Saturday, September 08, 2007

கால நதிக்கரையில் - 15

வீடு சிறியதுதான். கணவன் மனைவி இருவருக்குப் போதும். வாசற்படிக்கு முன்னால் தெருவை ஒட்டி நீண்ட சிமிட்டுப் பூசிய குறடு இருந்தது. வாசற்படியைத் தாண்டியதும் நீளமான ஹால். வெளிச்சம் கம்மி. தோட்டத்துக் கதவைத் திறந்ததும் வெளிச்சம் பாய்ந்து உள்ளே வந்தது. சுவரை ஒட்டி ஒரு விசிப்பலகை. அதில் பாய் விரித்து அழுக்குத் தலையணையில் யாரோ படுத்திருப்பது தெரிந்தது.

"ஏங்க! தூங்குறீங்களா? யாரோ ஒங்களத் தேடிக்கிட்டு வந்திருக்காங்க, எந்திரிங்க! நீங்க உள்ள வாங்க" என்று சொல்லிய அந்தப் பெண்மணி ஒரு முக்காலியை எடுத்து விசிப்பலகைக்கு அருகில் போட்டாள்.

"ஆரு?' என்று அனத்தலாய்ச் சொல்லியபடி படுத்திருந்தவர் எழுந்து உட்கார்ந்தார். அப்பு தானா என்று சிதம்பரத்துக்குப் புரியவில்லை. வயதுக்கு மீறிய முதுமையும் தள்ளாமையும் தெரிந்தது. பல நாட்களாகச் சவரம் செய்யப்படாத முகம்.

இடுங்கிய கண்களில் பரிச்சயமான மெத்தனமும் பேதைமையும் புலனாயிற்று. அப்பு தான்!

"அப்பு என்னத் தெரியுதா? நா சிதம்பரம் வந்திருக்கேன்!" என்றார் அனுசரணையுடன்.

"ஆரு செதம்பரம்......?" என்று நினைவைத் தூண்டியபடி சிந்தனை வயப்பட்ட மாதிரி தெரிந்தது.

"நடுத்தெருப் பிள்ளை வீட்டுச் சிதம்பரம். ஒனக்கு வேலை வாங்கிக் குடுத்தனே..........."

வேலை என்று சொன்னதும் அந்த முகத்தில் சிறிது வெளிச்சம் ஏற்பட்டது. அதுவே அவனது வாழ்வின் லட்சியமாகவும் ஏமாற்றமாகவும் இருந்ததால் இருக்கலாம். " ஆங்! வாங்க வாங்க......." என்று நினைவில் அவரை அடையாளம் கண்டு எழ முயன்றான்.

"வேண்டாம் உக்காரு. எப்பிடி இருக்கே?" என்று விசாரித்தார். அவ்வளவு தான்! அதுவரை கேட்டிராத அந்த அனுசரணையான விசாரணை அவனை உலுக்கி இருக்கவேண்டும். கேவிக் கேவி அழ ஆரம்பித்து விட்டான். "அப்றம் வேலக் கெடைக்கவே இல்லீங்க!" என்றான் கேவலுக்கிடையில். சிதம்பரம் நெகிழ்ந்து போனார். ஆண்டு பல கடந்தும் தன் வேலை பறிபோனதை அவனால் மறக்க முடியவில்லை என்று தெரிந்தது.

"அடடே! ஏன் இப்ப அழறே? ஊர விட்டுப் போயி ரொம்ப நாள் கழிச்சி இப்பதான் பாக்கலாம்னு வந்தேன். உன் வீடுதான் முதல்ல பட்டுது. அதான் உன்னப் பாக்கலாம்னு நுழஞ்சேன்" என்றார்.

அவன் மனைவி சட்டெனச் சுதாரித்தவளாய், "ஐய! அது நீங்க தானுங்களா? உங்களத்தான் அப்பப்ப சொல்லிப் பொலம்பிக் கிட்டுருப்பாரு!" என்றாள்.

கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தார். ஆனால் அப்புவிடமிருந்து கடந்த காலம் பற்றி எதுவும் கோர்வையாய்ப் பெற முடியவில்லை. அவன் மனைவியிடமிருந்து ஓரளவு அறிந்து கொள்ள முடிந்தது.

அப்புவுக்கு நாற்பது வயது வரை திருமணம் செய்து வைக்க அவனுடைய பெற்றோர்களுக்கு முடியவில்லை. தனக்காகவும் தெரியாத சொன்னாலும் புரியாத இரண்டும் கெட்டானாக, பெற்றவர்களுக்குப் பாரமாய், எந்த வாழ்வாதாரமும் இல்லாத அவனுக்குத் தம் பெண்ணின் வாழ்வைப் பலிகொடுக்க யார்தாம் முன் வருவார்? கடைசியில் இந்தப் பெண்தான் - தூரத்து உறவில், நாதியற்று முப்பது வயதாகியும் தாலிபாக்யம் கிட்டாதிருந்தவள் - தெரிந்தே வேறு வழியற்றவளாய் அவனை வாழ்நாள் முழுக்கச் சுமக்க ஒப்பிக் கழுத்தை நீட்டினாள். அந்த நிம்மதியில் பெற்றவர்கள் சீக்கிரமே காலமாகிவிட, இவள்தான் ஏதேதோ அகப்பட்ட வேலைகளை மானமாகச் செய்து காலத்தை ஓட்டி வந்திருக்கிறாள். பிறகு ஒரு பிள்ளை பிறந்து அவனை வளர்த்து ஆளாக்கிப் படிக்கவைத்து, அவனும் சூட்டிகையாய்ப் படித்து வடக்கே ஏதோ ஒரு வேலையைத் தேடிக் கொண்டபின் தான் அவளால் ஆசுவாசப் படுத்திக் கொள்ள முடிந்தது. அவன் மாதந்தோறும் அனுப்பும் பணத்தில் இப்போது தான் மூன்றுவேளையும் வயிறாரப் பசியாற முடிகிறது. அவன்தான் இடிந்து கொண்டி ருந்த வீட்டிலிருந்து பெற்றவர்களை வெளியேற்றி, பக்கத்திலேயே சின்னதாக ஒரு வீட்டையும் கட்டிக் கொடுத்துக் குடியமர்த்தி விட்டிருக்கிறான். அவனுக்கு இனிதான் திருமணம் செய்யவேண்டும்.

இவ்வளவையும் அவள் ஆற்றாமையுடனும் அழுகையினுடனும் சொல்லி முடித்ததும், 'கல்லினுள் தேரைக்கும் படியளக்'கிற கடவுள் அப்புவை முற்றிலுமாகக் கைவிட்டுவிடவில்லை என்று சிதம்பரத்துக்கு ஆறுதல் ஏற்பட்டது.

சற்று இளைப்பாறிய பின் அவர் வெளியே போய்வரக் கிளம்பினார். " இந்தப் பையும் பெட்டியும் இங்கியே இருக்கட்டும். நா இப்பிடியே கொஞ்சம் சுத்திப் பாத்துட்டு வரேன்" என்று எழுந்தார்.

"சாப்புட வந்துடுங்க, தோ நா சமைச்சுடுறேன்'" என்றாள் அந்தப் பெண்மனி.

"வேணாம்மா! சிரமப்படாதீங்க" என்று சிதம்பரம் மறுத்தும் அவள் மேலும் வற்புறுத்தவே, "சரி! தப்பா எடுத்துக்காதீங்க - நா திடீர்னு வந்துட்டதாலே வீட்டுலே பதார்த்தமெல்லாம் இருக்குதோ என்னுமோ - இத வச்சுக்கிங்க" என்று அவள் கையில் கொஞ்சம் பணத்தைக் கொடுத்து விட்டு வெளியே வந்தார். "வந்துடுங்க" என்று அப்புவும் சொல்வது கேட்டது.

வெளியே வந்து கிழக்கு நோக்கி கொஞ்ச தூரம் நடந்தார். அவரது பால்ய சினேகிதி கண்ணம்மா இருந்த வீட்டைத் தேடினார். ஒரு சிதைந்த, பாதி இடிந்த கூரைவீடு தான் இருந்தது. பக்கத்தில் மணியக்காரத் தாத்தா வீடு இருந்ததே! உயரமான அகன்ற கல்வீடு அது. அதுவும் பாதி இடிந்த நிலையில், ஓடெல்லாம் சரிந்து அலங்கோலமாய் இருந்தது. கண்ணம்மாவுடன் சிறுபிள்ளையாய் அவர் விளை யாடிய அகன்ற திண்ணை மட்டும் அப்படியே இருந்தது. திண்ணையின் ஓரம் முழுதும் கருங்கல் பதித்தது. அதில் தூசில்லாத இடமாகப் பார்த்து அமர்ந்தார்.

வீட்டுக்காரத் தாத்தா மணியக்காரரில்லை. அவரது மகன் தான் - சிதம்பரத்துக்கு சிற்றப்பா முறை வேண்டும் - மணியக்காரராக இருந்தார். அவர் வீட்டுத் தாத்தா என்பதால் அவர் 'மணியக்காரத் தாத்தா' என்று அழைக்கப் பட்டார். பக்கத்து வீடு கண்ணம்மாவின் வீடு என்பதால் சிதம்பரம் அந்தத் திண்ணையில்தான் அவளுடன் சிறு வயதில் விளையாடுவார். இந்தத் திண்ணையில், மணியக்காரத் தாத்தா அவருக்கும் கண்ணாம்மாவுக்கும் எவ்வளவு ரசமான கதைகளைச் சொல்லியிருக்கிறார்! பின்னாளில் சிதம்பரமும் ஒரு கதைசொல்லி ஆனதற்கு அவரும் ஒரு காரணி எனலாம்.

இப்போது நினைத்துப் பார்க்கையில் அந்தத் தாத்தா எவ்வளவு சுவாரஸ்யமான மனிதர் என்று தோன்றவும், மனத்திரையில் அவரது சித்திரம் ஓடுகிறது.

தாத்தா நல்ல உயரம். ஆறடி இருக்கலாம். டார்சான் படத்தில் பார்க்கிற மாதிரி அகன்ற பாறை போலத் தோன்றும் மார்புகளும் கரளை கரளையான தோள் மற்றும் முண்டாக்களும் நீண்டு திரண்ட கைகளும் வலுவாய் ஊன்றி நிற்கும் கால் களுமாய் ஆஜானுபாகுவாய் இருப்பார். இடுப்பில் ஒரு நாலு முழ வேட்டியைத் தார்ப்பாச்சிக் கட்டி இருப்பார். தோளின் ஒரு புறமாய் நீல ஈரிழைத் துண்டு தொங்கும். மார்பிலும் முழங்கைகளிலும் 'சவசவ' என்று கருத்தமுடி கரடி போன்ற தோற்றத்தைத் தரும். முன் தலை முழுக்க வழுக்கையாகி பின்னால் அர்த்தச் சந்திரன் போலக் கொஞ்சமாய் முடியுடன் இருப்பார்.

சிதம்பரம் ஆரம்பப் பள்ளியில் படிக்கும்போதே தாத்தாவுக்கு எண்பதுபோல வயதாகி இருந்தது. ஊரிலேயே மூத்தவர் அவராகத்தான் இருக்கவேண்டும். எல்லோருடைய வீடுகளிலும் நடக்கிற நல்லது கெட்டதுகளில் அவர் நிச்சயம் இருப்பார். அது போல ஊர்ப் பொது விஷயங்களிலும் அவர் முன் நிற்பார். அவர் இருந்தவரை ஊரில் திருட்டுப் பயம் கிடையாது. தாத்தாவுக்கு சிலம்பம், குஸ்தி எல்லாம் தெரியும். காலையில் பழையதும் கெட்டித் தயிரும் சுண்டக்குழம்பும் சாப்பிட்டு, வஞ்சனை இல்லாது வளர்ந்த உடம்பு. அவர் உடம்பே அதற்கு சாட்சி சொல்லும். இளவட்டம் ஒன்று அவரால் பயிற்சி தரப்பட்டு இரவில் ரோந்து வருவதும் எங்காவது திருடன் அரவம் ஏற்பட்டால் தாத்தா தலைமையில் உடனே ஊரைச் சுற்றி கையில் கனத்த தடி, சுளுக்கு சகிதம் வளைத்து, திருடன் எந்த வழியாலும் வெளியேறிவிடாதபடி காபந்து செய்தும் வந்தார்கள்.

அவர் இருந்தவரை திருடர்களுக்கு அந்த ஊர் என்றாலே பயம்தான். தாத்தா திருடர்களை மடக்கிய கதைகள் நிறைய.

மொட்டப்பிள்ளை என்றொரு பயங்கரத் திருடன். பக்கத்து ஊர்க்காரன்தான். அவன் பெயரைச் சொல்லியே - "தோ மொட்டப்பிள்ளயக் கூப்பிடவா?" என்று மிரட்டியே பிள்ளைகளைப் பணியவைத்து விடுவார்கள். ஆள் மொட்டைத் தலையுடன், கட்டுமஸ்தான உடம்புடன் சினிமாவில் வரும் தடிமுரடன் மாதிரி இருப்பான். பெரிய முட்டைக்கண்கள் எப்போதும் தூரத்திலேயே லயித்திருக்கும். அவன் தெருவில் நடந்தால் எதிரே வருபவர்கள் அவன் கண்ணுக்குப் பூச்சிகள் பறப்பது போலத் தெரியுமாம். தாத்தாவிடம் ஒருதடவை அவன் பிடிபட்ட பிறகு உள்ளூர், பக்கத்து ஊர்களில் தன் வேலையைக் காட்டுவது இல்லை. போலீசால் அவனைப் பிடிக்க முடியவே இல்லை. பெரிய, தலைக்குமேல் உயரமான முள்வேலியைக் கூட அனாயசமாய்த் தாண்டித் தப்பித்து விடுவான். அவனது சாகசங்கள் பற்றியும் அவனது குணாதிசங்கள் பற்றியும் தாத்தா சிதம்பரத்துக்கும் கண்ணம்மாவுக்கும் கதைகதையாய்ச் சொல்லி இருக்கிறார்.

தாத்தாவிடம் மொட்டப்பிள்ளை பிடிபட்ட கதையை பலமுறை கேட்டும் அலுத்ததில்லை. மொட்டப்பிள்ளை கன்னம் வைத்துத் திருடுவதில் பலே கில்லாடி! தாத்தாவுக்கு வீட்டின் எப்பகுதியில் எப்படிக் கன்னம் வைப்பார்கள், எப்படி உள்ளே நுழைவார்கள் என்பதெல்லாம் அத்துபடி. அதனால் ஒருமுறை அவர் வீட்டிலேயே மொட்டப்பிள்ளை கன்னம் வைத்தபோது அவர் ஒருவராகவே அவனை மடக்கிக் கட்டிப் போட்டார்.

நடு ஜாமம் கழிந்து எல்லோரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் வேளையில், தூக்கம் வராது படுக்கையில் புரண்டுகொண்டிருந்த தாத்தாவுக்கு, ஏதோ சுவரில் கல் பெயர்கிற மாதிரி சத்தம் கேட்கவே உஷாராகி, சத்தம் காட்டாமல் எழுந்து வீட்டுக் குள் ஒருமுறை சுற்றிவந்தார். கல் பெயரும் சத்தம் தொடர்ச்சியாக இல்லாமல் விட்டு விட்டுக் கேட்டது. காமிரா உள்ளில் இருந்துதான் சத்தம் வந்தது. தாத்தா அடிமேல் அடிவைத்து சத்தம் வந்த சுவர் அருகே போய் நின்று காதைச் சுவரில் வைத்துக் கேட்டார். நிச்சயம் யாரோ கன்னம் வைக்கிறான் என்று தெரிந்துவிட்டது. தாத்தா பதற்றப்படவில்லை. யாரையும் துணைக்கு அழைக்கவில்லை. சுவர் அந்தக்கால -ஒன்றரை அடி அகலமான, மண்ணைக் குழைத்துக் கட்டிய செங்கல் சுவர். அதனால் வெளிப்புறக் கற்கள்தாம் பெயந்து விழுந்து கொண்டிருந்தன. இன்னும் உள் பக்கம் பெயரவில்லை.

தாத்தா வீட்டிலிருந்த தடிமனான தாம்புக் கயிற்றை எடுத்து வந்தார். கூடத்தில் இருந்த கல் உரலை சத்தம் காட்டாது அலாக்காகத் தூக்கி வந்து கல் பெயரும் சத்தம் வந்த இடத்துக்கு அருகில் சற்றுத் தள்ளிப் போட்டார். தாம்புக் கயிற்றின் ஒரு முனையைக் கல்லுரலின் உடுக்கை போன்ற நடுப்பகுதியில், உருவிக் கொள்ளாதபடி இறுக்கிக் கட்டினார். கயிற்றில் சுருக்குப் போட்டு, குறவன் காடை கவுதாரி பிடிக்கக் கண்ணி வைக்கிற மாதிரி - ஆள் உள்ளே கால் வைக்கும் இடத்தில் வட்டமாக அகட்டிவைத்து மறுமுனையைக் கையில் பிடித்தபடி கல்லுரலுக்கு எதிர்ப் புறம் சுவரோரமாக குந்தி உட்கார்ந்து கொண்டார். கன்னம் இடுகிறவன் முதலில் தலையை உள்ளே விடமாட்டான். காலைத்தான் முதலில் உள்ளே விட்டு நோட்டம் பார்ப்பான். யாராவது விழித்திருந்து பிடித்தாலும் தலை போய்விட்டால் என்ன செய்வது? தாத்தாவுக்கு அந்த சூட்சுமம் தெரியும். அதனால் கால்கள் இரண்டும் இறங்கியதும் சுருக்கை இழுத்து கால்களைக் கட்டிவிடக் காத்திருந்தார்.

செங்கற்கள் நிதானமாய் அவசரமில்லாமல் பெயர்ந்து, உள்பக்க கல்லும் இழுக்கப்பட்டது. முதலில் ஒரு கை உள்ளே நுழைந்து சுழற்றி ஏதும் தட்டுப்படுகிறதா என்று நோட்டம் பார்த்தது. எதுவும் தட்டுப் படாததால் கொஞ்சம் கொஞ்சமாக மேலும் கற்கள் பெயர்க்கப்பட்டன. துவாரம் பெரிதாகி ஒரு ஆள் தாராளமாய் இடிக்காமல் நுழைகிறபடி ஆனதும் தாத்தா உஷாரானார். மூச்சு விடும் சத்தம் கூடக் காட்டாமல், கால்கள் உள்ளே இறங்கக் காத்திருந்தார். பின்பக்கமாக ஒவ்வொரு காலாக உள்ளே இறக்கி கால்களை ஊன்றி, இடுப்பு உள்ளே நுழைகையில் தாத்தா 'விசுக்'கென்று சுருக்கை இழுத்தார். கால்கள் பதறித் துள்ளி வெளியேற முயன்றன.ஆனால் சுருக்கு வலுவாய்க் கால்களைப் பற்றி இழுத்தன. மறுபக்கம் கயிறு கல்லுரலில் கட்டப்பட்டு இருந்தததால், கள்ளனின் காலை உதறி இழுக்கும் முயற்சி வெற்றி பெறவில்லை. தாத்தா கயிற்றை விடாது பிடித்தபடி துளையருகில் வந்து அவனது இடுப்பை இறுக்கிப் பிடித்துக் கொண்டார். என்ன திமிறியும் அவனால் தாத்தாவின் உடும்புப் பிடியிலிருந்து விடுபட முடியவில்லை. முரட்டுத்தனமாக அவனை உள்ளே இழுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் அவனைக் கீழேதள்ளி, கல்லுரலுடன் கட்டிப் போட்டார்.

பிறகு விளக்கை ஏற்றி எடுத்து வந்து ஆளைப் பார்த்தால் அவன் மொட்டப் பிள்ளை என்று தெரிந்தது. "எலே! எங்கிட்டியே ஒன் வேலையக் காமிக்க வந்துட்டியா?" என்று நக்கலாய்க் கேட்டார். அவன் எங்கேயும் இப்படி அகப்பட்டுக் கொண்டதில்லை. கிழவர் லேசுப்பட்ட ஆளில்லை என்று தெரிந்ததும் சரணாகதி அடைந்து விட்டான். பொழுது விடியட்டும் என்று பக்கத்தில் சற்று தள்ளி துண்டை விரித்துப் படுத்துவிட்டார்.

விடிந்ததும் கதவை திறந்து ஆட்களை அரவங்காட்டி, கும்பல் கூடியதும் கட்டை அவிழ்த்து பின்கட்டாய்க் கட்டி அவனைத் தெருவுக்குக் கொண்டு வந்து திண்ணைத் தூணில் கட்டி நிறுத்தினார். ஊரே திரண்டு வந்து வேடிக்கை பார்த்தது.

ஆளாளுக்கு ஒன்று சொன்னர்கள். அப்போதெல்லாம் போலீசுக்குப் போவதில்லை. மக்களே தண்டம் கொடுத்து விடுவார்கள். தாத்தாதான் இப்போது தண்டம் விதிக்க வேண்டியவர், மொட்டப்பிள்ளையையே என்ன செய்வது என்று கேட்டார். அவன் மிகவும் பணிவாக "சாமி! நீங்க இப்பிடி ஒருத்தர் இருக்கறது தெரியாம வந்துட்டேன். இனிமே இந்த ஊருக்குள்ளே சத்தியமா நொழைய மாட்டேன். மன்னிச்சு உட்டுடுங்க" என்று சொல்லவும், தாத்தாவுக்கு அவனது நாணயம் தெரியுமாதலால் எல்லோரும் வேண்டாம் என்று தடுத்தும் பெருந்தன்மையோடு அவனைக் கட்டவிழ்த்து விடுவித்தார். அவன் தாத்தாவின் முன்னால் விழுந்து கும்பிட்டு எழுந்து 'விறுவிறு'வென்று போய் விட்டான். அதற்குப் பிறகு தாத்தா இருந்தவரை அவன் தன் வாக்கைக் காப்பாற்றினான். அந்த ஊர் வழியே கூடப் போகாமல் விலகியே நடந்தான்.

இதுபோன்ற தன் கள்ளர்களைப் பிடித்த சாகசத்தையும் பேய் பிசாசுகளைச் சமாளித்த சாகசங்கள் பற்றியும் மயிர்க் கூச்செறியும்படி ரசமாகச் சொல்லி இருக்கிறார். இப்போதும் அவரே சொல்வது போலவே இருக்கிறது. கண்ணம்மாவும் சிதம்பரமும் திறந்த வாய் மூடாமல் கேட்டிருப்பார்கள். அவர்களுக்கு தாத்தாதான் அந்த இளம்வயதில் பிரமிப்பைத் தந்த ஹீரோ. இப்போது அவரது சாகசங்களைப் பற்றி பேசிப் பகிர்ந்துகொள்ள கண்ணம்மா இல்லையே என்று தோன்றியது. தாத்தா சிதம்பரம் கல்லூரிக்குப் போன காலத்திலேயே காலமாகிவிட்டதாகச் சொன்னார்கள். கண்ணம்மாவும் அப்போதே அவளது பாட்டி வீட்டுக்குப் போய்விட்டாள். இந்த வயதில் அவளைப் பார்த்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் என்று எண்ணிப் பார்த்தார்.

(தொடரும்)

No comments: