ஜூல்ஸ்வெர்ன் என்பவர் 1873ல் எழுதிய 'பூமியின் மையத்துக்கு ஒரு பயணம்'
என்கிற அறிவியல் கற்பனைப் புதினம்தான் இன்றைய அறிவியல் புனைகதைகளுக்கெல்லாம் முன்னோடி. 'க்ரிப்டாலஜி' என்னும் துறையை யாரும் அப்போது கனவுகூடக் கண்டிருக்க
வில்லை. ஆனால் ஜூல்ஸ்வெர்ன் 'க்ரிப்டாலஜி'யின் நுணுக்கங்களைக் கிட்டத்தட்ட அப்படியே எழுதி விட்டார். இன்று 'க்ரிப்டாலஜி' ஒரு முக்கிய துறை. ராணுவ அதிகாரிகள், நிறுவனங்கள், புலனாய்வு அதிகாரிகள் என்று பலரும் புலனாய்வில் சங்கேதக் குறியீடுகளை அனுப்பும் சவாலான பணி இது. இதுபோன்று, கற்பனை நிஜமாகும் சாத்தியத்தை அறிவியல் புனைகதைகள் நிரூபித்துள்ளன.
எனக்குத் தெரிந்தவரை, நாற்பதுகளில் வெளிவந்த டாக்டர் மு.வரதராசனாரின்
'கி.பி 2000' என்னும் புனைகதைதான் தமிழின் முதல் முழுநீள அறிவியல் புனைவு நூல் எனலாம். கி.பி 2000மாவது ஆண்டில் தமிழகம் எப்படி இருக்கும் அல்லது எப்படி இருக்க வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டாரோ அதைக் கற்பிதமாக எழுதினார். அதில் அவர்
கொண்ட நம்பிக்கைகள் - மனிதனை மனிதன் இழுக்கும் நரவாகனமான கைரிக்ஷா ஒழிய வேண்டும், பள்ளிகளில் தொலைக்காட்சி மூலம் பாடம் கற்பிக்கப்பட வேண்டும் போன்றவை - அவர் காலத்திலேயே நிறைவேறத் தொடங்கி விட்டன.
ஐம்பதுகளில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ஒரு திரைப் படத்தில் 'ஐம்பதும் அறுபதும்' என்று ஒரு கற்பனையை மதுரத்துடன் இணைந்து காட்சிப் படுத்தினார். மதுரம் அடுக்களையில் பெண்களுக்கு வேலைப்பளு குறைய, எல்லாம் எந்திர மயமாக வேண்டும் என்று கேட்பார். அது இன்று நிறைவேறி விட்டது. ஏன் ராமாயணத்தில் ராவணன் சீதையை புஷ்பக விமானத்தில் தூக்கிச் செல்வதும், சீவகசிந்தாமணியில் சீவகன் மனைவி விசையை மயிற்பொறியில் ஏறித் தப்புவதும் இன்றைய வானஊர்திகளின் கற்பனைதானே?
மேலைநாடுகளில் சென்ற நூற்றாண்டுகளிலேயே ஹெச்.ஜி.வெல்ஸின் 'காலஇயந்திரம்', 'உலகங்களுக்கிடையேயான போர்' போன்ற அறிவியல் புனைகதை நாவல்கள் எழுதப்பட்டு, திரைப்படங்களாகவும் வந்து 'மக்களை இப்படியும் நடக்குமா?' என்று அதிர வைத்தன. அத்தகைய நாவல்கள், திரைப் படங்களில் கண்ட - விண்வெளி நிலையங்கள், ரிமோட் கண்ட்ரோல் போன்றவை இன்று நிஜமாகி விடவில்லையா? இத்தனைக்கும் இப்படிக் கனவு கண்டவர்கள் விஞ்ஞானிகள் அல்லர். அவர்கள் எழுத்தாளர் கள். வாழ்க்கையின் அச்சம் அல்லது நம்பிக்கைகளைத்தான் அவர்கள் எழுதினார்கள். அவை பின்னாளில் நிஜமானவை அதிகம். அதே போல இந்த 'எதிர்காலம் என்ற ஒன்று' - என்று 'எனி இந்தியன் பதிப்பகம்' வெளியிட்டிருக்கும் அறிவியல் புனைகதைகளின் தொகுப்பும் வித்தியாசமான, பிரமிப்பூட்டுகிற, பயமுறுத்துகிற கற்பனைகளைக் கொண்டதாய் மனிதர்களின் 'அச்சம் அல்லது நம்பிக்கை'யின் வெளிப்பாடாக அமைந்துள்ளது.
'திண்ணை.காம்' மற்றும் 'மரத்தடி குழுமம்' நடத்திய 'அறிவியல் புனைகதைப் போட்டி'
யில் பரிசு பெற்ற கதைகள் மற்றும் போட்டிக்கு வந்தவைகளில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளை 'எதிர்காலம் என்ற ஒன்று' என்ற தலைப்பில் திரு.கோ.ராஜாராம் தொகுத்தளித்
திருக்கிறார். இந்த நூல்தான் தமிழில் பலஎழுத்தாளர்களின் அறிவியல் சிறுகதைகளின்
முதல் தொகுப்பு என்கிறது பதிப்புரை.
இத்தொகுப்பில் 21 புனைகதைகள் உள்ளன. எல்லாமே விதம் விதமான கற்பனைகள். இனிய அதிர்ச்சியும் பிரமிப்புமாய் புருவத்தை உயர்த்த வைப்பவை. முதல் கதை, சுஜாதாவை அடுத்து அறிவியல் புனைகதைப் படைப்பில் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கவரான
திரு.ஜெயமோகன், போட்டிக்கு முன்னதாக 'திண்ணை'யில் எழுதிய கதையான 'நாக்கு' என்பது. அவரது பெயர் ஏற்படுத்துகிற அதிர்ச்சி பல என்பதற்கேற்ப இந்தக் கதை தரும் செய்திகளும் அதிர்ச்சியளிப்பவை. ஒரு கடுமையான பஞ்ச காலத்தில் ஈராக்கில் மனிதர் களையே கொன்று தின்கிற நிலை ஏற்பட்டது என்பதும் இப்போதும்கூட வெளியே தெரியாமல், ருசிகண்ட சில நரமாமிச பட்சிணிகள் இருக்கவே செய்கிறார்கள் என்பதும் தலையை உதற வைப்பவை. கதை முடிவும் அதிர்ச்சி தருவது.
அடுத்த இரு கதைகளும் திரு.ராமன்ராஜாவால் மொழிபெயர்க்கப்பட்டுள்ள - இன்று ஆங்கில அறிவியல் புனை கதைகளில், சிக்கலான மரபணு கதைகளுக்குப் பெயர்போன
நான்ஸி க்ரெஸ் என்பவரின் 'ஜீன் திருடனின் விநோத வழக்கு', 'நாலாவது குழந்தை' என்கிற கதைகளாகும். முதல் கதை மரபணுத் திருட்டு பற்றியது. ஒருவனது மரபணுவைத் திருடி
விஷக்காய்ச்சலுக்கு மருந்து கண்டுபிடித்த கம்பனி, உரிமையாளனுக்கு நியாயமாகச் சேர வேண்டிய பங்குத்தொகையைக் கொடுக்காமல் தப்பிக்க வேண்டி, அவன் நீதிமன்றத்துச் செல்லுமுன் அவன் மீது வழக்குத் தொடுக்கிற சுவாரஸ்யமான கதை. பத்திரிகைச் செய்தி, கடிதங்கள், மெமொக்கள் மூலம் கதை சொல்லப்பட்டுள்ளது. இரண்டாவது கதை
'குளோனிங்' பற்றியது. கருக்களை குளிர்பதனப் பெட்டியில் சேமித்து வைக்கும் சாத்தியம் பற்றிய கற்பனை. இருக்கிற குழந்தை நம் எதிர்பார்ப்பின்படி உருவாகாவிட்டால் அது போல இன்னொன்றை உருவாக்கிக் கொள்ளலாம் என்கிறது கதை.
அடுத்தது முதற்பரிசு பெற்ற திரு.சேவியர் என்பவரின் 'ஏலி ஏலி லாமா சபக்தானி' என்பது. 'கால இயந்திரம்' போல ஒரு பின்னோக்கிய காலத்துக்குப் பயணப்படுவது பற்றியது.
இந்தக் கதை 'ஏசுநாதர் சிலுவையில் அறையப்பட்டது தடுக்கப்பட்டு பாரபாஸ் சிலுவையில் அறையப்பட்டிருந்தால்?' என்ற கேள்வியை எழுப்பி அதனால் உலகில் எத்தகைய மாற்றங்கள்
நிகழ்ந்திருக்கும் என்று நம்மைக் கற்பனை செய்ய வைக்கிறது.
இரண்டாம் பரிசைப் பகிந்து கொள்ளும், தலைப்புக் கதையான 'எதிர்காலம் என்ற ஒன்று' திரு.ரெ.கார்த்திகேசு எழுதியது. ஏற்றுக் கொள்ளக்கூடிய போர்க்காலக் கொலைகள், அழிவுகளை நியாயப்படுத்துகிற எதிர்கால விபரீதத்தை சுட்டிக் காட்டிப் பயமுறுத்துகிறது கதை.
இரண்டாம் பரிசைப் பகிர்ந்து கொள்ளும் மற்றொரு கதையான 'வானத்திலிருந்து வந்தவன்' திரு.நளினி சாஸ்திரி எழுதியது. வேற்று கிரகத்து மனிதர்கள் பற்றியது. வேற்று
கிரகத்திலிருந்து வரும் உயிரினம் ஒன்றை வரவேற்கக் காத்திருப்பது பற்றி வித்தியாசமாக கற்பிதம் செய்து நகைச்சுவையுடன் சஸ்பென்ஸை உடைக்கிறது. வரும் விருந்தாளி மனிதன் தான் என்பதும் காத்திருப்பது நம்முடைய முன்னோர்களான குரங்குகள்தாம் என்பதும்
சுவாரஸ்யமான கற்பனை.
கணினியில் புரோகிராம் எழுதுகிற சிலரின் வக்கிரமான முயற்சிகள் வெற்றி பெற்றால் என்று ஆகும் என்று பயங்காட்டுகிறது அருண்வைத்தியநாதனின் 'பிம்ப உயிர்கள்'.
முன்றாம் பரிசைப் பகிர்ந்து கொள்ளும் என்.சொக்கனின் 'மழலைச்சொல் கேளாதவர்' என்கிற கதை குழந்தைகளே இல்லாத எதிர்காலத்தைக் கற்பனை செய்கிறது. உதவிக்கு என்று நாம் கண்டுபிடித்திருக்கிற ரோபோ போன்றவை எப்படி நமக்கு உபத்திரவமாகக் கூடும் போன்ற எதார்த்தத்தைச் சுட்டுகிறது. பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கும் செலவினங் களைக் குறைக்கும் அரசின் திட்டத்தின் புதிய உத்தரவின்படி எட்டரை மாதத்தில் ஒரு ஊசி போடப்பட்டு, பிறந்த உடனே பதினாறு வயது பிள்ளையாய் வளர்வதன் மூலம் நாட்டின் செலவினங்களைச் சேமிக்கலாம் என்கிற அரசின் நோக்கத்துக்கு, பெற்றவர்கள் தர வேண்டிய விலையை அதிர்ச்சி தரும் கற்பனையில் காட்டுகிறது.
திரு.துக்காராம் கோபால்ராவின் 'ஒரு சொட்டு இரும்பு', 'மரபணு', 'மூன்றாவது
தோல்வி' என்னும் மூன்று கதைகளும்கூட சிந்தனையைத் தூண்டும் புதிய கற்பனைகள்தாம். 'இயந்திரங்கள் மனித உணர்வுபெறும் அளவிற்குத் தொழில் நுட்பம் ஏற்பட்டுவிட்டால்
எதிர்கொள்ள நேரும் பிரச்சினையைக் கோடி காட்டுகிறது 'ஒரு சொட்டு இரும்பு'. இதுவரை அறிவியல் தொடக்கூடாது என்று தடை செய்யப்பட்டிருந்த மரபணுத்துறையில் இன்று அறிவியலையும், தொழில் நுட்பத்தையும் திணிக்க முயலும் அறிவியலாளர்களையும், அரசியல்வாதிகளையும் எதிர்க்க வேண்டிய அவசியத்தைச் சொல்கிறது 'மரபணு' என்கிற கதை. 'உலகங்களுக்கிடையேயான போர்' கதையைப் போல விண்வெளி யுத்தம் ஒன்றை,
கணினி விளையாட்டாய்க் காட்டி, மூளைச்சலவைக்குள்ளான முகமறியாப் போர் வீரர்கள் முகமறியா எதிரிகளுடன் போரிடத் தூண்டக்கூடிய அபாயகரமான தளத்தைக் காட்டுகிறது 'மூன்றாவது தோல்வி'.
திரு.நாகரத்தினம் கிருஷ்ணா இரண்டு கதைகள் எழுதி இருக்கிறார். 'ஆபரேஷன்
மஹாசங்காரம்' என்கிற கதை, கணினியில் 'மென்பொருள் செயலி' எழுதுவர்களின்
வக்கிரமான சிந்தனைகள் பற்றியது. உலகமனைத்தும் ஒரே காலத்தில் அழிவதான 'மகா சங்கார'த்தில் இவர்கள் திட்டமிட்டிருப்பது - சீனாவில் சார்ஸ் நோயினைப் பரவச் செய்வது, ஈராக் மீது பிரிட்டிஷ் அமேரிக்கத் தாக்குதல், அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் தகர்ப்பு போன்ற உலகை உலுக்கிய அழிவுகள். 'அமலா..விமலா..கமலா' என்கிற கதை குளோனிங்கின் எதிர்காலம் பற்றிய ரசமான கற்பனை. விறுவிறுப்பான கதை ஒட்டம்,
நறுக்குத் தெறித்த மாதிரியான சொல்பிரயோகங்கள் வாசிப்பை சுவாரஸ்யமாக்குகின்றன.
திரு.சன்னாசி எழுதியுள்ள 'பிறழ்ந்த குறிப்புகள்' வயது பின்னோக்கி வளர்வதன்
பிரச்சினையக் கற்பனை செய்கிறது. 'ஒருத்தி பிறக்கும்போது வயது 60. அதற்குப் பின் அவளது வயது இன்னும் குறையத் தொடங்கியபோதுதான் அந்தக் கேள்வி எழுந்தது.
கிழவியாக இருந்து வயது குறைந்து இளம் பெண்ணாக மாறிப் பின்னும் வயது குறைந்து
சிறுமியாகிப் பின்னும் வயது குறைந்து குழந்தையாகிப் பின்னும் வயது குறைந்து....?' - என்று
எப்படியெல்லாம் கற்பனை செய்கிறார்கள் என்று புருவம் உயருகிறது.
திரு.மண்ணாந்தை என்பவரின் 'பழைய ஆல - விதைக்கதை' தாயுமானவர் சொல்லும் அட்டமா சித்திகளில் ஒன்றான 'ககனத்தில் உலாவலாம்' போல அண்டங்களில் எல்லாம் உலாவுகிற கற்பனை. விண்வெளியில் மற்ற கிரகங்களில் கிடைக்கும் உலோகங்களை அறிந்து அங்கு நம் குடியேற்ற சாத்தியம் பற்றியெல்லாம் பேசுகிறது.
'மூளை மாற்று ஆராய்ச்சி' என்கிற கதையில் திரு.நா.சுவாமிநாதன் மூளைமாற்று அறுவை சிகிச்சையின் எதிர்காலம் பற்றிக் கற்பனை செய்கிறார். மனிதக்குரங்குகளுக்கு
மனிதமூளையைப் பொருத்தி ஆபத்தான காரியங்களுக்குப் பயன்படுத்துவதன் விளைவுகளைப் பற்றிய விபரீதக் கற்பனை.
திடுமென ஒரு திருப்பத்தைத் தரும் 'பால்பேதம்' என்கிற கதையில் திரு.மீனாக்ஸ்
அதிர்ச்சியோடு மென்னகை பூக்கவும் வைக்கிறார். பயணத்தின்போது எதிரே பேசிக்
கொண்டிருக்கிற இ¨ளைஞன் 'செக்ஸ்சேஞ்ச்' ஆபரேஷனுக்குக்குப் பின் ஆணாக
மாறியுள்ள தன் மகள்தான் என்று கதைசொல்லி அறிகிறபோது நமக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது.
இத்தொகுப்பின் நீண்ட கதையான 'பகல் நிலம்' இன்னொரு வகையான பயத்தைத் தோற்றுவிக்கிறது. 'புவியீர்ப்பு மையவிலக்குவிசை' இல்லாமல் போய் புவியீர்ப்பு கொஞ்சம் அதிகமாகி விட்டால்......' என்று கற்பனை செய்திருக்கிறார் திரு.சீராளன். புவியின் ஒரு பக்கம் மட்டுமே சூரியனைப் பார்த்து சுற்றி வருவதும் அதனால் ஒர் பக்கம் முழுதும்
நிரந்தரப் பகலாகவும், மறுபாகம் முழுதும் நிரந்தர இரவாகவும் மாறிவிட்டதால் நாட்கள் என்பதே இல்லாமல் போய்விடுவதும், இருண்ட பகுதியில் ஆச்சரியமான, அபாயகரமான பூச்சிகள் பெருகி பகல்பகுதிக்கும் நகர்ந்து மக்கள் வாழமுடியாத நிலை எழுவதுமான பயங்கரம் எலும்புக் குருத்தையும் அதிர வைக்கிறது. இது தொடர்ந்தால் இன்னும் என்னென்ன சிரமங்கள் ஏற்படும் என்பதை எல்லாம் ஒரு துப்பறியும் நவீனத்தின் விறுவிறுப்
போடு சொல்கிற கதை, முடிவில் நின்றுபோன பூமி கம்ப்யூட்டர் வைரஸ் மூலம் மீண்டும் பழையநிலைக்குத் திரும்புவதைச் சொல்லி வாசிப்பவரை ஆசுவாசப் படுத்துகிறது.
காலையில் கண்விழித்ததும் ஒருவனுக்கு, கனவோ என்று மருளும்படி உலகில் அவனைத் தவிர யாரும் இல்லாமல் போவதும் அது ஏன் எப்படி என்று குழம்புவதுமாய் கதையைச் சொல்லி முடிவையும் குழப்பத்தில் விடுகிறது திரு.இரா.மகேசனின் '14-10-2010' என்கிற கதை.
உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து தவல்களைச் சேகரித்து, அதில் இருந்து புதிய - இதுவரை கண்டுபிடிக்காத, மனிதகுலத்துக்கு பயனுள்ள உண்மைகளைக் கண்டறிய முயலும் 'ஐ.டி.சி இன்டர்நேஷனல் டேட்டா கன்சார்ட்டியம்' செய்யும் ஆய்வையும் அதன் முடிவையும் பற்றிச் சொல்கிறது திரு.நந்தன் எழுதியுள்ள 'சம்பவாமி யுகே யுகே' கதை.
தொகுப்பின் கடைசிக் கதையான 'மரக்கலாஞ்சி மாஞ்சிளா' வின் ஆசிரியர்
திரு.நடராஜன் ஸ்ரீனிவாசனின் கற்பனை இன்னொரு புதிய புதிரைச் சொல்லி விடுவிக்கிறது.
கனவில் மஞ்சள் நிறத்தில் நிழல் வருவதான கற்பனை. அது சாத்தியமா, உண்மை என்ன என்று ஆய்வதாகக் கதை.
படித்து முடித்ததும் ஒரு புதிய, புதிரான உலகில் உலவித் திரும்பிய அனுபவம்
ஏற்படுகிறது. தொகுப்பாசிரியர் திரு.ராஜாராம் பதிப்புரையில் ஆசைப்படுகிற மாதிரி
'எனி இந்தியன் பதிப்பகத்'தின் இந்த நூல் வெளியீடு - அறிவியல் மீதும் அறிவியல் புனைகதைகள் மீதும் தமிழ் வாசகர்களுக்கு ஈடுபாடு கொள்ளச் செய்யும் என்று நிச்சயமாய்
நம்பலாம். 0
நூல்: எதிர்காலம் என்ற ஒன்று.(அறிவியல் புனைகதைத் தொகுப்பு)
தொகுப்பாசிரியர்: கோ.ராஜாராம்.
வெளியீடு: எனி இந்தியன் பதிப்பகம், சென்னை.
விலை: ரூ.80.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment