இருவரும் கோயிலுக்கு முன் உள்ள அப்பாவு ஆசாரி வீட்டருகே வந்ததும் நின்றார்கள். சிதம்பரம் வீட்டைப் பார்த்தார். அதுவும் கூரை வீடுதான். ஆனால் சேதமில்லாமல் அவ்வப்போது பராமரிக்கப்பட்டு வருவது தெரிந்தது. திண்ணையின் பக்கச் சுவர் ஒன்றில் எம்.ஜி.ஆரின் வண்ணப் படம் பெரிதாக வரையப்பட்டிருந்தது. படம் தத்ரூபமாக இருந்தது.
"அட! யாருப்பா வரைஞ்சது இந்தப் படத்த? அப்பாவு ஆசாரி மகன் நடேச ஆசாரி இருக்காரா?" என்று கேட்டார் சிதம்பரம்.
"அவரும் காலமாயி ரெண்டு வருஷம் ஆச்சுங்க. இது அவரோட மகன் சண்முகம் வரைஞ்சது. அவனும் அப்பா மாதிரியே பெரிய ஓவியக்காரன்" என்றான் மருது.
"பாத்தியா 'குலக்கல்வி கல்லாமல் பாகம் படும்' கிறது சரியாத்தான் இருக்குது. வீட்டுலே இருக்கானா அவன்?"
"அவன் இப்ப துபாயிலே இருக்கான். அப்பா காலமாறதுக்கு முந்தியே அங்க போய்ட்டான். சாவு சேதி கேட்டு வந்து காரியமெல்லாம் முடிஞ்சதும் திரும்பப் போய்ட்டான்"
சிதம்பரத்துக்கு அதே திண்ணையில் நடேச ஆசாரி அமர்ந்து சுவரில் சித்திரம் தீட்டியதும், தான் அருகிருந்து பார்த்ததும் கண் முன் விரிகிறது. திரும்பி வீட்டேதிரே பார்த்தார். அங்கே அப்பாவு ஆசாரி கோவிலுக்காகச் செதுக்கிக் கொண்டிருந்த
ரிஷப வாகனத்தை அருகே உட்கார்ந்து தான் பார்த்ததும், சற்றுத் தள்ளி அவர் மகன் நடேச ஆசாரி கடைசல் பட்டறையில் ஏதோ ஒரு சித்திரவேலைப்பாட்டை உளி கொண்டு உருவாக்கிக் கொண்டிருந்ததும், தன் வேலைக்கிடையே அப்பாவு ஆசாரி அதைப் பார்த்து 'உளிய அழுத்திப் பிடிக்காதே' என்று திருத்தியதும் காட்சி காட்சியாகக் மனத்திரையில் ஓடுகிறது.
நடேச ஆசாரி மரம் மற்றும் சுதை வேலைகளிலும் வல்லவர். அப்பாவுக்குப் பிறகு அவர்தான் திரௌபதை அம்மன் கோவிலில் பாரதம் பாடிவந்தார். நல்ல இசை ஞானமும் உண்டு. பாரதக் கதை பாடும்போது நடத்தப்படும் 'கீசக வதம்' நாடகத்தில்
திரௌபதையாக அவர் வேஷம் போடுவார். ஊரில் சிறுத்தொண்டர் அன்னப்படையல் நடக்கும் போது அவர் தான் சிறுத்தொண்டர் வேஷம் அணிந்து, பிள்ளை இல்லாதவர்கள் வேண்டுதலின்படி மாவில் செய்த சீராளன் பிரதிமையை மேளதாளத்துடன்
ஊர்வலமாக எடுத்துச் செல்வார். மாரியம்மன் கோவிலின் முன் நடக்கும் படையலில் பிள்ளைக் கறிக்காக சீராளனை அரியும் போது அவருக்குச் சாமி வந்துவிடும். ஆவேசமாய் உடலை முறுக்கி, பிடிக்கு அடங்காமல் உருண்டு புரண்டு மூர்ச்சையாகி விடுவார். அவருக்கு வரும் ஆவேசத்தைப் பார்க்கவே ஊரில் பலரும் அடுத்த வருஷத் துக்காகக் காத்திருந்ததுண்டு. அடுத்து நடைபெறும் சிறுத்தொண்டர் நாடகத்திலும் அவர்தான் சிறுத்தொண்டர். வண்ணம் தீட்டுவதிலும் வல்லவர் என்பதால் எல்லோருக் கும் ஒப்பனை போடுவதும் அவர்தான். விஜயதசமியில் பெருமாள் கோவில் அம்பு போடும் விழாவுக்குப் புராணகால வில் அம்பு தயாரித்துத் தருவதும் அவர்தான். சிவன் கோவிலில் முருகனுக்கு விசேஷ நாட்களில் செய்யும் அலங்காரங்களுக்கு குருக்களுக்குப் பெரிதும் உதவுவது அவர்தான். காமுட்டித் திருவிழாவில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் ரதி மன்மதன் படங்களை வரைந்து தருவது அவர்தான்.
அவரது வலது காதில் எப்போதும் கூராகச் சீவிய நீளப் பென்சில் இருக்கும். ஊர் முழுக்கக் காலியாய் இருக்கும் தெருப்பக்கச் சுவர்களிலும், சிலரது வீட்டுத் திண்ணைச் சுவர்களிலும் சுவாமி படங்களை - நடராஜா, லட்சுமி, சரஸ்வதி,
விநாயகர் - என்று வரைந்தபடியே தென்படுவார். ஆனால் எல்லா உருவங்களுக்கும் முகம் மட்டும் முழுமை அடைந்திருக்காது. கண்கள் மட்டும் திறக்கப்படாமல் வெறும் வெள்ளை விழிகளாய் இருக்கும். அதனால் சித்திரங்கள் அழகாக இருந்தாலும் வெள்ளை விழியால் குருடன் நம்மைப் பார்க்கிற மாதிரி, ஒரு மாதிரி இருக்கும்.
அடுத்த வீடான அருணாசலப் பண்டாரத்தின் வீடு இருந்த இடம் குட்டிச் சுவர்களுடன் காலியாகக் காட்சியளித்தது.
"பண்டாரம் வீடு என்னாச்சு மருது? அவரோட வாரிசு யாருமில்லியா?" என்று கேட்டார் சிதம்பரம்.
"பண்டாரத்தின் பெரியமகன் சிவலிங்கம்தான் இதுலே ரொம்ப நாள் குடி இருந்தாரு. அவரும் ரெண்டு வருஷத்துக்கு முன்னால காலமாயிட்டாரு. அடுத்தவன் சுப்பராயலு - நம்மளோட சின்ன வயசுலே படிச்சவன் சிவங்கோயிலு மெய்காவலா இருந்தான். அவனும் அண்ணனுக்கு முந்தியே போய்ட்டான். வீட்டப் பராமரிக்க ஆருமில்ல. இடிஞ்சு குட்டிச் சுவராக் கெடக்கு" என்றான் மருது.
அந்தச் சிவலிங்கம் அப்பாவிடம் மிகுந்த விசுவாசமும் மரியாதையும் மிக்கவன். எப்போதும் அப்பாவுடன் வயற்காட்டில், நெல் களத்தில் இருப்பான். அப்பாவைப் பற்றி யாரும் எதுவும் அவன் முன்னிலையில் சொல்லிவிட முடியாது.
சிதம்பரத்துக்குப் பத்து வயசு இருக்கும்போது ஒருதடவை அவனுடன் நெல் களத்தில் காவல் இருக்க நேர்ந்தது. அப்பாவின் சாதுவான குணத்தை ஏமாளி எனக் கருதிப் பலரும் அப்பாவை ஏமாற்றி வருவதாகச் சொன்ன சிதம்பரம், "இந்த அப்பாவுக்கு ஒண்ணுமே தெரியலை! எல்லாரியும் நல்லவங்கண்ணு நெனைக்கிறாங்க" என்று எல்லா விடலைப் பையன்களும் பேசுகிறமாதிரி சொல்லிவிட்டார். சிவலிங்கம், கண்களை உருட்டி ஆவேசமாக "என்னா சொன்னீங்க தம்பி? நம்ம அப்பாவுக்கு ஒண்ணும் தெரியாதா? அவங்களை விட உங்குளுக்கு அதிகம் தெரியுமோ? சின்ன வயசு, புரியாமப் பேசுறீங்க. அப்பாரைவிட இங்க அதிகம் தெரிஞ்சவங்க ஆரு?" என்று சண்டைக்கு வந்துவிட்டான். அவன் போன்ற விசுவாசிகளை இப்போது பார்க்க
முடிகிறதா என்று சிந்தனை ஓடியது.
கோவில் வாசலை நெருங்கியதும் ஏதோ ஒரு மாற்றம் தெரிவதை சிதம்பரம் உணர்ந்தார். முன்பு, வாயிலுக்கு முன்மண்டபம் கிடையாது. இப்போது பெருமாள் கோவிலில் இருப்பது போலவே - கற்றளியாக இல்லாமல் - செங்கல்லால் ஆன முன்மண்டபம் அமைக்கப் பட்டிருந்தது.
''இது எப்பப்பா கட்டுனது? அப்பா ரொம்ப நாளாக் கட்டணும்னு சொல்லிக்
கிட்டிருந்தாங்களே!"
"அது அப்பா காலமானதுக்கப்றம் வடக்குத் தெரு ராசமாணிக்கம் முயற்சி எடுத்துக் கட்டுனாரு. மேலே போட்டிருக்கிற நீளமான பலகைக் கல்லு முழுக்க நம்ம அம்மா உபயம் - அப்பா ஞாபமாக் குடுத்தாங்க. ஊர் ஊர் ஊராப்போயி நன்கொட வசூல் பண்ணிக் கும்பாபிஷேகமும் அவருதான் பண்ணுனாரு. அது நடந்து பத்து வருஷம் ஆச்சி" என்றான் மருது.
கோயில் விமானத்தை நிமிர்ந்து பார்த்தார். வண்ணம் மங்கிபோயிருந்தது. பிரகாரத்தைச் சுற்றிப் பார்க்க விழைந்தார். இந்தப் பிரகாரத்தைச் சின்ன வயதில் தினமும் அப்பாவுடன் சுற்றியதுண்டு. பள்ளியில் ஏதாவது தண்டனையிருந்து தப்பவோ, ஆசைப்பட்டது கிடைக்கவோ அவர் பிரகாரத்தைச் சுற்றுவதாக வேண்டிக் கொள்வார். பிரச்சினையின் கடுமைக்கேற்ப சுற்றுக்களின் எண்ணிக்கை வித்தியாசப்படும். 'அப்பனே! கைலாசநாதரே! இன்னிக்கு வாத்யார்க்கிட்ட அடிவாங்காம இருக்கணும்'பா. உன்ன பத்து சுத்து சுத்துறேன்' என்று வேண்டிக் கொள்வார். எப்போதுமே வேண்டுதல் பலிக்கும் என்பதில்லை. ஆனால் பலிக்காவிட்டாலும் தெய்வக் குத்தம் வந்துவிடும் என்று சொன்னபடி பிரகாரத்தைச் சுற்றிவிடுவார். ஒரு தடவை நல்ல மழையில்கூட சொன்ன சொல்லைக் காப்பாற்ற குடையைப் பிடித்தபடி சுற்றி வந்திருக்கிறார். இப்போது நினைக்கும்போது சிரிப்பு வருகிறது.
பிரகாரத்தைச் சுற்றி இருந்த நந்தவனத்தைக் காணோம். அதற்கும் கோவில் உபயோகத்துக்குமான கிணறு மூடப் பட்டிருந்தது.
"எங்கப்பா நந்தவனம்?" என்றார் சிதம்பரம்.
"சரியான பராமரிப்பு இல்லாம காஞ்சு போச்சுங்க. கெணறும் வத்திப் போச்சு.வேதவிநேசக் குருக்கள் றக்கோயிலுக்கு மாறிப் போனதுக்கப்றம் நெலயா இங்கியே தங்கிப் பூசை பண்ணுற குருக்கள் யாரும் அமையிலெ. ராஜேந்திரப்பட்ட ணம் கோயில் குருக்கள்தான் காலையிலும் அந்தியிலும் வந்து பூஜை பண்ணிட்டுப் போவாரு. உச்சிக் காலப் பூஜை நிண்ணுபோயி ரொம்ப வருஷம் ஆகுது. ராசமாணிக்கம் இருந்தவரிக்கும் கோயிலுக்கு வந்து குத்தம் கொறயக் கேப்பாரு. அவரும் போனதுக்கப்றம் இந்தக் கோயிலப்பத்தி யாருக்கு அக்கறை? கோயில் நிர்வாக அதிகாரியும் ராஜேந்திரப் பட்டணத்திலியே ஆபீஸை வச்சிக்கிட்டு இங்கே வர்ரதே இல்ல. எளவட்டத்துக் கெல்லாம் அரசியல்லதான் நாட்டம். அதுலே ஏதாவது சுருட்டிப் பொழைக்கலாம். இங்க என்னா கெடைக்கும்? கோயில் நெலத்தக் குத்தகைக்கு எடுத்தவன்லாம் சரியாக் குடுக்கறதில்லே. நித்ய பூஜைக்கே தள்ளாட்டம்" என்று பெருமூச்சு விட்டான் மருது.
பேசிக்கொண்டே சன்னதிக்கு எதிரே இருந்த கண்டாமணிக்கருகில் வந்து நின்றார்கள். அந்தக் கோவிலின் கண்டாமனி பெரியது. பெருமாள் கோவில் நகரா 'டப டப' என்று பேரிரைச்சலோடு முழங்குகிறமாதிரி இந்த மணி 'டாங் டாங்' என்று
ஊர் அதிர முழங்குவதும் சிதம்பரத்துக்குப் பிடிக்கும். இரண்டுமே ஊர் முழுதுமே கேட்கும். கண்டாமணியை மெய்காவல் இழுத்து அடிக்கையில் அதன் மேலுள்ள காவடி போன்ற அமைப்பு முன்னால் வளைந்து வளைந்து - குனிந்து சிரம் தாழ்த்தி வணங்குகிறமாதிரி இருக்கும். அதைப் பார்க்க வேடிக்கையாய் இருக்கும்.
திரும்பி இடப்பக்கம் இருந்த குளத்தின் படித்துறையைப் பார்த்தார். அதுவும் உடைந்து சிதிலமாகி இருந்தது. குளமும் வற்றியும் தூர்ந்தும் பார்க்க வறட்சியாய்த் தெரிந்தது. படித்துறையின் இரண்டு புறமும் கரையில் சரக் கொன்றை மஞ்சள் வண்ணத்தில் சரம் சரமாய்ப் பூத்துத் தொங்கும். காலைச் சூரியனின் கதிர்கள் அந்த மஞ்சள் பூக்களின் வழியே ஊடுருவி ஒருவிதப் பரவசத்தைக் கொடுக்கும். இப்போது மரத்தையே காணவில்லை. காட்டுக்கருவைதான் மண்டிக் கிடந்தது.
இந்தப் படியில் சிதம்பரம் பையனாக இருந்தபோது அப்பாவைப்போல் சிவலிங்கத்தை வைத்துப் பூஜை செய்தது நினைவுக்கு வருகிறது. அப்பா தருமை ஆதீனத்திடம் தீட்சை பெற்று பெரிய பூஜை செய்தவர்கள். தினமும் அதிகாலையில் எழுந்து வயற்காட்டுக்குப் போய் நிலங்களை எல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டுத் திரும்பிவரக் காலை பத்து மணியாகும். பிறகு கிணற்றடியில் குளித்து அவர்களே ஆசாரமாய்க் கிணற்று நீரைச் சின்னக் குடத்தில் எடுத்து வந்து பூஜைக்கு அமர்வார்கள். இடுப்புத் துண்டுடன் நெற்றி, மார்பு, கை என்று பதினாறு பட்டைகளுமாய் விபூதி பூசி, கழுத்தில் தங்கக் கொப்பு வைத்த பெரிய ருத்திராட்ச மாலை அணிந்து பூஜைக்கென்று கட்டப்பட்டிருக்கும் சின்ன மேடையில் பூஜைக் கிண்ணங்க¨ளைப் பரப்பி, புற்று மண்ணால் தினமும் புதிதாக சிவலிங்கம் செய்து பூஜை செய்வார்கள். வெகு நேரம் தேவாரமும் திருவாசகமும் பாடி கண்மூடி பூஜிப்பார்கள். பூஜை முடிய ஒரு மணிக்கு மேலாகும். பனிரெண்டு மணிக்குதான் ஒரே வேளையாய் சாப்பாடு.
அப்பா பூஜை செய்யும் போது பலமுறை அருகிருந்து பார்த்துப் பார்த்து சிதம்பரத்துக்கும் அது போல் பூஜை செய்ய ஆவல் பிறந்தது. அப்பா பாடும் பாடல்கள் எல்லாம் மனப்பாடம். அப்பாவின் சின்ன பழைய ருத்திராட்சமாலையை அணிந்து
கொண்டு, அப்பாவைப் போல¦வே விபூதிப் பட்டை போட்டுக் கொண்டு, ஒரு சின்ன மாவுக்கல் சிவலிங்கத்தையும் சின்ன குட்டி நந்தியையும் வைத்து இந்தப் படித்துறையில் அமர்ந்து அப்பா பாடும் பாடல்களைப் பாடி அவரும் பலதடவை பூஜை செய்திருக்கிறார். அப்பாவுக்குப் பிறகு அவர்தான் பூஜைக்கு வாரிசு என்றும் அப்பாவின் பூஜைப்பெட்டியை அவர்தான் வாங்கிக் கொள்ளப் போகிறார் என்றும் அருகிருந்து பார்த்த குருக்களும் மெய்காவலும் பேசிக் கொள்வார்கள். இப்போது அதை நினைத்துப் பார்த்தார். சின்னவயதின் மயக்கம் பின்னர் மேல் படிப்புக்குப் போனபோது மறைந்து போய், நாத்திகம் பேசுகிறவராய் அவர் ஆவார் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.
"கோவிலுக்குத் தர்மாத்தாக்கள் இல்லியா? அவங்க தினமும் கோயிலுக்கு வரமாட்டாங்களா? இதயெல்லாம் கவனிக்க மாட்டாங்களா?" என்று கேட்டார் சிதம்பரம்.
'அதான் சொன்னனுங்களே. பெரிய கோயில்னா பரிவட்டம், முதல் மரியாத எல்லாம் கெடைக்கும். அதோட வருமானம் உள்ள கோயிலா இருந்தா அதிகாரிக்கு ஒத்துப்போனா நாய்க்குக் கறித்துண்டு வீசுறக் கணக்கா எதாவது பொறுகித் திங்க
லாம். இங்கதான் ஒடையவரே ஒருவேள நிவேத்தியத்துக்கு அல்லாடுறாரே! அதனாலே போட்டி இல்லே. ஆளும்கட்சிக்காரனுவ தான் மூணுபேரு பேருக்குத் தர்மகர்த்தான்னு இருக்கானுவ. அதிலே ஒருத்தன் சேரி ஆளு. யாரு தெரியுங்களா? உங்கப் பண்ணக் காரன் குண்டுமணி மவன் மூக்கறதான் ஒரு தர்மகர்த்தா. அப்பா ஒக்காந்த எடத்துல இவன்லாமா?" என்று அங்கலாய்த்தான் மருது.
"அப்படியெல்லாம் நெனைக்கக் கூடாதுப்பா. அதுதான் ஜனநாயகம். எல்லாருக்கும் வாய்ப்புத் தரணுமில்லியா? அத்தோட அப்பாவோ மத்தப் பெரியவங்களோ என்னா சாசுவதம்? அவங்கதான் எத்தினி நாளைக்கு இருப்பாங்க? காலம் மாற மாற எண்ணங்களும் மாறித்தானே ஆகணும்?" என்று அவனை சமாதானப் படுத்தினார்.
"அப்படி இல்லீங்க. அந்தக் காலத்துலே தெரியாமியா ஊர்ப் பெரிய மனுஷாள மணியம், தர்மகர்த்தான்னு வச்சாஙக். பணத்தேவை இல்லாதவங்கண்ணா பொதுப் பணத்துக்கு ஆசப்பட மாட்டாங்க, இதுமாதிரி கோயில்ல பூஜைக்கு தள்ளாட்டம்னா
தெய்வத்துப் பயந்து கைப்பணத்தப் போட்டுக் கோயில்ல விளக்கு அணையாமப் பாத்துக்குவாங்க. இப்ப மாதிரி அண்ணாடங்காச்சிகளப் போட்டா அவனுக்கே திண்டாட்டங்கறச்சே ஆண்டவனுக்கு எப்புடிச் செலவழிப்பான்?" என்று மருது வாதம் செய்தான்.
"நமக்கு ஜனநாயகம் இன்னும் பிடிபடல்லே. எல்லாம் போகப்போகச் சரியாப் போகும். சரி போலாமா?" என்று நடந்தார்.
"எங்க தங்கப் போறீங்க?" என்று விசாரித்தான் மருது.
"அப்பு வீட்லதான் ரெண்டு நாளைக்கும். அவங்களுக்குக் கஷ்டம் வேணாம்னு கொஞ்சம் செலவுக்குப் பணம் கொடுத்திருக்கேன்."
"அது சவுரியப்படுங்களா? சொந்த வீட்டியும்தான் வித்துட்டீங்க. இப்ப விருந்தாளி மாதிரி சொந்த ஊர்லியே ஒருத்தர் வீட்டுலே தங்குறமாதிரி ஆயிப்போச்சு! சரி, போங்க. காலைலே நான் அங்க வந்து பாக்குறேன்" என்று விடை பெற்றுக் கொண்டான் மருது.
சிதம்பரம் அப்பு வீட்டை நோக்கி நடந்தார்.
(தொடரும்)
Saturday, September 08, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment