கால நதிக்கரையில்...... (நாவல்) - அத்தியாயம் - 1
நடத்துநரின் ஊதல் 'ப்ர்ர்ர்.....ரிக்' என்று சிக்கனமாக ஆணையிட, பேருந்து நிற்கிறது.
"கொல்லத்தங்குரிச்சி...........கொல்லத்தங்குரிச்சி எல்லாம் எறங்கு!" என்கிறார் நடத்துநர். ஓரிருவர் இறங்குகின்றனர். சிதம்பரம் சிந்தனை கலைந்து வெளியே பார்க்கிறார்.
'கொல்லத்தங்குரிச்சியா? இங்கேயே இறங்கிக் கொள்ளலாமே!'
உடனே சிந்தனை செயல்பட, கைப்பெட்டியையும், தோள்பையையும் எடுத்துக் கொண்டு எழுந்து கொள்கிறார்.
"அய்யா, நீங்க புத்தூருக்கில்ல சீட்டு வாங்கி இருக்கீங்க. அது அடுத்த நிறுத்தம் - உக்காருங்க!" என்கிறார் நடத்துநர்.
"ஆமா! ஆனா இங்கியே எறங்கிக்கிறேன்" என்று புன்முறுவலுடன் சொல்லி விட்டு இறங்குகிறார். நடத்துநர் புருவம் நெருக்கி ஒரு கணம் அவரை நோக்கிவிட்டு, 'சரி, நமக்கென்ன?' என்று, அவர் இறங்கியதும் "போலாம் ரை.. ரை.." என்று கத்துகிறார். பேருந்து புழுதியைக் கிளப்பிக் கொண்டு சீறிப் பாய்கிறது.
தோள்பையை மாட்டிக் கொண்டு, கையில் பெட்டியுடன் மெதுவாக நடக்கிறார். அவரைப் பொறுத்தவரை, அவரது ஊர் இங்கேயே துவங்கிவிடுகிறது என்று நடத்துநருக்கு எப்படித் தெரியும்? அதோ தூரத்தில் தெரிகிறதே - அந்த ஆற்றுச் சரிவுதான் ஊரின் ஆரம்பம்.
ஒரு கூப்பிடு தொலைவு நடந்து, ஆற்றின் விளிம்புக்கு வருகிறார். ஆற்றின் சரிவுக்கு முன்பாகவே நீண்ட பாலம் தொடங்கி விடுகிறது. பாலத்தின் முனையில் நின்று பெட்டியைக் கீழே வைத்துவிட்டு, ஆற்றின் பரப்பை கண்ணுக்கெட்டிய தொலைவு வரை, ஒரு 'பருந்துப்பார்வை' யாகப் பார்க்கிறார். கண்ணுக்கெட்டியவரை இருபுறமும் வெண்மையான மணல்தான் தெரிகிறது. கூர்ந்து பார்த்தால், தொலைவில் ஒரு சிறு வாய்க்கால் போல சன்னமான நீரோட்டம் வளைந்து நெளிந்து பச்சைப் பாம்பு தன் மெல்லிய உடலால் வளைந்து நெளிந்து ஊர்வதுபோல தோற்றம் தருகிறது. பாலத்தினடியில் சற்று அகன்று கால்கள் பிரிந்து, பாதத்தைக்கூட முழுதும் நனைக்க முடியாத நீர் மட்டத்துடன் பளிங்குபோல் நீரோட்டம் கிழக்கு நோக்கி ஊர்ந்து செல்கிறது.
இது ஸ்வேத நதி - வெள்ளாறு. மெய்கண்டதேவர் அவதரித்த புண்ணியத் தலம் - திருத்தூங்கானைமாடம் எனும் பெண்ணாகடம் - இதன் கரையில் பத்துகல் தொலைவில் இருக்கிறது. புண்ணியத்துறைகள் ஏழும் இதன் கரைகளில்தான் உள்ளன. புனிதமும் தொன்மையும் மிக்க இந்த ஆற்றின் கரையில்தான் நாம் பிறந் தோம் என்கிற பெருமிதம் ஒரு கணம் அவருள் எழுந்து பரவுகிறது.
இவ்வளவு சாதுவாக அழகாக ஓடுகிற நீரோட்டம்தான் வெள்ள காலத்தில் எப்படி ஆக்ரோஷமாய் சீறிப் புரண்டோடும்? சின்ன வயதில் அப்படிப் பார்த்த வெள்ளக் காட்சிகள் மனத் திரையில் விரிகின்றன.
ஒருமுறை தொடர்ந்து ஒரு வாரத்துக்கு அடைமழை. தெருவெல்லாம் மழை நீர் பெரு ஓடைபோலப் பிரவகித்து வேகமாய் ஓடியது. வெள்ளாற்றில் பெருவெள்ளம் இரு கரைகளையும் தொட்டுக் கொண்டு 'ஹோ என்ற பேரிரைச்சலுடன் வேகமாக வெகு தொலைவில் இருந்த சமுத்திரத்தை அவசரமாய்ச் சந்திக்க விழைகிற மாதிரி பரபரத்து ஓடியது. மழைத்தூரல்களினூடே ஊரே திரண்டு வெள்ளத்தை வேடிக்கை பார்க்கப் போனது. அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டு சின்னப் பையனான சிதம்பரமும் போனார்.
அப்பா! இப்போது நினைத்தாலும் மெய் சிலிர்க்கிறது. என்ன உக்கிரம்! என்ன இழுப்பு! என்ன இரைச்சல்! நொப்பும் நுரையுமாகப் பொங்கி, பெரிய காபி ஆறு ஓடுகிறமாதிரியான காபி வண்ணத்தில் நீர்ப் பரப்பு தெரிந்தது. மரங்களும் கிளைகளும், ஆடுமாடுகளும் வேகமாக இழுத்துச் செல்லப் பட்டன. கரையிலிருந்த பலர் வெள்ளத்தில் பாய்ந்து நீந்தி கைக்குக் கிடைத்த கிளைகளைக் கரைக்கு இழுத்து வந்தார்கள். கூரைகளும் கூட, மேலே தலைநீட்டிக் கொண்டிருந்த பாம்பு களுடன் மிதந்து போயின. மூன்று நாட்கள் ஆயின நீர்மட்டம் குறைய. அப்போதும் கூட இறங்க முடியாத ஆழமும் இழுப்பும் இருந்தன. அக்கரைக்குப் போகவும் திரும்பவும், தெப்பக்கட்டைகளை மிதக்கவிட்டு குழுகுழுவாக 'ஷட்டில்' அடித்தார்கள். அதற்கென்றே பழக்கப்பட்ட சேரி ஆட்கள் லாகவமாக கட்டையுடன் மிதந்து கயிறு கட்டி இழுத்து பிரயாணிகளைக் கரை சேர்த்தார்கள். இறங்கிய இடத்திலிருந்து ஒரு கூப்பிடு தொலைவு தள்ளித்தான் எதிர்க்கரையில் ஏறமுடியும். ஒரு வாரத்துக்கு ஆட்களுக்கு நல்ல வசூல்!
வெயில் காலத்திலும் வரும்படிக்குப் பஞ்சமிராது. வெள்ளம் வற்றி சிற்றாறாய் சாதுவாக ஆறு ஓடும்போது, வெள்ளம் பாய்ந்து வறண்ட மணற்பரப்பாக இரண்டு பர்லாங்குக்கும் அதிகமாய் நீண்ட வண்டிபாட்டையுடன் காட்சி தரும். விருத்தாசலம் சந்தை நாட்களிலும் பிற விசேஷநாட்களிலும் ஆற்றைக் கடக்க பாரவண்டிகளுக்கு இந்த ஆட்களின் உதவியின்றி முடியாது. பாரவண்டிகளைத் தள்ளி விடவும் எப்போதாவது அந்த வழியே வரநேரும் கார்களைக் கயிறு கட்டி அக்கரைக்கு இழுத்துப் போகவும் நல்ல கூலி கிடைக்கும்.
ஒரு சமயம் மாமா மகன் திருமணத்துக்கு உடையார்பாளையத்திலிருந்து விருத்தாசலத்துக்குப் பெண் வீட்டுக்குச் சென்ற ஒன்பது கார்கள் இப்படித்தான் கரையேற்றப் பட்டன. அப்பா முன்னேற்பாடாகச் சொல்லி வைத்தபடி பத்திருபது ஆட்கள் தாம்புக் கயிறுகளுடன் காத்திருந்தார்கள். அந்த வழியே காரைக் காண்பதே அதிசயம். அதிலும் ஒன்பது கார்கள் பல வண்ணங்களில் வரிசையாக வருவதென்றால்? ஊரே திரண்டு ஆற்றங்கரைக்கு வந்துவிட்டது வேடிக்கை பார்க்க.
ஒவ்வொரு காராகக் கயிறுகட்டி முன்னே நாலுபேர் இழுக்க பின்னாலிருந்து நாலுபேர் தள்ளிவிட கார்கள் அனைத்தும் இந்த எதிர்க்கரை மேடு வரை கொண்டு வந்து விடப்பட்டன. அந்தக் கார்கள் ஒன்றினுள் தானும் சிறுவனாக அமர்ந்திருந்து பார்த்தது பசுமையாய் இன்னும் நினைவில் ஆடுகிறது.
இப்போது வெள்ளத்தைக் கடக்க தெப்பமும் தேவையில்லை; அடிக்கடி காரும் லாரியும் பேருந்துமாய் போவதால் நின்று பார்க்க யாருக்கும் நேரமுமுமில்லை; அது ஆச்சரியமாகவும் இல்லை. பாலம் கட்டி வெகுநாட்கள் ஆகியிருப்பது தெரிகிறது.
மெல்ல நடந்து பாலத்தின் மேலாகப் போகாமல், ஆற்றுச் சரிவில் சரிந்து இறங்கி மணல் வழியே நடந்து நீரோட்டத்துக்கு வந்தார். தோள்பையையும் கைப்பெட்டியையும் நீர்ப்பரப்பைத் தாண்டி ஒரு புல்திட்டில் வைத்து விட்டு திரும்ப நடந்து நீரோட்டத்து வந்தார். குனிந்து தெளிந்த நீரில் கைகளைத் தேய்த்து அலம்பிக் கொண்டு நாலுகை அள்ளிப் பருகினார். புத்துணர்வு வந்தமாதிரி ஒரு பரவசம் படர்ந்தது.
ஆகா! இது நமது ஊர்த் தண்ணீர். இது நமது மண். உடலெங்கும் ஒரு சிலிர்ப்பு பரவுகிறது. பிழைப்புக்காக எங்கெங்கோ சுற்றினாலும், எத்தனை ஆண்டுகள் வெளியூரில் வாழ்ந்தாலும் நாம் பிறந்த மண் என்கிறபோது ஒரு பந்தமும் நெகிழ்ச்சியும் ஏற்படத்தான் செய்கிறது. காலுக்கடியில் கிச்சுக் கிச்சு மூட்டுகிறமாதிரி, மணலை அரித்து ஓடுகிற நீரின் ஸ்பரிசம் ஒரு கிளுகிளுப்பை உண்டாக்க, சற்றுநேரம் நிற்கிறார். எதிரே, தான் இறங்கி வந்த மேட்டுச் சரிவைப் பார்க்கிறார்.
பள்ளிப் பருவத்தில், இங்கு பதினெட்டாம் பெருக்கு படைக்கவும், தைப்பூசம் தீர்த்தவாரிக்கும் வரும்போதும் இந்த நீர்மட்டத்திலிருந்து எதிரே பார்த்தால், சாலை யின் சரிவின் இரு பக்கமும் மிகப் பிரம்மாண்டமான இரண்டு ஆலமரங்கள், ஊரின் துவாரபாலகர்போல - நாலாபக்கமும் கிளைவிட்டுப் பரந்து விழுதுகள் தொங்க நிற்கிற காட்சி பிரமிப்பைத் தரும். அவற்றின் அடிவேர்கள் சாலை மட்டத்திலிருந்து ஆற்று நீர் மட்டம் வரை நாலுஆள் உயரத்துக்கு, தடித்து பின்னிப் பிணைந்து, இடையிடையே குகைகள் போல இருண்ட சந்துகள் தெரிய, ஆயிரங்கால்களுடன் நிற்பது போலத் தோன்றும். இன்று அவை இல்லை. "ஆற்றங்கரையின் மரமும் அரசரிய வீற்றிருந்த வாழ்வும் விழும்" என்ற ஆரம்பப் பள்ளியில் படித்த ஔவையாரின் பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன. நிலையாமைக்கு எவ்வளவு யதார்த்தமான உதாரணம்!
கால ஓட்டத்தில் எத்தனை மாற்றங்கள்! இந்தப் பிரம்மாண்ட மரங்கள் ஒருநாள் இல்லாமல் போகும் என்று அன்று நினைத்திருப்போமா? இந்த ஆறுதான் எத்தனை முறை தெற்குப் பக்கமும் வடக்குப் பக்கமுமாய் மாறிமாறி தன் பாதையை மாற்றி பெரு வெள்ளக் காலங்களில் விளை நிலங்களை எல்லாம் அழித்து மணற்பாங்காக மாற்றி இழப்பை உண்டாக்கி இருக்கிறது!
ஊரிலும்தாம் எத்தனையோ மாற்றம்! இருபத்தைந்து வயதில் வேலை நிமித்த மாய் ஊரை விட்டுப் போய் வடக்கே எங்கெங்கொ சுற்றி, ஓய்வு பெற்ற பிறகு சொந்த மண்ணை, அதன் மாறங்களைத் தரிசிக்க வந்திருக்கிறவருக்கு இன்னும் எத்தனைவித மாற்றங்கள், பரிணாம வளர்ச்சிகள் அதிர்ச்சியும் ஆனந்தமும் தரப்போகின்றனவோ? சில்லென்ற நீர்ப்பரப்பிலிருந்து எழுந்து லேசாக முகத்தில் வீசும் மென்காற்றை அனுபவித்தபடி கரை ஏறினார்.
(தொடரும்)
Friday, June 01, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment