Friday, June 01, 2007

கால நதிக்கரையில்... - 5

சற்றே உட்காரத் தக்கதாய்த் தோன்றிய பெஞ்சின் உடையாத பகுதியில் உட்கார்ந்தார்.

இதே இடத்தில்தானே அப்பா தண்ணீர்ப் பந்தல் கோடைகாலத்தில் வைப்பார்கள்! தண்ணீர்ப் பந்தல் வைத்து நடத்தவென்றே தாத்தா காலத்திலிருந்து கொஞ்சம் நிலம் ஒதுக்கியிருந்தது. அதில் வந்த வருமானத்தைக் கொண்டு அப்பா காலம்வரை அந்தத் தருமம் நடந்து வந்தது.

சுமைதாங்கிக்கு மறுபுறம் இருந்த இந்த தண்ணீர்ப் பந்தலில், வழிப்போக்கர் களும் சுமை இறக்கி வைத்திருப்பவர்களும் வந்து நீர்மோரும் பானகமும் அருந்திக் களைப்பாறுவதுண்டு. இந்தத் தர்மப் பணியை அலுக்காமல் எதிர் வீட்டுத் தொந்தி மாமா நடத்தி வந்தார். சிறு பிள்ளையாய் இருந்தபோது சிதம்பரம் அவருடன் சிலதடவை இங்கு வந்ததுண்டு. புதுப் பானைகளில் குளிந்த நீரும், நீர்மோரும் ஒரு தவலையில் பானகமும் நிரம்பி இருக்கும். ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான அலுமினியத் தம்ளர்கள் இருக்கும். அவற்றில் மாமா தன் வசமிருக்கும் பெரிய தம்ளரால் மொண்டு ஊற்றி வழங்குவார்.

சேரி ஆட்கள் யாரும் வந்தால் அவர்களுக்கு அலுமினியத் தம்ளர் கிடையாது. பந்தலில் ஒரத்தில் நடப்பட்டிருக்கும் - உச்சியில் கிளையாய் உள்ள ஒரு கம்பில், இருபுறமும் ஒழுங்காய் நறுக்கப்பட்ட ஒரு நீண்ட பாக்கு மட்டை சாய் வாய்ப் பொருத்தப் பட்டிருக்கும். அதன் மேல் முனையில் தொந்தி மாமா நீர் மோரை ஊற்றுவார். மறுமுனையில் அவர்கள் கையைப் பாலமாக்கி உறிஞ்சிக் குடிப்பார்கள். உள்ளங்கையில் நிறைந்து முழங்கையில் நீர்மோரோ பானகமோ வழிகையில் சிதம்பத்துக்கு மனம் வலிக்கும். இதென்ன பாரபட்சம் என்று தோன்றும். ஆனால் குடிப்பவர்கள் முகம் சுளிக்காமல் மூச்சு முட்டக் குடித்து விட்டுத் திருப்தியாகச் செல்வார்கள். அதை அவர்கள் குறைவாக நினத்ததாக அப்போது தெரியவில்லை.

தனக்கும் அப்படித் தரும்படி சிதம்பரம் மாமாவைக் கேட்பார். மாமாவும் சிரித்தபடி ஒரு பனைஓலையை இரண்டு புறமும் நறுக்கி ஒரு முனையைச் சிதம்பரத்தின் வாயில் வைத்து மறுமுனையில் குவளையிலிருந்து சன்னமாக ஊற்றுவார். தொடர்ச்சியாய் மூச்சுத் திணறாமல் சிதம்பரத்துக்கு குடிக்க வராது. "ம்...ம்.. மெதுவா.." என்று மாமா கனிவு காட்டுவார். அதெல்லாம் படம் படமாய் இப்போது மனத்திரையில் ஓடுகிறது.

எதிர்ப் பக்கமிருந்து திடீரென்று 'தடதட' வென்று பேரிரைச்சல் கேட்கிறது.

பிறகு 'தடதட'த்த சத்தம் மாறி சீராக எஞ்சின் ஒலி கேட்கிறது. எழுந்து சற்று நடந்து போய்ப் பார்க்கிறார். அட! இதைப் பார்க்கலியே! அரிசி ஆலை ஒன்று அங்கே முளைத்திருந்தது. ஊரின் வளர்ச்சிக்கு ஒரு சாட்சியாக அது தோற்றம் தந்தது. முன்பெல்லாம் நெல் அரைக்கவோ அல்லது மற்ற அரவைகளுக்கு. இரண்டு மூன்று மைலுக்கப்பால் உள்ள ராஜேந்திரப்பட்டணத்து மில்லுக்குத்தான் போக வேண்டும். அப்போது மின்சாரம் இந்தப் பக்கமெல்லாம் இல்லை. ஆயில் எஞ்சின் வைத்து ரயில் இஞ்சின் போல 'குப் குப்' பென்று புகை விட்டுக் கொண்டிருக்கும் கட்டடத்திலிருந்து பலவகை அரவை எஞ்சின்கள் எழுப்பும் ஓசை அந்த வயதில் திகிலை எழுப்பும். இப்போது மின்சாரம் வந்திருக்கிறது. திடுக்கிட வைக்கும் சத்தமோ புகைக் கக்குதலோ இல்லை. மூன்றுமைல் தலையில் சுமந்தோ வண்டிகட்டிக் கொண்டு எடுத்துப்போயோ அரைத்து வருகிற பாடும் இல்லை. சுற்றிலும் உள்ள விளைநிலங் களுக்கும் மின்வசதி கிடைத்து மின் மோட்டார் வைத்து நீர் இறைப்பதும் தெரிகிறது.

சிரமபரிகாரம் போதும் என்று எழுந்து கொண்டார். பெட்டியையும் தோள் பையையும் எடுத்துக்கொண்டு மெதுவாக ஊரை நோக்கி நடக்கிறார். கொஞ்ச தூரம் போனதும் ஊர்ச் சேரிக்குப் போகும் பாதையருகில் நின்று எட்டிய தொலைவுக்குப் பார்க்கிறார். அங்கேயும் மாற்றம் வந்துதானே இருக்கும்? குடிசைகள் அப்படியே தான் இருக்கின்றன. தெருஓர மின்விளக்கும் உயர்நிலை தண்ணீர்த் தொட்டியும் தெரிகின் றன. பஞ்சாயத்து போர்டு வந்திருப்பதன் அடையாளம்! சாலை ஓரத்து நிலங்களில் கரும்புப் பயிர்கள் விளைந்து தோகைகள் காற்றில் அசைகின்றன. நிலங்களினூடே குறுக்காகத் தெரியும் தந்திக்கம்பிகளில் சரம் கோர்த்தமாதிரி துக்கணாங் குருவிகளின் கூடுகள் தொங்குவது பார்க்கப் பரவசமாயிருக்கிறது.

சாலைத் திருப்பம் வந்து விட்டது. வலப்புறத்தில் மாட்டுக்காரப் பையன் சொன்ன சிமிண்ட் வளைவு தெரிகிறது. மேலே ' அண்ணன் பெரியநாயகி கோயில்' எனவும் கீழே 'முகம்மது சலீம் உபயம்' என்றும் எழுதப்பட்டிருக்கிறது. கோயிலுக்குள் போய்ப் பார்க்கலாமா என்று ஒரு கணம் நின்று பார்த்துவிட்டு மேலே நடக்கிறார்.

திருப்பத்தில் திரும்பியதும்தான் ஞாபகம் வருகிறது - இது 'பாடைத் திருப்பி' அல்லவா? ஊரிலிருந்து மயானத்துக்குப் பாடையில் வைத்துச் சடலத்தை எடுத்துச் செல்லும் பொழுது ஆரம்பத்தில் தலை தெற்கு நோக்கியும் கால் வடக்கு நோக்கியும் இருப்பதை, ஊரின் எல்லைப் பகுதியில் இருக்கும் இந்த இடத்தில் தலைமாடு கால்மாடு திசை மாற்றப் பெற்று - தலை வடக்கு நோக்கியும் கால் தெற்கு நோக்கியும் இருக்கும்படி பாடையைத் திருப்புவதால் இதைப் 'பாடைத் திருப்பி' என்று அழைப்பதாக சிறுவயதில் கேட்டிருக்கிறார். அந்த வயதில் பகலிலும் இந்தப் பக்கத்தைக் கடக்கும்போது நெஞ்சு 'திக் திக்' என்று அடித்துக் கொள்ளும். சிறு பிள்ளைகள் யாராவது மயக்கம் போட்டு விழுந்தால் 'பாடைத் திருப்பி'க்கிட்டப் பயந்திருப்பான்' என்று பலரும் சொல்வது நினைவுக்கு வருகிறது.

அதைத்தாண்டியதும் செவ்வகத்தின் மீதமைந்த வெள்ளைப் பிரமிடின் தோற்றத்தில் இருக்கும் செல்லியம்மன் கோயில் தென்படுகிறது. அதன் முன்னே இருந்த குட்டையைக் காணோமே! பள்ளிக்கூடத்தில் படிக்கையில் தசராவை ஒட்டி கோலாட்டம் கோயில்களில் அடித்து வரும்போது கடைசியாய் இந்தச் செல்லியம்மன் கோயிலுக்கு வருவதுண்டு. பிள்ளைகள் வட்டமாக நின்று கோலாட்டம் நிகழ்த்த விசாலமான முன்பக்கமும் அதை ஒட்டி நீர் நிரம்பிய பரந்த குட்டையும் இருந்தன. இப்போது அந்த இடம் கோயிலின் வாசலையும் ஒட்டி, உள்ளே நுழைய இடமின்றி நெல் வயலாக மாற்றப் பட்டிருந்தது. கோயிலுக்குச் செல்பவரின்றி கோயிலும் பாழடைந்து இருக்கிறது. தடுப்பவர் இன்றியோ தடுத்தாலும் மீறி 'எல்லோரும் இந்நாட்டு மன்னர்' என்கிற மனோபாவத்தில், அகப்பட்ட இடத்ததையெல்லாம் எவர் வேண்டுமானலும் ஆக்கிரமிக்கும் மனப்போக்கினாலோ இப்படிப் பொது இடங்கள் தனியார் வசமாகி இருப்பதை எங்கும் காண முடிகிறது.

இதோ ஊர் முனை வந்து விட்டது. வலப்புறம் இருந்த அல்லிக்குளம் எங்கே? ஆற்றங்கரை மரங்கள் போலக் குளமும் அழிந்து போனதா? திகைப்புடன் சற்றே நின்று பார்த்தார். குளத்தின் கரைநெடுக குளத்தை மறைத்து நிறையக் குடிசைகள் முளைத்திருந்தன. இங்கேயும் செல்லியம்மன் கோயிலில் கண்டது போலத்தான். மக்கட் பெருக்கம் பொது இடங்களை ஆக்ரமிக்கச் செய்து விட்டிருக்கிறது. எல்லாம் மக்கள் ஆட்சி வந்த பிறகுதானோ? இந்த ஆக்கிரமிப்புகளைத் தடுத்தால் தான் வெற்றி பெற முடியாது என்கிற தேர்தல் நோயின் பிரதிபலிப்புதானோ? ஊரில் நியாயம் பேசுபவர், புத்தி சொல்பவர் எல்லாம் இந்தப் புதிய மக்களாட்சி முறையில் ஒழிக்கப் பட்டிருப்பார்களோ?

ஊருக்கு வெளியே இது போன்ற நீர்நிலைகள் இருப்பது மக்களுக்கு எவ்வளவு வசதியாக இருந்திருக்கிறது! காலையும் மாலையும் ஆண்கள் காலை மாலைக் கடனைக் கழிக்கவும், மேச்சலுக்கு வரும் ஆடுமாடுகள் நீர் அருந்தவும் பயன்பட்டு வந்த இந்தக் குளம் இன்று இப்படிக் குடிசைகளால் சூழப்பட்டு அதையெல்லாம் மறுப்பதுபோல ஆக்ரமிக்கப் பட்டிருப்பதை என்ன சொல்ல? அடடா! குளத்தின் அழகே மறைந்து போயிற்றே! ஊரின் நுழைவாயிலில் கண்ணையும் கருத்தையும் கவரும் அந்த அழகை இப்படிப்பொறுப்பின்றித் திரை போட்டு மறைத்து விட்டார்களே என்ற ஆதங்கம் மேலிட பெருமூச்சு விடுகிறார்.

சிதம்பரத்தைப் பொறுத்தவரை அந்த அல்லிக்குளம் அவரது அழகுணர்ச்சிக்கு ஊட்டம் தரும் இடமும் அல்லவா? அந்த அழகான குளக்கரையில் நின்று அவர் ரசித்த காட்சிகளை மனத் திரையில் ஒரு முறை ஓட்டிப் பார்க்கிறார்.

(தொடரும்)

No comments: