Friday, June 01, 2007

கால நதிக்கரையில் ... - 7

விளையாட்டுத் திடலைத் தாண்டியதும், ஏதோ இதுவரை போயிராத புதிய வழியில் போகிற மாதிரியான உணர்வு ஏற்பட்டது. ஏதோ மாற்றம் தெரிந்தது. அது என்ன?

சற்றே நிதானித்து யோசித்தபின்தான் அந்தப் புதிர் விடுபட்டது. திடல் முடிகிற இடத்திலிருந்து கூப்பிடுதொலைவுக்கு ஒரு நீண்ட வாய்க்கால் போன்ற நீர்ப்பரப்பு இருக்குமே- அது இல்லை!

பாதைக்கு வலப்பக்கத்தில் இருந்த பெரிய பாசன ஏரியிலிருந்து நீர், பாதையைக் கடந்து கீழ்ப்பக்கத்து நிலங்களுக்குக் கொண்டு செல்லப்படுகிறது. ஏரியிலிருந்து வெளியேறும் நீர், மதகு அமைத்து குழாய் வழியாக பாதையைக் கடக்க ஏற்பாடு செய்யாததால் சாலை முழுதுமே வாய்க்காலாகி, ஊர்முனை வரை ஒரே நீர்ப்பரப்பாகி கடப்பவர்கள் காலம்காலமாய் அவஸ்தைப்படுகிற இடம் அது. எப்போதும் முழங்காலளவு தண்ணீர் இருந்து கொண்டே இருக்கும். வேட்டியை அல்லது புடவையை முழங்கால் வரை உயர்த்திப் பிடித்தபடி அவ்வளவு தொலைவும் நீந்தாத குறையாய் மக்கள் சிரமப்பட்டே கடந்து வந்தார்கள். குழந்தைக¨ளைத் தூக்கிக் கொண்டோ அல்லது வண்டியில் வைத்தோதான் அழைத்துச் செல்லவேண்டும். சைக்கிள்காரர்கள் பளுதூக்குகிறவர்கள் போல இரண்டு கைகளாலும் சைக்கிளை தலைக்கு மேலே உயர்த்தி தூக்கிப் பிடித்தபடியேதான் செல்லவேண்டும். சிதம்பரமே அந்த அவஸ்தையை அவருக்கு வினவுதெரிந்த நாளாய் அனுபவித்திருக்கிறார்.

ஆனால் ஊரில் பணக்காரர்களும் அறிவார்ந்தவர்களும் இருந்தும், அத்தனை ஆண்டுகளாய் யாருக்கும் மாற்று யோசனை ஏன் தோன்றாது போயிற்று? ஊரில் அதிகம் படித்து மக்களுக்கு வழிகாட்டியாய் விளங்கிய அப்பாவுக்கும், சமூக சேவையில் ஈடுபட்ட அண்ணனுக்கும்கூட ஏன் அதில் கவனம் செல்லவில்லை? சாலைகளைப் பராமரிக்கும் அரசுத்துறை அத்தனை ஆண்டுகளய் இந்தப் பக்கமே வந்ததில்லையா? இப்போதுதான் சிதம்பரம் அதை எண்ணிப் பார்க்கிறார்.

இப்போது ஊருக்குப் பஞ்சாயத்து வந்திருக்கிறது. அதன் காரணமாய் இப்போது சாலையை உயர்த்தி, மதகு கட்டி குழாய் அமைத்து - நீர் அடக்கமாய் வெளியேறச் செய்திருக்கிறார்கள். அதனால்தான் முன்னேறிச் செல்ல பழைய ஆயாசம் ஏற்படவில்லை.

வாய்க்காலின்- அந்த முனையில் தெருக்கள் தொடங்குமிடத்தில், ஏரிக் கரையின்மீது ஒரு பெரிய அடர்ந்த அத்திமரம் இருந்ததே- அதை நோக்கி நடந்தார்.

அத்திமரத்தடியில் எப்போதும் சிறுவர் கூட்டம் இருக்கும். மங்கிய பவழத்தின் நிறத்தில் பெரிது பெரிதாக உதிர்ந்து கிடக்கும் அத்திப் பழங்களை ஆவலுடன் பொறுக்கிப் பிட்டுப் பார்த்தால் உள்ளே சின்னச் சின்னக் கொசுக்கள் மொய்த்துக் கொண்டிருக்கும். அரிதாக ஒன்றிரண்டு தேறினால் அதிர்ஷ்டம்! கொசு மொய்த்தாலும் ஊதி விட்டுத் தின்கிறவர்களும் இருந்தார்கள்.

இப்போது அதற்கும் வாய்ப்பில்லை போலிக்கிறது. அந்த அத்தி மரம் இருந்த இடத்தில் நாலைந்து கட்சிக் கொடிகள், உயரத்தில் போட்டிபோட்டுக் கொண்டு நின்றன. அத்திமரம் முன்பு பார்த்த ஆல, இலுப்பை மரங்களைப் போல கால வெள்ளத்தில் தானாகச் சாய்ந்ததோ அல்லது விளையாட்டுத் திடல் போல கட்சிக் கொடிகளுக்காகக் காலி செய்யப்பட்டதோ? ஒவ்வொரு இடமும் ஊரின் பழைய அழகுகளை ஒவ்வொன்றாய் இழந்து போயிருப்பதைக் காட்டியது.

கொடிக்கம்பங்களை நிமிர்ந்து பார்த்தார். 'அட! நம்மூரில் இத்தனை கட்சிகளா? பஞ்சாயத்து வரும்வரை எங்கும் சாதி, மத, இனக் குழுக்களின் ஆதிக்கம் இருந்ததில்லை. திராவிடக் கட்சிகள் ஆதிக்கம் பெற்ற பிறகு அவை கிராமங்களிலும் நுழைந்து இளம் தலைமுறையினரைக் கட்சி கட்டச் செய்திருக்கிறது. அதற்கு நம்மூர் மட்டும் எப்படி இலக்காகாமல் இருக்கமுடியும்?' என்று சிந்தனை ஒடியது.

அத்திமரத்துக்கு எதிரில்தான் ஊர்த் தொடக்கத்தின் முதல் தெருவான வடக்குத் தெரு இருக்கிறது. அத்தெருவின் முதல் வீட்டின் முன்னால் கயிற்றுக் கட்டில் போட்டு ஆதிமூல முதலி உட்கார்ந்திருப்பார். இந்த ஊரின் 'மாட்டு வைத்தியர் அவர். இந்த வட்டாரத்துக்கே மாடு வாங்கவும், விற்கவும், நோய்ப்பட்டால் வைத்தியம் பார்க் கவும் பிரசித்திபெற்றவர். ஊருக்குள் நுழைகிற எவரும் அவர் பார்வையிலிருந்தும் விசாரிப்பிலிருந்தும் தப்பி விடமுடியாது. சிதம்பரம் வெளியூருக்குப் படிக்கப்போய் விடுமுறைகளில் வீடு திரும்பும்போது அவர் நிறுத்தி குசலம் விசாரிக்காமல் விட்டதில்லை. .

இப்போதும் அவர் தன்னை விசாரிக்க மாட்டாரா என்று இருந்தது சிதம்பரத்துக்கு. ஆனால் அது அசட்டு எதிர்பார்ப்பு என்று அவருக்குத் தெரிந்தே இருந்தது. அந்தக் காலத்திலேயே- இவர் சிறுவனாய் இருந்தபோதே அவருக்கு வயது அறுபதுக்கு மேல் இருக்கும். இப்போது கால விருட்சங்களே காணாது போய்விட்ட நிலையில் அவர் மட்டும் சிரஞ்சீவியாய் இருப்பார் என்று எதிர்பார்க்க முடியுமா? இவர் போல ஊருக்குள் இன்னும் எத்தனைபேர் மறைந்து விட்டார்களோ? இவரை அடையாளம் காண மூத்த தலை எதுவும் இருக்கப் போவதில்லை என்பது நிச்சயம். இவர் வயது ஆட்கள் யாராவது இருந்து அடையாளம் கண்டு பேசினால்தான் உண்டு.

கொடிக் கம்பங்களின் பக்கத்தில் இருந்த படிகள் வழியே ஏறி, ஏரிக்கரையின் மீது நின்றார். ஏரியிலும் பெரும் மாறுதல் தெரிந்தது. கண்ணுக்கு எட்டியவரை கடல் நீல- நீர்ப்பரப்பால் விரவி, உள்கரையில் அலைவாரி கட்டப்பட்டு சின்னக் கடல் போன்ற பரப்பில் அலைகள் கரை நோக்கி வந்து 'சளார் சளார்' என அதில் மோதி சிலிர்ப்பை உண்டாக்குமே அது எங்கே? நீர் அனேகமாக வற்றி ஆங்காங்கே சின்னச் சின்னக் குட்டைகளாய்த் தேங்கி அந்தப் பெரிய ஏரி அழகிழந்து நிற்கிறது. அக்கரையில் அடர்ந்து செழித்து, இந்த ஊரின் வருமானத்திற்கு ஒரு ஆதாரமாய் இருந்த பெரிய விழல்காட்டைக் காணோம். அவை இருந்த இடமெல்லாம் ஆக்கிரமிப்புக்குள்ளாகி சாகுபடி செய்யப்பட்டிருப்பது தெரிகிறது.

ஏரியின் கரைதான் எவ்வளவு அகலமாய் இருந்தது? ஒரு வண்டி போகிற அளவுக்கு அகலமாய் இருந்த கரை இப்போது குடிசைகளால் நிரம்பி நடக்கவே இடமில்லாதபடி ஆக்கிரமிக்கப் பட்டிருந்தது. பாசன வசதியைப் பாழ்படுத்துவதில் அனைவருமே மும்மரமாய் ஈடுபட்டிருக்கிற மாதிரி தெரிந்தது. மனிதனின் ஆசைக்கு அளவே இல்லையோ? இது எதனால்? மக்கள் பெருக்கமா? அல்லது மனிதர்களின் சுயக்கட்டுப்பாடு இழப்பின் பிரதிபலிப்பா?

பெருமூச்சுவிட்டபடி திரும்பி, படி இறங்கி கடைசிப் படியில் நின்றபடி வடக்குத் தெருவை ஒரு கண்ணோட்டம் விட்டார். குடிசைகளே அதிகமும் நிரம்பி, ஒவ்வொரு வீட்டு வாசலிலும் ஆடோ, பன்றியோ, கோழியோ மேய்ந்தபடி, ஈரக்கசிவும் குப்பைகளும் நிரம்பி நடக்கவே கூசும் தெரு, இப்போது பளிச் சென்று- தெரு நெடுக சிமிண்ட்சாலை போடப்பட்டு குடிசைகள் குறைந்து ஓட்டு வீடுகளும் மச்சு வீடுகளுமாய் கண்ணுக்கு நிறைவாய் இருந்தது. பஞ்சாயத்து வந்ததின் பலன் போலிருக்கிறது!

சிறுபிள்ளையாய் இருந்தபோது இந்தத் தெருவுக்குப் போகவே அம்மா விடமாட்டார்கள். அதிகமும் இசைவேளாள சாதியினர் வசித்த இத்தெருவில் மேல் சாதிக் காரர்கள் நடமாடுவதில்லை. அத்திமரத்தடியில் நின்றபடியே அத்தெருவில் யாரிடமாவது வேலை இருந்தால் அழைத்துப் பேசுவது தானே வழக்கம்?

கௌரவமானவர்கள் அத்தெருவுக்குச் செல்லாதற்கு வேறு ஒரு காரணமும் இருந்தது. அந்தத் தெரு தாசிகள் தெருவாக வெகுநாட்கள் இருந்திருக்கிறது. 'தேவடியாத்தெரு' என்று கொச்சையாய் அழைத்திருக்கிறார்கள். இசைவேளாளர்கள் வீடுகளில் பெண்களை சிவன் கோயிலுக்குப் பொட்டுக்கட்டி விடுகிற பழக்கம் இருந்தது. எல்லா வீடுகளிலும் என்றில்லாவிட்டாலும் பரம்பரையாய் சில வீடுகளில் தொடர்ந்து இப்படிப் பெண்களை ஆண்டவனுக்கு அடியார்களாக்கி இருக்கிறார்கள். அதனால் 'தேவரடியார்' என்று அழைக்கப்பட்டார்கள். நாளடைவில் அது 'தேவடியாள்' என்று ஆகி விட்டது.

சிதம்பரம் சிறு பிள்ளையாய் இருக்கையில் அந்த ஊரில் பரம்பரையாய் மூன்று வீடுகளே இந்தத் தேவதாசிகள் கொண்டதாக இருந்தது. அவர் படித்த போது அவருக்கு மேல் வகுப்பில் படித்த ரெங்கம்மா என்ற ஒருத்தி, பரம்பரைத் தேவதாசி வீட்டிலிருந்து ஐந்து வயதிலேயே பொட்டுக்கட்டப் பட்டவள். அப்போது அவளுக்கு ஒன்பது வயது இருக்கும். சிதம்பரம் வகுப்பில் படித்த ஒருத்தி - பொன்னம்மா என்பவள் - புதிய குடும்பம் ஒன்றிலிருந்து பொட்டுக்கட்டப் பட்டது அவருக்கு நினைவிருக்கிறது. அவளுக்கு அப்பா அம்மா இருந்தார்கள். ரெங்கம்மாவுக்கு அம்மாதான் உண்டு; அப்பா யாரென்று தெரியாது. பொன்னம்மா குடும்பம் மிக ஏழ்மையானது. அவள் அப்பா சிவன் கோவிலில் மெய்காவல் வேலை பார்த்தார். அவள் அம்மா வீடுகளில் வேலை செய்து கொண்டிருந்தாள். பரம்பரையாக தாசித்தொழிலில் அவர்கள் குடும்பம் இல்லாதிருந்த போதும் வறுமை காரணமாக பெண்ணாவது கூலி வேலை செய்யவேண்டாம் என்று கருதி அவளை சிவன் கோயிலுக்குப் பொட்டுக் கட்டிவிட்டார்கள். அவளுக்குப் பிறகு வேறு யாரும் அவருக்கு வினா தெரிந்த பிறகு பொட்டுக்கட்டிக் கொள்ளவில்லை. இப்பொது அந்த வழக்கம் முற்றிலும் அற்றுப் போயிருக்கலாம். இப்போது அந்தத் தெருவைத் தாசித்தெரு என்று சொல்லவோ அத்தெருவுக்குச் செல்லக் கூச்சப் படவோ அவசியம் இருக்காது என்று தோன்றியது.

அவருக்கு மேல் வகுப்பில் படித்த ரெங்கம்மாவைப் பற்றி சிந்தனை ஓடியது. அதைச் சிந்தித்தபடியே அங்கிருந்து நகர்ந்து மெல்ல நடை போட்டார்.

(தொடரும்)

No comments: