Friday, June 01, 2007

கால நதிக்கரையில்... - 4

சாலையின் இருபுறமும், அண்ணாந்து பார்த்தால் உச்சி தெரியாமல் உயர்ந்து பரந்து நின்றிருந்த இலுப்பை மரங்க¨ளைக் காணோமே! மனிதனின் பேராசைக்கு அவையும் பலியாகி விட்டனவா? அல்லது ஆற்றின் வெள்ளப் பிரவகிப்பில் அவை தலைகுப்புறச் சாய்ந்து மறைந்தனவா?

அதிகாலையில் அம் மரங்கள் உதிர்த்திருக்கும் - சின்னக் குடுமியுடன் கூடிய குட்டிக்குட்டித் தேங்காய்கள் போல, பளீரன்ற வெண்முத்துக்கள் பரவிக்கிடக்கிற மாதிரி - அபூர்வ மணத்துடனான இலுப்பைப் பூக்கள் எவ்வளவு இதமான காட்சி!

அதிவேக மனித வளர்ச்சியில் அழகுணர்ச்சியும் ஆன்ம நேயமும் அற்றுப் போகிற வக்கரிப்பு கிராமத்தையும் பீடித்திருப்பது தெரிகிறது.

அவசரமின்றி நடந்து, ஊருக்குத் திரும்பும் வலப்பக்கச் சாலையை அடைகிறார். இங்கே வலப்புறத்தில் - ஒரு சுமைதாங்கி இருக்குமே! தன் சுமையைச் சற்று நேரம் இறக்கி வைக்க எண்ணி சுற்று முற்றும் பார்க்கிறார். பலகையான முதுகுடன் நான்கு கால்களையும் வெளிப் பக்கமாய் அகலப்பரப்பி நிற்கிற ஒட்டகம் போல- கற்பலகையின் பக்க வாட்டில் 'றா.சின்னய்யாப் பிள்ளையின் பாரியாள் லோகாம்பாள் ஆச்சி தருமம்' என்று கோணல்மாணலான எழுத்தில் செதுக்கி வைத்து - எந்த நேரத்தில் சரிந்து விழுமோ எனும்படி அச்சம் தருவதாய் ஆண்டாண்டு காலமாய் நின்று கொண்டிருந்த அந்தச் சுமைதாங்கி எங்கே?

அந்தக் கல் எத்தனை உபயோகமாய் இருந்தது! பயண வசதிகள் இல்லாத காலகட்டத்தில், வழிப்போக்கர்களுக்கு ஆசுவாசம் தந்த அந்தச் சுமைதாங்கியும் கால ஓட்டத்தில் ஆற்றங்கரைக் கால விருட்சங்களைப் போல வீழ்ந்து பட்டிருக்கலாம்!

அது இருந்த இடத்தை ஒரு சின்னக் குடிசை ஆக்கிரமித்திருந்தது. இடப் பக்கம் ஒரு பேருந்து நிழற்குடை - 'ஜவஹர் வேலைவாய்புத் திட்டப் பணி' என்று எழுதப்பட்டு நிறம் மங்கி நின்றிருந்தது. உட்கார அமைக்கப் பட்டிருந்த சிமிண்ட் பெஞ்சு உடைந்து கம்பிகள் வெளியே எலும்புக்கூடாய்க் காட்சி தருகிறது. உட்காரவோ, வெயிலுக்கு ஒதுங்கவோ லாயக்கில்லா நிழற்குடை!

சாலை முக்கில் '0' என்று பொறிக்கப்பட்ட மைல்கல் இருந்தது. 'சைபர் கல்' என்று அடையாளம் சொல்ல அழைக்கப் பட்ட - நினைவு தெரிந்த நாளாய் இருந்த அந்தக் கல் இப்போது காணப்படவில்லை. அந்த இடத்தில், சாய்ந்து திசை திரும்பி இருக்கிற கைகாட்டி 'தெ.வ.புத்தூர்- 1கிமீ' என்று தூரம் காட்டிக் கொண்டிருக்கிறது. உடைந்த பெஞ்சின் மீது உடையாதிருக்கும் பகுதியில் தன் சுமைகளை இறக்கி வைத்துவிட்டு சற்று இளைப்பாறுகிறார்.

இந்த '0' கல்லுக்குப் பக்கத்தில், ஊர் நடேச ஆசாரி செய்த காந்திஜியின் சுதைச் சிற்பம் ஒன்று நின்றிருந்தது. அப்போது காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கினால் இப்படி ஊருக்கு ஊர் காந்தி சிலைகளும் கைராட்டைக் காங்கிரஸ் கொடிகளும் இடம் பெற்றிருந்தன. இப்போது அந்த இடத்தில் எம்.ஜி.ஆர் சிலையும் பலகட்சிக் கொடிகளும் காலமாற்றத்திற்கு ஏற்ப இடம் பெற்றிருக்கின்றன.

ஊரை நோக்கிச் செல்லும் சாலையைப் பார்க்கிறார். கப்பிசாலை இப்போது தார்ச்சாலை ஆகி இருந்தாலும் அங்கே போடப்பட்ட ஜல்லிகள் பெயர்ந்து காலைப் பதம் பார்ப்பதாக- நடக்க முடியாத நிலையிலிருக்கிறது.

எதிர்ச்சாரியில் புளியமரத்தை ஒட்டி ஒரு கூரைவீடு. முன்னால் தட்டி உயர்த்தி ஒரு டீக்கடை. தள்ளித்தள்ளி சில குடிசைகள் நெடுஞ்சாலை ஓரத்தை ஆக்கிரமித்துக் கொண்டு சேரி வரை தொடர்கின்றன. சாலை ஓரமாக சற்று நடந்தார். அதோ ஒரு ஓட்டுவீட்டின் தாழ்வான திண்ணையின் ஓரத்தில் சிவப்புநிறம் மங்கிப்போன தபால் பெட்டி ஒன்று தூணில் கட்டித் தொங்குகிறது. 'அஞ்சல் நிலையம்' என்று ஒரு சின்ன அறிவிப்புப் பலகை காட்டுகிறது.

ஓ! அஞ்சல் நிலையமும் வந்து விட்டதா? அந்தக் காலத்தில் இப்படி ஊருக்கு ஊர் அஞ்சல் நிலையம் ஏது? பஞ்சாயத்து வந்தும்கூட இங்கு அஞ்சல் நிலையம் வந்திருக்க வில்லை. ஐந்து மைலுக்கு அப்பாலுள்ள இதைவிடச் சற்றுப்பெரிய ஊரில் இருந்துதான் தினமும் மாலையில் வெயில்தாழ்ந்து, தபால் வரும். ஒரு கிழட்டு சைக்கிளில், முண்டாசு கட்டிய கிழட்டு ஆள் ஒருவன் சாலையின் செம்மண் முழுதையும் தன் மீதும் சைக்கிள் மீதும் ஏற்றிக் கொண்டு மெதுவாக ஊர்ந்து வருவான். பகுதி நேர அஞ்சல் அதிகாரியான ஒரு மிராசுதாரரின் பண்ணை ஆள் அவன். பகுதிநேர அஞ்சலகம் என்பதால் தபால்காரன் என்று தனியாக இல்லை. அஞ்சல் அதிகாரியே சகலமும். அவர் வரமுடியாதென்பதால் கொஞ்சம் விலாசம் படிக்கத் தெரிந்த இந்த ஆளை அனுப்புவார்.

சின்ன வயசில் பத்து மைலுக்கு அப்பால் உள்ள நகரமும் இல்லாத கிராமமும் இல்லாத ஒரு ஊரிலிருந்து வாரத்திற்கு இரண்டு நாள் தபால் வந்தது நினைவுக்கு வருகிறது. மிகவும் நலிந்த, தாடிக்கார சாயபு ஒருவர் தோளில் காக்கிப் பை தொங்க கையில் குடையுடன் நடந்தே அவ்வளவு தொலைவும் தள்ளாடியபடி வந்தது நினைவிருக்கிறது. அனேகமாக, ஊரில் அப்பாவுக்கு மட்டுமே தபால் வரும். அதுவும் அப்பா சந்தா கட்டிய 'தினமணி' பத்திரிகை இரண்டு மூன்றாய்ச் சேர்ந்து வரும். மாதம் ஒருமுறை தருமமைஆதீன வெளியீடான 'ஞானசம்பந்தம்' என்கிற ஆன்மிகப் பத்திரிகையும், அபூர்வமாக தபால் ஏதாவதும் வரும். 'செந்தமிழ்ச்செல்வி" என்றொரு பொடி எழுத்துப் பத்திரிகையும் வரும். அப்பா அந்தக் காலக் கட்டத்து ஜஸ்டிஸ் கட்சியின் ஆதரவாளர். அந்தக் கட்சிப் பத்திரிகை ஒன்றும் வரும். ஒரு முறை அந்தப் பத்திரிகை இதழொன்றின் அட்டையில் கோட்டுடன் பெரிய முறுக்கு மீசைத் தலைவர் ஒருவரது படத்தைப் போட்டு 'தலைவர் பன்னீர்ச் செல்வம் மறைவு' என்று போட்டிருந்ததைக் காட்டி அவரது மறைவுவு பற்றி அப்பா வருத்தம் தெரிவித்தது நினைவுக்கு வருகிறது. அதில் வரும் சிறுவர்க்கான பக்கங்களில் கதைகள் படித்ததுதான் தனது வாசிப்பு ரசனை யின் தொடக்கம் என்பதும் நினைவில் புரள்கிறது.

அப்பா அந்தக் காலத்து மெட்றிகுலேஷன் படித்தவர். அந்த வட்டாரத்தில் ஆங்கிலம் தெரிந்தவர் அவர் மட்டுமே என்பதால் - தந்தி, நீதிமன்றத் தீர்ப்பு, பதிவு அலுவகப் பத்திரங்கள் போன்றவற்றைத் தமிழ்ப் படுத்திச் சொல்ல அப்பாவிடம்தான் வருவார்கள். தினமும் மாலை நேரத்தில் அப்பா தெருவோடு போகிறவர்களை அழைத்து தினமணி செய்திகளைப் படித்துச் சொல்லுவார். அவர், தான் படித்ததனால் தன் பிள்ளைகளும் விவசாயத்தை நம்பி இருக்காமல் படித்துப் பட்டம் பெற்று உத்தியோகத்துக்குச் செல்ல வேண்டுமென்று எல்லோரையும் அப்போதே படிக்கவைத்தார். யாராவது 'என்னங்க எல்லாப் பிள்ளைகளையும் படிக்கவச்சு வேலைக்கு அனுப்பிச்சுட்டா இருக்கிற நெலபுலத்த உங்களுக்கு அப்புறம் ஆரு பாக்கறது?" என்று கேட்பார்கள்.

"ரஷ்யாவிலேயும், சைனாவிலும் கம்யூனிஸ்டுகள் புரட்சி பண்ணிக்கிட்டுருக்காங்க. உழுறவனுக்கே நெலம் சொந்தம்னு கேக்கறாங்க. இன்னும் முப்பது வருஷத்திலே நம்ப நாட்டிலும் அப்பிடி வந்துடப் போவுது. அப்போ என் பிள்ளைகள் நெலத்தையே நம்பிக் கிட்டு மிராசுதாரா இருந்துட முடியாது. அதனாலே தான் உங்க பிள்ளைகளையும் படிக்கவைங்கன்னு சொல்லிகிட்டு வர்ரேன்" என்று அப்பா அப்போதெல்லாம் சொன்னது இப்போது உண்மையாகி விட்டதுதானே!

டீக்கடையை ஒட்டி நடக்கையில் அங்குள்ள பெஞ்சு மீது கொட்டை எழுத்துக்களில் அச்சாகியுள்ள ஒரு பத்திரிகை - 'தினத்தந்தி'யாக இருக்கலாம் - கலைந்து கிடக்கிறது. அதில் ஒரு தாளை நிதானமாக வாய்விட்டுப் படித்துக் கொண்டி ருந்தவர் இவரை நிமிர்ந்து பார்க்கிறார். வெளியூர்க்காரரோ என்னவோ? இவரை அடையாளம் தெரியவில்லை. இவருக்கும் அவரைத் தெரியவில்லை. உள்ளூர்க்காரராக இருந்தாலும், முப்பது வருஷத்துக்குப் பிறகு பார்க்கும் அடுத்த தலைமுறையைத் தெரியாது தானே?

''என்னாங்க! டீ வேணுமா?" என்கிறார் அவர். அவர்தான் கடைக்காரராக இருக்க வேண்டும். மௌனமாகத் தலையசைத்துவிட்டு நிழற்குடைக்குத் திரும்புகிறார்.

(தொடரும்)

No comments: