Thursday, January 05, 2006

நான் கண்ட சிஷெல்ஸ் - 4 - அரசியலும் ஆட்சியும்

தமிழ் நாட்டு அரசியலையும் அரசியல்வாதிகளையும் பார்த்து வெறுத்துப் போயிருந்த எனக்கு சிஷெல்ஸின் அரசியல்வாதிகளைப் பார்க்கும் வாய்ப்பும் அங்குள்ள அரசியல் பற்றி அறியவும் நேர்ந்தபோது வியப்பாக இருந்தது.

அங்கு சென்ற மறுநாள் நான் எங்கள் மாப்பிள்ளை திரு ராஜசுந்தரம் அவர்களுடன் கடைவீதியில் சென்று கொண்டிருந்தபோது எதிர்ப்பட்ட ஒருவர், நின்று அவரிடம் நலம் விசாரித்தார். அவர் பெர்முடா கால்சட்டையும் டீ ஷர்ட்டும் கையில் பழம் மற்றும் சில பொருள்கள் கொண்ட பையுடன் மிக எளிமையாக இருந்தார். அவர் எங்களைக் கடந்ததும் மாப்பிள்ளை சொன்னார், "மாமா, இவர் யார் தெரியுமா? இவர் முன்னாள் அமைச்சர். இங்கு நம் ஊர் மாதிரி அரசியல்வாதிகள் பந்தாவெல்லாம் செய்ய மாட்டார்கள். தாங்களே நேரில் சென்று மக்களோடு மக்களாகக் கலந்து நின்று கடைகளில் பொருட்களை வாங்குவார்கள். மக்களிடம் நலம் விசாரிப்பார்கள். ஜனாதிபதி உட்பட எல்லா அமைச்சர்களும் யார் அழைத்தாலும் விருந்துக்குச் சென்று கௌரவிப்பார்கள். அவ்வளவு எளிமை. அது மட்டுமல்ல. இவர்கள்- ஜனாதிபதி உட்பட, தன் காரைத் தானே ஓட்டி வருவார்கள். முன் பின்னாக கார்கள் பவனி வருவதையோ, ஜனாதிபதி வருவதற்காக போக்குவரத்தைத் தடை செய்வதையோ பார்க்கமுடியாது. சிவப்புச் சுழல்விளக்கு, சைரன்ஒலி எல்லாம் அரசு நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது மட்டும்தான். மற்ற வேளைகளில் ஜனாதிபதி போவதே தெரியாது" என்றார்.

"பாதுகாப்புப் பிரச்சினை இல்லையா?" என்று நான் கேட்டேன்.

"இங்கு ஜனாதிபதிக்கு மட்டும்தான் பாதுகாப்பு. நம்மூர் போல யாரோ பொம்மைத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டினான் என்பதற்காக சகட்டு மேனிக்கு யாருக்கு வேண்டு மானாலும் இசர்ட் பிரிவு பாதுகாப்பு தருவது போல இங்கு கிடையாது" என்றார்.

நம்மூரில் சாதாரண வட்டம், ஒன்றியம் தலைவர்களே செய்கிற பந்தா, படாடோபம், ஆர்ப்பாட்டம் எல்லாம் நினைவுக்கு வந்து மனதுக்குள் அலுத்துக் கொண்டேன்.

"அதோடு இங்கு ஜனாதிபதியையே 'மிஸ்டர் பிரசிடென்ட்' என்று நேரில் விளித்துப் பேச முடியும்" என்றார். நம்மூரில் அம்மாவையோ அய்யாவையோ பெயர் சொல்லிக் கூட்டத்திலாவது பேசிவிட முடியுமா? ரத்தத்தின் ரத்தங்களும் உடன்பிறப்புகளும் கிழித்துவிடமாட்டார்களா? சிஷெல்சில் அரசியல்வாதிகளுக்கு ஜால்ரா போடுபவர் இல்லை. சின்ன நாடாக இருந்தாலும் அவர்கள் அரசியல்வாதிகளைத் தெய்வம் ஆக்குகிற அளவுக்கு சுயசிந்தனை அற்றவர்கள் அல்ல.

ஊழல் உலகமயமாகி எல்லா நாடுகளிலும் வியாபித்திருப்பதும் ஊழலை ஆண்டவனே வந்தாலும் இனி எங்கும் தடை செய்ய முடியாது என்பதும் நிதர்சனமாக உள்ள நிலைலையில் இங்கு ஒரு நடிகர் ஊழலை ஒழிப்பேன் என்று ஆட்சி கோருகிற பிள்ளை விளையாட்டை இங்குதான் பார்க்கிறோம். ஊழல் இல்லாத உடோப்பிய கனவு சாத்யமா என்று நாம் விதிர்க்கையில் சாத்யமே என்பதை சிஷெல்ஸில் அறிந்தேன்.

சிஷெல்ஸ் நாட்டு அரசியலும் அரசியல்வாதிகளும் நேர்மைக்கு எடுத்துக்காட்டாக அமைந்திருப்பவர்கள் என்று சொன்னார்கள். அங்கு ஊழலே இல்லையாம். அதற்கு அவர்கள் சொன்ன காரணம் சிந்திக்க வைத்தது. மந்திரிகள், அதிகாரிகள் அனைவருக்கும் பணத்தேவை குறைவு. பந்தா, பகட்டு இல்லை. அவர்களது தேவைக்கு அரசாங்கமே கொடுத்துவிடுகிறது. பணம் மட்டுமே வாழ்க்கையில்லை என்பதை அந்நாட்டில் அனைவருமே உணர்ந்திருப்பதுதான் ஊழல் இல்லாததற்குக் காரணம் என்கிறார்கள். பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற வெறி அங்கு இல்லை. சிறிய நாடு. பணப்புழக்கம் அதிகம் இல்லை.

அரசியல்வாதிகள் எங்கேயாவது 'கை' வைத்தாலும் உடனே தெரிந்துவிடும். அங்குள்ள மக்களும் நமக்கென்ன என்று இருப்பவர்கள் அல்ல. மந்திரிகள், அதிகாரிகள் யார் மீது சந்தேகம் எழுந்தாலும் பொது இடத்தில் வைத்தே நேருக்குநேர் கேட்டுவிடுவார்கள் என்ற பயம் இருக்கிறது. மக்களது இந்தக் குண இயல்பும் ஊழலுக்கு எதிரான கொள்கையை உருவாக்கி இருக்கிறது.

மந்திரிகளையும் அதிகாரிகளையும் எந்தப் பிரச்சினை என்றாலும் எளிதாக அணுகலாம். உடனடியாகத் தீர்வு கிடைத்துவிடும். "உங்கள் வீட்டுக் குழாயில் தண்ணீர் வரவில்லை என்று ஜனாதிபதிக்குப் போன் செய்தால் போதும். உடனே அவர் குடிநீர் வழங்கும் துறையின் தலைவருக்குப் போன் செய்து உடனே கவனிக்க ஆணையிடுவார்" என்றார் அங்கு அரசுமருத்துவராகப் பணிபுரியும் தூத்துக்குடியைச் சேர்ந்த டாக்டர் ஜவஹர். 'இது அடிப்படையில் கம்யூனிசச் சார்புள்ள நாடு. எல்லோரும் சமம் என்கிற சோஷலிசக் கோட்பாடு உண்மையிலேயே செயல் படுத்தப்படும் நாடு. இங்கு பாரபட்சமில்லை. எல்லோருக்கும் ஒரே மாதிரியான நடவடிக்கைதான்" என்றார் அவர்.

தஞ்சாவூரைச் சேர்ந்த டாக்டர் செல்வம் என்பவர் ஜனாதிபதியின் பிரத்தியேக மருத்துவர். அவர் சொன்னார், "முன்பெல்லாம் - ஜனநாயக ஆட்சி ஏற்படும் வரை மக்களுக்கு அவ்வளவாக விழிப்புணர்வு இல்லை. எல்லோரது வீட்டிலும் பச்சிலைகள் வளர்ப்பார்கள். தலைவலி, ஜுரம் என்றால் கைவைத்தியம்தான். எல்லாவற்றிற்கும் பச்சிலைதான். வேலை செய்துவிட்டு மாலை வீடு திரும்பினால் வெந்நீரில் ஒரு பச்சிலையைப் போட்டு ஊறவிட்டுக் குளி¤ப்பார்கள். உடம்பு வலி போய்விடும். இப்போது அப்படி இல்லை. பொது மருத்துவ மனைகள் ஏற்பட்டு எல்லோருக்கும் இலவச வைத்தியம் என்றானதும் தலைவலி என்றால் கூட மருத்துவ மனைக்கு வந்து விடுவார்கள். நம்மைப் போல மருந்துக் கடையில் மாத்திரை வாங்கிப் போட்டுக் கொள்ள மாட்டார்கள். எதற்கெடுத்தாலும் ஊசி போடச்சொல்வார்கள். அது தலைவலியாக இருந்தாலும்! டாக்டர்கள் 'இதற்கெல்லாம் ஊசி வேண்டாம்' என்று சொல்லிவிட முடியாது. நேரே ஜனாதிபதியிடம் போய்விடுவார்கள்" என்றார்.

எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் மையத்தில் பணியாற்றும் நிபுணரான மயிலாடுதுறையைச் சேர்ந்த திரு பாபு என்பவர் "எங்கள் யூனிட் எப்போதும் பரபரப்புடன் பணியாற்றும் அவசரகாலப் பிரிவாகும். எல்லோருக்கும் எக்ஸ்ரேயும் ஸ்கேனும் இங்கு இலவசம். மருத்துவர்கள் சொல்ல வேண்டுமென்பதில்லை. நோயாளிகளே மருத்துவரிடம் சொல்லி சோதனை செய்து கொள்ள வருவார்கள். தவிர்க்கமுடியாது" என்றுசொன்னார்.

"மக்களுக்கு அவ்வளவு வசதியும் உரிமையும் இங்கே உள்ளது".

சோஷலிச உணர்வு எல்லோருக்கும் இருப்பதுடன் மக்களுக்குப் பொறுப்புணர்ச்சியும் அதிகம். இங்கே வேலை நிறுத்தம் கதவடைப்பெல்லாம் கிடையாதாம். கற்பழிப்பும் எங்கும் இல்லை. மரணதண்டனையும் இந்த நாட்டில் கிடையாது.

ஆரம்பத்தில் ராணுவ ஆட்சி, பிறகு பலகட்சி ஆட்சி முறை என்று இருந்தாலும் 1977 முதல் அமெரிக்கப் பாராளுமன்ற முறையிலான ஜனநாயக ஆட்சி ஏற்பட்ட பின் முறையான தேர்தல் நடத்தி மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். ஐந்தாண்டுக்கு ஒருமுறை தேர்தல். ஜனாதிபதி நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப் படுகிறார். அவர் பிரதமரையும் மந்திரிகளையும் நியமிப்பார். ஆனால் அதற்குப் பார்லிமெண்டின் ஒப்புதலைப் பெற்றாக வேண்டும். இலங்கையில் சென்றமுறை நடந்தது போல ஜனாதிபதி ஒரு கட்சியும் பிரதமர் ஒருகட்சி அமைந்து விடவும் இதனால் நேர்வதுண்டு. மாற்றுக் கட்சி உறுப்பினர்கள் மெஜாரிட்டியாக இருந்து விட்டால் இப்படி அமைந்துவிடும்.

சிஷெல்ஸில் மூன்று அரசியல் கட்சிகள் உள்ளன. ஜனநாயகக் கட்சி (Democratic party), மக்கள் கட்சி (Seychelles People's progrssive front), தேசீயக்கட்சி (Seychelles National party) ஆகியவை அவை. இப்போது ஆளும் கட்சியாக இருப்பது SPPF என்னும் மக்கள் கட்சி. எதிர்க் கட்சியாக இருப்பது SNP என்னும் தேசீயக் கட்சி. இங்கு தன் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள அதிமுக கடும் போட்டியைச் சமாளிக்க வேண்டியிருப்பது போல அங்கே ஆளும் கட்சி, நம் திமுக போல கடும் போட்டியில் இருக்கும் எதிர்க்கட்சியான தேசீயக் கட்சியுடன் கடுமையாக மோதவேண்டிய நிலையில் உள்ளது. இம்முறை ஜெயிக்க முடியாது போனால் இன்னும்15 ஆண்டுகளுக்கு ஆட்சியைப் பிடிக்கமுடியாது போய்விடும் என்கிற நெருக்கடியில் மக்கள் கட்சி உள்ளது. இதன் தலைவர் ரெனே என்பவர்தான் இராணுவப் புரட்சி செய்து முன்பு ஆட்சியைப் பிடித்தவர். இப்போது மீள்வாரா என்பது சீஷெல்சில் பரபரப்பாகப் பேசப்படும் விஷயம். ஏனெனில் சமீபத்தில் அங்கு தேர்தல் வருகிறது.

(தொடரும்)

1 comment:

இளந்திரையன் said...

இங்கு மட்டுமல்ல அமெரிக்கா கனடா போன்ற நாடுகளிலும் mr.president என்று அழைக்கலாம். இந்தியாவும் இப்படி இருந்தால் எங்கேயோ போய்விட்டிருக்கும்.

மக்கள் எடுக்க வேண்டிய முடிவு. தன் தன் அளவில் 10 பேரை துணைக்குக் கூட்டிக் கொண்டால் எதுவும் (நல்ல மாற்றங்கள் கொண்டுவருவது) சாத்தியமே...