Sunday, February 01, 2009

எழுத்துக்கலைபற்றி இவர்கள்: 40. சாலை இளந்திரையன்.

1. சிறுகதையைப் பொறுத்தவரையில், சொல்லுதற்கு ஒரு செய்தி இருந்தால் மட்டும்
போதாது; அதைச் சுவைபடச் சொல்லும் திறமையும் இருக்க வேண்டும்.

2. பல நிகழ்ச்சிகளை வளர்த்துச் செல்வது சிறுகதையின் இயல்பன்று. குறிப்பிட்ட
ஒரு சூழ்நிலை, ஒரு சிறிய கருத்துடன் இணைத்துப் பின்னப்படும் நிகழ்ச்சி இயக்கமே சிறுகதை. அதேபோல் குறிப்பிட்ட ஒரு நிகழ்ச்சி மூலம் ஒன்று அல்லது சில பாத்திரங்
களின் முக்கிய பண்பைச் சுட்டிக் காட்டி விட்டு விடுதலே சிறந்த சிறுகதை.

3. கதையின் தலைப்பு, கதையின் உள்ளீட்டை ஒருவாறு சுருக்கித் தருவதாக இருக்க வேண்டும். அப்போதுதான் ஒரு சிறிய அளவான எண்ணம் படிப்போர் மனதில் எழுந்து, கதையைப் படிக்கத் தூண்டும்.

4. கதையின் இலக்கியப் பண்புக்கும் அதன் தொடக்கத்துக்கும் நெருங்கிய தொடர்பு
இருக்கின்றது. கதையின் தொடக்கம் படிப்போரின் உள்ளத்தைக் கதையின்பால்
கவர்ந்து இழுப்பதோடு சிறந்த சிந்தனை ஆற்றலையும் தோற்றுவிக்கிறது. நன்றாகத்
தொடங்கப்பட்ட கதை ஆசிரியனுக்குப் பாதி வெற்றியைத் தேடித் தந்துவிடுகிறது.

5. சிறுகதையின் இறுதிப் பகுதியில், கதையின் உச்சநிலை பொதிந்த முடிவு அமைகிறது.
உச்சநிலை என்பது கதையின் உள்ளீடு முழுவிளக்கம் பெற்று முடியும் இடம். உச்ச
நிலைதான் கதையின் மிகப் பெரிய கவர்ச்சிப் புள்ளி. அதற்கு முன் உள்ள பகுதி
எல்லாம் படிப்போரின் உள்ளக் கவர்ச்சியை வளர்த்து வருகின்றன; உச்சநிலையில்
அக்கவர்ச்சி வளர்ச்சி பெற்று முடிகிறது.

6. கதையின் முடிவு இன்பியலாகவும் இருக்கலாம், துன்பியலாகவும் இருக்கலாம்;
கதையில் அது வரும் இடம் உச்சநிலையோடு இணைந்தும் இருக்கலாம். அதற்குப்
பிற்பட்டும் இருக்கலாம். ஆனால் அது படிப்போரின் உள்ளத்தை முற்றும் கவர்ந்து அதன் வழியிலே இழுத்துக் கொண்டு போய்ச் சிந்திக்கச் செய்யும் பேராற்றலைப் பெற்றிருக்க வேண்டும்.

7. இறுதியாக, சிறுகதையின் நடை அதன் பாத்திரங்களின் இயல்புக்கேற்ப அமைய
வேண்டும். சாதாரணப் பொது மக்களில் ஒருவனும், இலக்கியம் கற்ற பேராசிரியர்
ஒருவரும் ஒரே நடையில் பேசினால் படிப்போரின் உள்ளத்தில் கதையும் அது சொல்லும்
கருத்தும் பதிய இயலாது. வேறுபட்ட நிலையும், இயல்பும் உடைய பாத்திரங்கள்
வெவ்வேறு நடையில் பேச வேண்டும். பாத்திரத்தின் இயல்பும் அதன் வளர்ச்சியும்
பெரிதும் அதன் பேச்சைப் பொறுத்தது அல்லவா?

----- 0 -----

1 comment:

நிலாமகள் said...

.// நன்றாகத்
தொடங்கப்பட்ட கதை ஆசிரியனுக்குப் பாதி வெற்றியைத் தேடித் தந்துவிடுகிறது.//

எழுத்துத் தடத்தில் அடியெடுத்து வைப்போருக்கான பொக்கிஷத் திறப்பாக அமைந்த பதிவு. எதையெல்லாம் வரும் சந்ததியர்க்குப் பயனாகுமாறு பதிவிட வேண்டுமென்பதற்கு சிறந்த முன்னோடியாக விளங்குகிறீர்கள் ஐயா!