கண்ணம்மாவின் பெரியம்மாவுக்குக் குழந்தை இல்லாததால், அவளைக் கைக்குழந்தையாய் இருக்கும்போதே அவள் அம்மாவிடமிருந்து தூக்கி வந்து வளர்த்து வந்தார். ஆரம்பப் பள்ளியில் சிதம்பரம் அரிச்சுவடி வகுப்பில் சேர்ந்த அன்றைக்குத்தான் கண்ணம்மாவும் அவரது வகுப்பில் சேர்ந்தாள். சின்னப் பள்ளிக் கூடம் என்பதால் எந்த வகுப்பிலும் ஐந்து ஆறு பிள்ளைகளுக்கு மேல் இல்லை. சிதம்பரம் வகுப்பில் ஐந்து பேர் தான். அவரும் அவரது பக்கத்து வீட்டுப் பையனும் தவிர, கண்ணம்மாவுடன் மேலும் இரண்டு பெண்கள். சேர்ந்த அன்றே கண்ணம்மா சிதம்பரம் பக்கத்தில்தான் வந்து உட்கார்ந்தாள். அப்போது ஏற்பட்ட நட்பு அந்தப் பள்ளியின் ஐந்தாம் வகுப்பு படிப்பு முடிகிறவரை தொடர்ந்தது.
கண்ணம்மாதான் வகுப்பிலும் வெளியிலும் அவருக்கு உற்ற தோழியாக இருந்தாள். பள்ளி விட்டதும் வீட்டுக்குப் போய் புத்தகப் பையை வைத்துவிட்டு கண்ணம்மா வீட்டுக்கு விளையாடப் போய்விடுவார். மணியக்காரத்தாத்தா வீட்டுத் திண்ணயில்தான் அவர்களை அதிக நேரமும் காண முடியும். சாப்பாட்டு நேரமும் தூங்கும் வேளையும் தவிர அவர்கள் இணை பிரிவதே இல்லை.
கண்ணம்மாவின் பெரியப்பா பெரிய வசதியுள்ளவர் அல்ல. சொந்தமாக ஒரு கூரை வீடும் கொஞ்சம் நிலமுமிருந்தது. பிரச்சினையற்ற எளிய வாழ்க்கை.
பெரியப்பாவைவிட பெரியம்மா தான் ஊரில் எல்லோருக்கும் அதிகம் பரிச்சயம். பெரியம்மா கைவேலைகளில் திறமை மிக்கவர். அந்தக் காலத்தில் பெண்களின் பொழுதுபோக்கான - வாசற்படிக்கு மணிச்சரம் கோர்த்தல், அட்டையில் பூக்கள் பறவைகள் ஓவியங்களை மணிகள் கொண்டு தைத்தல், கண்ணாடி பாட்டிலுக்குள் மணிகள், சிறு பொம்மைகளை இறக்கி மரம் உருவாக்குதல் போன்ற நுட்பமான கலையில் வல்லவர். ஊர்ப் பெண்கள் பலருக்கும் அக்கலையைச் சொல்லித் தந்தார். யார் வீட்டிலாவது திருமணம் மஞ்சள்நீராட்டு, சீமந்தம் என்றால் பெண்களுக்கு அலங்காரம் செய்ய அவரைத்தான் அழைப்பார்கள். நலுங்கு, கோவிலில் நவராத்திரி கொலு ஆகியவற்றில் பாட அவரை விட்டால் ஊரில் வேறு ஆள் இல்லை. நல்ல குரல்வளம். அவர் முதலில் பாட, நாதஸ்வரக் கருப்பமுதலி அதை நாதஸ்வரத்தில் வாங்கி வாசிப்பது ஊரில் எல்லோருக்கும் மிகவும் பிடித்த விஷயம்.
ஆரம்பப்பள்ளி படிப்பு முடிந்து சிதம்பரம் அடுத்த நகரத்துப் பள்ளியில் மேல் படிப்புக்காக பெரியம்மா வீட்டுக்குப் போய்விட்டார். அப்போது கண்ணம்மாவும் தன் அம்மா ஊருக்குப் படிக்கப் போய்விட்டாள். அப்போது ஏற்பட்ட பிரிவு அப்படி ஒன்றும் மறக்க முடியாததாக இருந்து விடவில்லை. அதற்குப் பிறகு பள்ளி இறுதி வகுப்புக்கு முடிகிறவரை கண்ணம்மாவை அவர் பார்க்கும் வாய்ப்பே கிட்டவில்லை. வளரும் வயதில் புதிய சூழ்நிலையும் புதுப்புது நட்பும் கண்ணம்மாவை அவரது நினவிலிருந்து நழுவச் செய்து விட்டது.
ஆனால் ஆறு ஆண்டுகளுக்குப் பின் கண்ணம்மாவைத் தற்செயலாய் அவளது ஊரான தன் மாமாவின் ஊருக்குப் போனபோது சந்திக்க நேர்ந்தபோது அவரின் பழைய நட்பு மீண்டும் கிளைத்து அவரை உருகவைத்தது.
பள்ளி இறுதிவகுப்புத் தேர்வு எழுதி முடித்தவுடன் ஊரிலிருந்து வந்த மாமாமகன் அழைப்பின் பேரில் அவனுடன் அந்த ஊருக்குப் போனார். அதுதான் கண்ணம்மாவின் ஊரும் என்று தெரியும்தான். அவளையே மறந்து போனதால் அப்போது அவருக்கு அந்தப் பிரக்ஞை இல்லை.
போன மறுநாள் மாலை மாமா மகனுடன் அந்த ஊர்த் தெப்பக்குளத்தைப் பார்க்கலாம் என்று புறப்பட்டார்கள். குளத்தை நெருங்குகையில் எதிரே சில இளம்பெண்கள் இடுப்பில் குடத்துடன் வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் இவர்களை நெருங்கியதும் ஒருபெண் மட்டும் வரிசையை விட்டு விலகி சிதம்பரத்தின் முன்னால் வந்து நின்று உற்றுப் பார்த்தாள். சிதம்பரம் 'யார் அவள், ஏன் தன்னை அப்படிப் பார்க்கிறாள்' என்று புரியாமல் விழித்தார். "அய்! நீ சிதம்பரம்தானே?" என்று வியப்புடன் கூவினாள் அவள்.
சிதம்பரம் மேலும் குழம்பிவராய் வெறித்துப் பார்க்க, "என்னெத் தெரியலே? நான் கண்ணம்மா!" என்றாள் உற்சாகத்துடன். சிதம்பரத்துக்கு மின்சாரம் பாய்ந்த மாதிரி ஒரு அதிர்ச்சி உண்டாயிற்று. 'கண்ணம்மாவா?' என்று பொறிதட்டியது. பழைய நினைவுகள் பளிச்சிட, கண்கள் வியப்பால் விரிய, 'ஆங்! நீ....நீ எங்கே இங்கே....?" என்று திணறினார்.
" நான் கேக்க வேண்டிய கேள்விய நீ கேக்குறியே? இதானே என் ஊரு?" மறந்து போச்சா?" என்று அவள் நகைத்தாள்.
அவளையே மறந்துவிட்ட நிலையில் அவªது ஊர் மட்டும் எப்படி நினைவில் இருக்கும்? சங்கடத்துடன் நெள்¢ந்தபடி, "இது எங்க மாமா மகன். இவங்க ஊட்டுக் குத்தான் வந்துருக்கேன்" என்றார்.
"உங்க மாமா ஊடு எனக்குத் தெரியுமே! உங்கம்மா பொறந்த ஊரும் இதானே? எங்க ஊட்டுக்கு வாயேன்" என்று அவள் அழைத்தாள். அதற்குள் உடன் வந்த பெண்கள் போக அவசரம் காட்டவே, "சாய்ங்காலம் எந்தம்பிய அனுப்பறேன். அவசியம் வரணும்" என்று சொல்லி விட்டு அவர்களுடன் புறப்பட்டாள்.
மாமா மகன் கண்ணைச் சிமிட்டியபடி, "யாருடா இது எனக்குத் தெரியாமே இங்கே உனக்குச் சினேகிதம்?" என்றான். "அழகா இருக்காளே!"
சிதம்பரத்துக்கு அப்போதுதான் - 'கற்பனையில்கூட தான் எண்ணிப் பார்த்திராத சௌந்தர்யத்துடன் எதிரே நிற்பவள் - தன்னோடு பாலபருவத்தில் இணைந்து இழைந்து விளையாடிய கண்ணம்மாவா?' என்ற பிரமிப்பு தோன்ற மயங்கி நின்றார்.
''என்னடா? திகைச்சுப்போயி நின்னுட்டே! உனக்கே தெரியலையா? அவ ரொம்ப நாள் பழகுனமாதிரி பேசுறா, நீ எதுவுமே தெரியாதவன் மாதிரி நடிக்கிறே?" என்று மாமா மகன் சீண்டினான்.
"அவ எங்கூட சின்னவயசுலே எங்க ஊர்லே ஒண்ணா படிச்சவ. பால்ய சினேகம். இப்ப வளந்துட்டதாலே தெரியலே!" என்று பதில் சொன்னார்.
"அப்ப உனக்குப் பால்ய சினேகிதி கெடச்சுட்டா! இனிமே என் தயவு தேவைப்படாது" என்று அவன் இடித்தான். " அப்படியெல்லாம் இல்லே!" என்றபடி மெதுவாக நடந்தார்.
வீடு திரும்பியபின் சிதம்பரத்துக்குக் குற்ற உணர்ச்சி மேலிட்டது. அட! எப்படி அத்தனை நெருக்கமான சினேகிதத்தை மறந்தோம்? அவள் எப்படிக் கொஞ்சமும் மறவாமல் நினவில் இருத்தியிருக்கிறாள்! எவ்வளவு பாசமாகப் பேசுகிறாள்! தன்மீதே கோபம் வந்தது அவருக்கு. சாயங்காலம் எப்போது வரும், எப்போது அவளது தம்பி வந்து அழைத்துப் போவான் என்ற துடிப்பு ஏற்பட ஆவலுடன் அந்த நேரத்துக்காகக் காத்திருந்தார்.
மாலை 5 மணிக்கு கண்ணம்மாவின் தம்பி வந்தான். அவனைக் குழந்தையாகப் பார்த்தது. இப்போது பெரிய பையனாகி இருக்கிறான். முகஜாடையைக் கொண்டே அவன்தான் கண்ணம்மாவின் தம்பி என்று சிதம்பரத்துக்குத் தெரிந்து விட்டது.
"சிதம்பரம் யார்?'" என்று அவன் கேட்டான்.
"நாந்தான். வா போகலாம்" என்று அவனுடன் புறப்பட்டார்.
"ஏய்! சீக்கிரம் வந்துடு" என்று சொல்லி அனுப்பினான் மாமா மகன்.
வாயிலிலேயே காத்திருந்தாள் கண்ணம்மா.
"வா வா!" என்று முகம் மலர கண் அகல வரவேற்று உள்ளே அழைத்துப் போனாள். அங்கே அவளது அம்மா, பெரியம்மா எல்லோரும் அன்போடு அவரை வரவேற்றுப் பேசினார்கள். பெரியம்மா " அட, நம்ம சிதம்பரமா! என்னமா வளந்துட்டே!" என்று ஊரில் அம்மா அப்பா எல்லோரையும் விசாரித்தார். பெரியப்பா இறந்துபோனதையும் தான் கண்ணம்மா வீட்டோடு வந்து விட்டதையும் சொன்னார்.
" நீ என்ன படிக்கிறே?" என்று விசாரித்தாள் கண்ணம்மா.
பள்ளி இறுதித் தேர்வு எழுதி இருப்பதையும் மேற்கொண்டு கல்லூரியில் சேர இருப்பதையும் சொன்னார். அவள் எட்டாம் வகுப்புவரைதான் படித்தாதாகவும் வயதுக்கு வந்து விட்டதால் வீட்டில் நிறுத்தி விட்டார்கள் என்றும் சொன்னாள். "என்னை ஞாபகம் வச்சிருந்தியா? நான் ஒன்ன மறக்கவே இல்ல" என்றாள். தான் அவளை மறந்து போனதை எப்படிச் சொல்வது?
இருட்டியதும் சிதம்பரம் விடை பெற்றுக் கொண்டார். "அடுத்த லீவிலும் அவசியம் வரணும்" என்றாள் கண்ணம்மா.
'அப்பா அம்மா எல்லாரியும் கேட்டதாச் சொல்லுப்பா" என்று பெரியம்மாவும் கூறி வழியனுப்பினார்கள்.
அடுத்த கோடை விடுமுறையில் போகவில்லை. ஆனாலும் கண்ணம்மாவைப் போய்ப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் மட்டும் இருந்து கொண்டே இருந்தது.
இண்டர் முடித்ததும் அந்த கோடை விடுமுறையில் மாமாவின் ஊருக்குப் போனபோது கண்ணம்மாவின் வீட்டுக்குப் போனார்.
"வாப்பா சிதம்பரம். நல்ல நேரத்துக்கு வந்தே. கண்ணம்மாவுக்குக் கல்யாணம் நிச்சயமாயிருக்கு1" என்று வரவேற்றார் பெரியம்மா. "இதோ இவந்தான் - எங்க தம்பிதான் - கண்ணம்மாவுக்குத் தாய் மாமாதான் மாப்பிள்ள".
அந்தத் தாய் மாமாவைச் சிதம்பரத்துக்குத் தெரியும். சின்ன வயதில் அக்கா வீட்டுக்கு அவன் வந்திருக்கையில் பார்த்தது. அப்போதே அவன் வாலிப வயதில் இருந்தான். இப்போது முன் வழுக்கை விழுந்து வயதானவனாகக் காணப்பட்டான்.
கருத்து மெலிந்து நோயாளி போல இருந்தான். இவனா கண்ணம்மாவை மணக்கப் போகிறான் என்று மனம் சுருங்கியது.
அவனுக்கு இவனை முதலில் அடையாளம் தெரியவில்லை என்றாலும் பெயர் சொல்லி பெரியம்மா பேசியதும் புரிந்து கொண்டான்.
"அட, சிதம்பரமா? பெரியஆளா வளந்துட்டே!" என்று புருவம் உயர்த்தினான். அருகிலிருந்த ஒரு வயதான பெரியவரைக் காட்டி, "இது எங்க அப்பா, நீ பாத்திருக்க மாட்டே " என்று காட்டி அவரிடம் சிதம்பரம் யார் என்று கூறினான். பெரியவர் அவனைத் தெரிந்து கொள்வதில் உற்சாகம் காட்டவில்லை. கண்ணம்மாவின் அம்மாவும் வந்து பேசினார். "இரு கண்ணம்மாவைக் கூப்பிடறேன்" என்று உள்ளே போனார்.
சிதம்பரம் வந்திருப்பதை அறிந்து கண்ணம்மா உள்ளே இருந்து ஓடிவந்தாள்.
"வா சிதம்பரம். இப்பதான் ஞாபகம் வந்துதா? ஏன் போன லீவுக்கு வரலே?" என்றாள் மனக்குறையுடன்.
"த்ச" என்று சலித்துக் கொள்கிற சத்தம் வந்தது. பெரியவர்தான்!
"கல்யாணமாமே? மாமாதான் மாப்பிள்ளயாமே?" என்று கேட்டார்.
அதைக் கேட்டதும் அவளது முகம் சட்டென்று ஒளி இழந்ததை சிதம்பரம் கவனித்தார். அவளுக்கு விருப்பமில்லையோ? அவள் பதில் ஏதும் சொல்லவில்லை. எல்லோரும் இருந்ததால் அவளிடம் மனம் விட்டுப்பேச முடியவில்லை. நிறைவற்ற சந்திப்பாக அது முடிந்தது. "பத்திரிகை வரும்! அவசியம் கல்யாணத்துக்கு வா" என்று பெரியம்மா சொன்னார். கண்ணம்மாவைப் பார்த்தார். அவளிடமிருந்து ஏதும் அழைப்பு இல்லை. சற்று ஏமாற்றத்துடனேயே ஊர் திரும்பினார்.
பிறகு இரண்டாண்டுகள் கழித்து பட்டப்படிப்பு முடித்த கோடையில்தான் அவளைப் பார்த்து வரலாம் என்று அவளது ஊருக்குப் போனார். கல்லூரித் தேர்வு நேரமானதால் திருமணத்துக்குப் போகவில்லை. நேரே அவளது கணவன் வீட்டுக்குப் போனார். தெருக்கதவு சார்த்தி இருந்தது. படியேறி வாசலை நெருங்கினார்.
"ஆருப்பா அது? கேக்கம கொள்ளாம ஏறி வர்ரே?" என்று ஒரு கிழக்குரல் அதட்டியது. அப்புறம்தான் தெரிந்தது - நடையின் ஒரு ஓரத்தில் கண்ணம்மாவின் மாமனார்க் கிழவர் ஒரு நார்க்காட்டிலில் படுத்திருந்தது. கிழவர் எழுந்து கடுகடுப்புடன் அவனைப் பார்த்தார்.
"நாந்தான் சிதம்பரம் - புத்தூரு" என்றார் தயக்கத்துடன்.
"எங்க வந்தே?" என்றார் கிழவர் நிஷ்டூரமாக.
சிதம்பரத்து அதிர்ச்சியாக இருந்தது. என்ன இது ? வரவேற்பே சரியில்லை!
"எல்லாரையும் பார்க்கலாம்னு வந்தேன்" என்றார் ஏதோ குற்றம் புரிந்துவிட்ட தொனியில்.
"ஒண்ணும் பாக்கவேணாம் போ! ஆருக்கும் இங்க கொம்பு மொளைக்கல!" என்று விரட்டினார் கிழவர். சிதம்பரத்துக்கு மனம் சுருங்கியது. அவமானத்தை விழுங்கிக் கொண்டு, திரும்பி விடலாமா என்று எண்ணியபோது கதவு திறந்தது.
கண்ணம்மாவின் கணவன் வாயிற்படி அருகில் நின்று அவரை வேண்டாத விருந்தாளி போலப் பார்த்தான். வா என்று அழைக்கவில்லை. 'சரி, ஏதோ சிக்கல்' என்று தோன்றவே அவனை எதுவும் கேட்காமல் தலைகுனிந்தபடி படி இறங்கினார். "கதவச்சாத்திட்டு உள்ளபோடா! கண்டபயலும் தடதடன்னு உள்ள நொழையுறான்" என்று கிழவர் மகனிடம் கத்துவது கேட்டது.
பின்னங்கால் பிடரிபடவில்லை எனும்படி ஓடாத குறையாய் மாமா வீட்டுக் கும் போகாமல் பஸ் நிலையத்துக்கு ஓடினார். சுயபிரக்ஞையின்றி வீடு வந்து சேர்ந்தார். மாமா ஊருக்குப் போவதாய்ச் சொல்லிவிட்டுச் சென்றவர் போன சுருக்கில் திரும்பியதையும் முகம் சுரத்தில்லாது இருப்பதையும் கண்ட அவரது அம்மா என்ன நடந்தது என்று கவலையோடு விசாரித்தார். யாரிடமாவது சொல்லாவிட்டால் தாளாது போலிருக்கவே அம்மாவிடம் தனக்கு நேர்ந்த அவமானத்தை அழாக் குறையாய்ச் சொல்லி முடித்தார்.
"அடப்பாவி! அங்க ஏண்டா போனே? எனக்குத் தெரிஞ்சிருந்தா தடுத்திருப்பேனே!" என்றார் அம்மா கண்டிக்கும் குரலில். சிதம்பரத்துக்கு ஏதோ செய்யத் தகாதைச் செய்துவிட்ட மாதிரி ஒரு கலவரம் மனதில் ஏற்பட "ஏம்மா! என்ன ஆச்சு?" என்றார் பதற்றமாக. "கண்ணம்மாவுக்கு ஒண்ணுமில்லியே?"
"அந்தத் தொத்தல் மாமங்கூட வாழப் புடிக்காம எவங்கூடியோ ஒடிப் போயிடுச்சு. தேடிப்புடிச்சாந்து ஊட்டுலே அடச்சி வச்சிருக்கானுவோ. ஆரு போனாலும் அவளப் பாக்க, அவகிட்டப்பேச உடுறதில்ல! அது தெரியாம அங்க ஏன் போனே?" என்று அம்மா அங்கலாய்த்தார்.
சிதம்பரத்துக்கு அதிர்ச்சிமேல் அதிர்ச்சியாக இருந்தது. கண்ணம்மாவைப் பார்க்க முடியாதுபோனதைவிட அவளைப் பற்றிய அந்தக் குற்றச்சாட்டு பொறுக்க முடியாததாக இருந்தது. அப்படியே இடிந்துபோய் உட்கார்ந்துவிட்டார். கண்ணம்மாமீது அவருக்கு வெறுப்பு ஏற்படவில்லை. அவளுக்கு விருப்பமில்லாமல், வயதில் மிகவும் மூத்தவனுக்குக் கட்டி வைத்ததுதான் அவளது முடிவுக்குக் காரணமாய் இருக்கக்கூடும் என்று அவரது நட்பு மனம் அவளுக்காகக் கசிந்தது.
பிறகு அவளை அவர் பார்க்கவுமில்லை; பார்க்க முயலவும் இல்லை. இன்னும் அவள் தன் நட்பை நினைத்துக் கொண்டிருப்பாளோ என்று சிந்தனை ஓடியது.
"சாப்புட வாரீங்களா?" என்று தெருவில் குரல்கேட்டாது. அப்புவின் மனைவி தான். சிந்தனை கலைந்து "இதோ" என்று எழுந்து அவள் பின்னே நடந்தார்.
( தொடரும் )
Saturday, September 08, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment