Sunday, February 01, 2009

அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள்

மக்களைப் பைத்தியமாக அடிக்கும் சினிமா என்கிற கனவுலகம் பற்றி
சுஜாதா எழுதிய 'கனவுத் தொழிற்சாலை' தொடர் 'ஆனந்தவிகடனி'ல் வெளியானதற்கு
வெகு காலத்துக்கு முன்பே அறுபதுகளில் 'தீபம்' இதழில் சினிமா உலகம் பற்றி,
திரு.அசோகமித்திரன் அவர்கள் எழுதிய 'கரைந்த நிழல்கள்' என்கிற நாவல் தொடராக
வெளியானது. முழு நேர எழுத்தாளராக ஆவதற்கு முன்னால் கொஞ்ச காலம் ஜெமினி ஸ்டுடியோவில் பணியாற்றிய காலத்து அனுபவங்களை மிகை என்று எண்ண முடியாத
யதார்த்தத்துடன் ஆசிரியர் இந்நாவலில் பதிவு செய்துள்ளார். நாவல் இரத்தமும்
சதையுமாய் ஜீவனுடன் இருப்பதற்கு ஆசிரியரின் வெகு இயல்பான தனித்துவம் மிக்க
நடையே காரணமாய் உள்ளது.

'கரைந்த நிழல்கள்' வெறும் சினிமாவைப் பற்றி மட்டும் பேசுகிற நாவல் அல்ல.
சினிமா என்கிற மாய உலகத்தின் பிரமிப்புகளினூடே மறைந்து கிடக்கும் ஏமாற்றங்கள், இழப்புகள், வலிகள், கண்ணீர் என்று - அதில் பரிச்சயம் இல்லாத நம்மால் கற்பனை செய்ய முடியாத சோகங்க¨ளையும், முகமறியாத மனிதர்களின் காலநேரப் பிரக்¨¨ஞையற்ற உழைப்புகள் அர்த்தமற்று, அடையாளமற்றுப் போகிற பரிதாபத்தையும் பதிவு செய்திருக்கிற உருக்கமான நாவல் ஆகும்.

கதை என்னவென்று கேட்டால உடனே சொல்லிவிட முடியாதுதான். இதில் ஒருவரது கதையல்ல - பலரது கதைகளும் பிணைந்துள்ளன. படப்பிடிப்பில் சகலத்துக்கும் பொறுப்பாய் உள்ள மிகக் கஷ்டமான பணியேற்றிருக்கும் 'சந்திரா கிரியேஷனி'ன்
புரொடக்ஷன் மானேஜர் நடராஜன், விடிய இன்னும் வெகு நேரம் இருக்கும்போதே
அன்று மாமண்டூர் அருகே நடக்க உள்ள 'அவுட்டோர் ஷ¥ட்டிங்கு'க்குப் புறப்படுவதில்
நாவல் தொடங்குகிறது. வீட்டிலிருந்து கம்பனிக்காரில் கிளம்பி ஸ்டூடியோவுக்குப்போய், அங்கு படப்பிடிப்பு உபகரணங்கள், அன்றைய படப்பில் குழுவாய் நடனமாட வேண்டிய துணை நடிகைகள் ஆகியோரை படப்பிடிப்பு ஸ்தலத்துக்கு வேன்களில் ஏற்றி அனுப்பிவிட்டு,
பட முதலாளியிடம் காட்டமுடியாத கோபத்தை புரொடக்ஷன் மானேஜரிடம் காட்டுகிற டைரக்டர், காமிராமேன், மோசமான சாலையில் வண்டியை ஓட்ட முனகும் டிரைவர்
ஆகியோரைச் சமாளித்து, படப்பிடிப்பின் இடையே எல்லோருக்கும் சாப்பாடு ஏற்பாடு செய்துவிட்டு, சரியான நேரத்துக்குப் போய்ச் சேர்ந்து படப்பிடிப்பை முடித்துக் கொண்டு
திரும்புகிற - ஒரு சதாவதானியின் சாகசத்தை ஒத்ததாய் செயல்படுகிற புரொடக்ஷன்
மானேஜர் படும் பாடுகளைப் படிக்கும்போது 'பாவி மகன் படுந்துயரம் பார்க்கொணாதே' என்றுதான் பாடத் தோன்றும்.

வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து ஸ்டூடியோவுக்குள் நடைபெறும் படப்பிடிப்புக்கு எல்லோரும் வந்து காத்திருக்கிற நிலையில், உடம்பு சரியில்லை எனப் பொய்க்காரணம்
சொல்லி முக்கிய நடிகை வர மறுத்து விடுகிறாள். பட முதலாளியே நேரில் போய் மிரட்டியும் தன்னை நடிகையாக்கிய அவருக்கும் தண்ணிக் காட்டிவிட, படப்பிடிப்புமல்ல படத்தையே
நிறுத்திவிட நேர்கிறது. அதனால் படத் தயாரிப்பாளர் மட்டுமின்றி - அது சார்ந்த அனைவருமே நொடித்துப் போகிறார்கள். படத்தின் முக்கிய பொறுப்பாளனாய் அயராது உழைத்த புரொடக்ஷன் மானேஜர் பிச்சை எடுக்கு நிலைக்குத் தள்ளப்படும் பரிதாபத்தையும் கண்டு அதிர்கிறோம்.

தொடர்ந்து அந்தப் படத்தை வாங்கி முடிக்க எண்ணும் 'விநாயகா ஸ்டுடியோ'
உரிமையாளர் ராம அய்யங்காரது கதையும் சினிமாவால் சீரழிபவர்கள் பற்றிய இன்னொரு சோகச் சித்திரம்.

ஒரு திரைப்படம் முழுமையான பிறகு தியேட்டரில் கண்டு பரவசப்படும் நமக்கு, அதன் பின்னணியில் வாழ்வின் கனவுகளைச் சிதைத்துகோண்டு உருக்குலைகிற வர்க்கத்தின் துயரம் தெரிவதே இல்லை. கவி மில்டன் சொன்னது போல, ரோஜாவின் அழகு மட்டுமே
நம் கண்களுக்குத் தெரிகிறது; அதைப் பயிரிட்டு, பறித்து விற்பனை செய்கிறவர்கள்
அனுபவித்த வலிகள் நமக்குத்தெரிவதில்லை. அந்தப் பரிதாப யதார்த்தத்தை நாவல் படம்
பிடித்துக் காட்டுகிறது. இத்தனைக்கும் - கனமான, அடுக்கு மொழிஅலங்காரம், பரபரப்பு, அதிர்ச்சி எதுவுமற்ற லகுவான- அவருக்கு மட்டுமே சாத்யமாகியுள்ள அற்புத மொழிநடையில் அசோகமித்திரன் இந்த நாவலை எழுதி, வாசிப்பவர்களை நெகிழ்ச்சி கொள்ளச்
செய்துள்ளார். நமது கற்பனைக்கும் மாறான வேறு உலகத்தின் நிஜங்கள் பற்றி அறிந்து
அதிர்கிறோம்.

நாவலில் அசோகமித்திரனின் பாத்திரப்படைப்புகள் கச்சிதமானவை. வெகு
இயல்பானதாய், நாம் தினசரி பார்க்கும் மனிதர்களின் வாழ்வை மிகைப்படுத்தாமல் நாம்
ஏற்கும் வகையில் சித்தரிப்பதாய் அமைந்துள்ளன. புரொடக்ஷன் மானேஜர் நடராஜனின் முமுணுக்காத, எதற்கும் அலட்டிக் கொள்ளாத, கனவுகளற்ற வாழ்க்கை இறுதியில்
சிதைந்து போவதை திடீர் அதிர்ச்சியாய்த் தராமல், நாவலின் இறுதியில் ஒரு பேச்சுக்
கிடையே வாசகர் அறிந்து கொள்கிறமாதிரியான பாத்திர வார்ப்பு நம்மை வியக்க
வைக்கிறது. படத் தயாரிப்பாளர்களும் நமக்கு வெளியே தெரிகிறமாதிரி மகிழ்ச்சியாய்,
குடும்ப வாழ்வில் நிம்மதியாய் இல்லாத நிஜத்தை - ரெட்டியார், ராம அய்யங்கார்
ஆகியோரின் பாத்திரப் படைப்பின் மூலம் அறிகிறோம். தாமஸ்ஹார்டி நாவலில் வருவது
போன்று, ஊழ் மனிதனின் வாழ்வில் எப்படிப் புகுந்து சழற்றி அடிக்கிறது என்பதையும் -
ஆசிரியர் கூற்றாக அல்லாமல் - இவர்களது வாழ்க்கைச் சித்தரிப்பின் முலம் வாசகன்
தானாக உணர்ந்து கொள்ளச் செய்திருப்பது அவரது எழுத்தாற்றலைக் காட்டுவதாகும்.

சின்னச் சின்னப் பாத்திரங்கள் கூட - சண்டித்தனம் பண்ணும் நடிகை
ஜயசந்திரிகா, அவளது தாயார் தனபாக்கியம், நடேச மேஸ்திரி, எடுபிடி ஆளாய்
இருந்து படத் தயாரிப்பாளராகும் சம்பத் என்று அனைவருமே - ஒரு கைதேர்ந்த
ஓவியன் சின்னச் சின்ன தூரிகைத் தீற்றலின் மூலம் முழு உருவமாக்கிக் காட்டி விடுவது
போல - சிறு நிகழ்வுகளையும் விடாது நுணுக்கமாய்க் கவனித்து சிறப்பான சித்திரங்களாய் ஆக்கி விட்டிருப்பதின் மூலம், நம் மனதில் நீங்கா இடம் பெறச் செய்திருக்கிறார்.

வருணனைனகளிலும் சின்னச் சின்ன விவரங்களையும் விட்டுவிடாமல் பதிவு செய்து ஒரு படக்காட்சியைப் பார்ப்பது போலவே சித்தரித்துள்ளது புதிதாக எழுத வருபவர்களுக்கு உதவும் குறிப்புகளாகும்.

மொழிநடை, பாய்ந்து பரபரவெனச் செல்வதில்லை என்றாலும். கதை வளரும்போது ஒரு துப்பறியும் நவீனம் போல் அடுத்து என்ன நிகழப் போகிறது என்பதை அறியத்துடிக்கிற ஆவலை உண்டாக்கி நாவலின் வாசிப்பு வேகத்தை உயர்த்திவிடுகிறது. அவரது நகைச்சுவை உணர்வும் ரசிக்க வைப்பது. அவரது சிறுகதைளில் மெலிதாய் வாசகனை மென் முறுவல் பூக்க வைக்கிற மாதிரி இந்த நாவலிலும் பல இடங்களில் காண்கிறோம். உதாரணத்துக்கு ஒரு இடம்: 'அவள் இன்னும் நட்சத்திர நடிகை ஆகிவிடவில்லை. ஒல்லியாகத்தான்
இருந்தாள். முகம், உடல், சருமம் எல்லாம் இன்னும் விசேஷமான, அபரிமிதமான சத்துள்ள உணவு உட்கொள்வதன் மூலம் ஏற்படும் மினுமினுப்பு இல்லாமல், ஒரு குழந்தைக்குத்
தாயான ஒரு நடுத்தர வீட்டுப் பெண்மணியினுடையது போல் இருந்தது'.

பலரும் கிராமம் சார்ந்த, வட்டாரக் கதைகளையும் மாந்தர்களையும் பதிவு செய்து வருகையில் - நகரம் சார்ந்த, குறிப்பாக சென்னை சார்ந்த நடுத்தர மக்களின்
வாழ்வின் ஆசாபாசங்கள், நிறைவேறாத அபிலாஷைகள், எப்போதும் எதிலும் நிறைவு
காணாத நடைமுறை வாழ்க்கை, அவற்றின் எதிர்வினைகள் போன்றவற்றைச் சித்தரிக்கும்
மாநகரக் கதைகளை எழுதி தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பவர் அசோகமித்திரன். அந்த மாநகர வாழ்வின் ஒரு வித்தியாசமான கலாச்சாரத்தை, அதன் அவலத்தை இந்த நாவலிலும் அற்தமாய்ப் பதிவு செய்திருக்கிறார்.

பல இடங்களில் அவர் நேரடியாகப் பேசிவிடுவதில்லை என்பதால் வாசிப்பவன்
சூழ்நிலையைப் புரிந்து கொள்ள சிரமப்பட நேர்வதைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.
வாசகன் பலவற்றைத் தன் யூகத்தால் மட்டுமே உணர வைக்கும் எழுத்து அவருடையது.
இந்த நாவலிலும் அப்படிப் பல நிகழ்வுகளின் முடிவுகளை வாசகன் யூகத்தால் உணர்ந்தே
நிறைவு கொள்ள நேர்கிறது. அது ஒரு குறையாக இல்லாமல் அசோககமித்திரனின்
தனித்தன்மையின் ஒரு உக்தியாகவே அதனை ஏற்றுக் கொள்ள முடிகிறது.

நூல்: கரைந்த நிழல்கள்.
ஆசிரியர்: அசோகமித்திரன்.
வெளியீடு: கிழக்குப் பதிப்பகம், சென்னை.

----- 0 -----

1 comment:

அமைதி ரயில் said...

pls visit and give your feedback

http://peacetrain1.blogspot.com/