந்த இடத்துக்குத்தான் நான் என் எழுத்து மூலமாக யாத்திரையைத் தொடங்கி
இருக்கிறேன்.
5. நான் எழுதியது போதாது. எழுத வேண்டியது எவ்வளவோ? எழுத
வேண்டியதை முழுதும் எழுதவில்லை. எழுதியதை எழுதியிருக்க வேண்டிய
தில்லை. எனக்கே என்னிடம் திருப்தி இல்லை. ஆகவே நான் இனித்தான்
நான் விரும்பிய வண்ணம் எழுதப் போகிறேன். வாழ, வாழவிட எழுதுகிறேன்.
6. இலக்கியம் வேறு வாழ்க்கை வேறு அல்ல. வாழ்க்கையேதான் இலக்கியம்.
ஆகவே என் நெஞ்சை விட்டகலாத - எனது இளம் பருவத்தில் சந்தித்த
நபர்களை உங்கள் நெஞ்சிலும் பதியும்படி உலவ விடுகிறேன். 0
Friday, January 28, 2011
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
arumaiana kaddurai.(Avanam)
mullaiamuthan
katruveli-ithazh.blogspot.com
Post a Comment