Friday, June 01, 2007

கால நதிக்கரையில்..... - 2

ஆற்றோரமாக விழற்கட்டைகள் திட்டுத்திட்டாக பச்சையும் மஞ்சளுமாய் முளைத்திருக்கின்றன. அவற்றிற்கிடையே ஆங்காங்கே பசுக்களும் எருமைகளும் 'மடுக் மடுக்'கென புற்களைக் கடித்தபடி மேய்ந்து கொண்டிருக்கின்றன. சில எருமைகளின்மீது மாடுமேய்க்கும் சிறுவர்கள் உல்லாசமாய்ச் சவாரிசெய்தபடி பேசிச் சிரித்த படி இருக்கிறார்கள். மந்தமாய் அரைத் தூக்கத்தில் நடக்கும் ஒரு எருமைமீது ஒரு கரிய வாலாட்டிக்குருவி அமர்ந்து சவாரி செய்து கொண்டிருக்கிறது.

சிதம்பரம் பெட்டியையும் பையையும் எடுத்துக் கொண்டு மெதுவாக நடக் கையில், எதிரே மண்திட்டுகளில் சில சிறுவர்கள் பந்தாடிக் கொண்டிருக்கிறார்கள்.

பச்சைப்பசேலென்ற, நெடுக்கே பூமி உருண்டயின் அட்சரேகைகள் போல வெள்ளைக் கோடுகளுடனான 'ஆத்துக் கொமட்டிக்காய்' களைத்தான் அவர்கள் கோலால் தட்டி விளயாடிக் கொண்டிருக்கிறார்கள்.

சுடுகிற மணலில் ஆங்காங்கே இருக்கும் ஈரநைப்பில் முளைத்துப் பரந்து கிடக்கிற பச்சைக் கொடிகளினூடே சின்னதும் பெரியதுமாய் பந்துகள்போல் கொமட்டிக் காய்கள் காய்த்துக் கிடக்கின்றன. மாடு மேய்க்கிற பையன்களுக்கு அதுதான் விளையாட்டுப் பொருள்.

ஒரு பந்து எதிரே விழுந்து அவரது காலடியில் உருண்டு தேங்குகிறது. அதைக் குனிந்து எடுக்கிறார். அதைத் தொடர்ந்து ஓடிவருகிற பையனிடம் மெதுவாகத் தூக்கி எறிகிறார். அவன் கைக்கோலால் அதை லாகவமாக கிரிக்கட்வீரன் மாதிரி, அடித்து வீசுகிறான். பந்து பறந்து தெறிக்கிறது. 'பளீரெ'ன்ற வெள்ளைப்பற்கள் தெரிய அவன் சிரிக்கிறான்.

சிதம்பரத்துக்கு, சின்னவயதில் அம்மா சொன்ன 'அண்ணன் பெரியநாயகி' கதை நினைவுக்கு வருகிறது. 'இந்தப் பந்தாட்டமும் இதனிடையே நிகழும் இந்தக் குறுக்கீடும் வழக்கமான நடைமுறையா? அந்தப் பெரியநாயகி ஆடிய பந்தும் இப்படி இடறப்பட்டதால்தானே..............' என்று சிந்தனை ஓடுகிறது.

அந்தப் பத்தினிப் பெண்ணின் கோயில், இங்கே எதிரே ஆற்றங்கரையில்தானே இருந்தது? இப்போது எங்கே அது? இடது கையைக் கண்களுக்கு மேலாகக் கவித்து எதிர்க்கரையைப் பார்க்கிறார். எதிரே ஆற்றங்கரையில் ஒரு சின்னத்தோப்பு தெரிகிறது.

"ஏம்ப்பா! பெரியநாயகி கோயில் எங்கே இருக்கு?" என்று காயைத் தட்டி விட்ட பையனைக் கேட்கிறார்.

"என்னா கோயிலு?" என்று புருவத்தை உயர்த்துகிறான் அவன்.

"அண்ணம் பெரியாயி கோயிலா?" - "எலே அந்த இலுப்பத் தோப்புக்குள்ளே இருக்கே அண்ணம்பெரியாயி சாமி - அதக் கேக்குறாரு!" என்று, அதற்குள் அவரைச் சுற்றிக் கூடிவிட்ட பையன்களிலிருந்து ஒருவன், கேட்கப்பட்டவனுக்கு விளக்கம் தருகிறான்.

"அதா? அதோ தெரியுதில்லே இலுப்பத் தோப்பு அதுக்கு முன்னாலே ஒரு ஆர்ச்சி தெரியும் - அதுக்குள்ளாற இருக்கு" என்கிறான் அவன் விவரம் புரிந்து கொண்டதும்.

'ஆர்ச்சா? அப்படி ஏதும் இருக்காதே!' என்று அவர் தனக்குள் கேட்டுக் கொண்ட மாதிரி முணுமுணுக்கிறார்.

"ஆமாங்க! சிங்கப்பூரு சாயபு கட்டுனது. இப்பதான் ரெண்டு வருஷமாவுது" என்கிறான் அவர்களில் பெரியவனான ஒரு பையன்.

'சிங்கப்பூர் சாயபுவா? யாரு 'ஆறுமாத்தியார்' சாயபுவா இருக்குமா? சாயபுக்கும் பெரியநாயகி கோயிலுக்கும் என்ன சம்பந்தம்?' என்று இவர் சிந்தனையில் ஆழ, அவன் தொடர்ந்தான். "அதாங்க! ஊர்க்கோடீலே கட வச்சிருக்காரே கரீம்பாயி - அவுருதான் எதோ வேண்டுதல்னு கட்டிக் குடுத்திருக்காரு"

"ஆரு அது? புதுசாக் குடிவந்திருக்கிறாரா?" என்று சிதம்பரம் கேட்டார்.

" இல்லீங்க! அவங்க தாத்தா காலத்திலேர்ந்து கட வச்சிருக்குற சாயபு" என்கிறான் அந்தப் பையன்.

சின்ன வயதாக இருக்கும்போது ஊர்க் கோடியில் கடை வைத்திருந்த ஒரு முஸ்லிம் கிழவரை நினைவு படுத்திப் பார்க்கிறார். நாடாறு மாதம் காடாறு மாதம் என்பது போல அவர் சிங்கப்பூரில் ஆறு மாதம் இங்கே ஆறு மாதம் இருந்ததால் 'ஆறு மாதத்திய சாயபு' என்று பெயர் வந்து விட்டது. அது மருவி 'ஆறுமாத்தியார்' ஆகிவிட்டது. அவரது பேரனாக இருக்குமோ இந்தக் கரீம்பாய்?

அவரை நினைத்ததும் அவரால் சின்ன வயசில் அப்பாவிடம் அடிபட்டது நினைவுக்கு வருகிறது. ஒருதடவை அவரது கடைக்குப் போன போது, "வாங்க குட்டிப் புள்ளே! மீனு தரட்டுமா - ஊட்டுக்கு எடுத்திட்டுப் போயி கொளம்பு வச்சிச் சாப்பிடலாம்?" என்று பரிகாசமாய்ச் சொல்ல, அதை அப்பா சாப்பிடும்போது சொல்லி அப்பாவிடம் அடி வாங்கியது இன்னும் மறக்கவில்லை.

பையன்கள் காட்டிய இலுப்பைத் தோப்பை நோக்கி மெல்ல, சுமையுடன் நடக்கிறார். அந்தப் பெரியநாயகி - இவர் வீட்டுக்குத் தெய்வமும் அல்லவா? பெரிய நாயகி தெய்வமான கதையை அம்மா சின்ன வயதில் சொன்னது, காட்சிப் படம்போல மனதுக்குள் ஓடுகிறது.

ஒருதடவை இவரும் இவரது அண்ணன், தங்கைகளும் அம்மாவுடன் மாட்டு வண்டியில் இந்த ஆற்றைக் கடக்கும்போது, மணலில் மாடு இழுக்கச் சிரமமில்லா திருக்க எல்லாப் பிள்ளைகளும் அம்மாவுடன் இறங்கி மணலில் வண்டிக்குப் பின்னா லேயே நடந்தார்கள். அப்போது வழியில் கிடந்த கொமட்டிக்காயை இவர் காலால் உதைத்துத் தள்ள தங்கைகளில் ஒருத்தி அதை எடுக்க ஓடினாள். "அதத் தொடாதே! நம்மக் கோத்திரத்துப் பொண்ணு அதத் தொடப்படாது!" என்று அம்மா அவளைத் தடுத்ததும், "ஏன் தொடப்படாது?" என்று எல்லோரும் கேட்க அம்மா அந்தக் கதையைச் சொன்னார்.

"நம்ப கோத்திரத்துலே - அதான் விழுப்பதரிய கோத்திரத்திலே பொறந்த பொண்ணு ஒருத்திய - பெரியநாயகின்னு பேரு, நம்மூர்லேர்ந்து ஆத்துக்கு அக்கரை யில சத்தியவாடிங்கிற ஊர்லே கட்டிக் குடுத்திருந்துது. ஒருதடவ, ஏதோ வீட்டுலே புருஷங்கிட்டியோ, மாமியார்கிட்டியோ சண்டை - கோச்சிக்கிட்டு அம்மா ஊட்டுக்கு பொறப்பட்டுத் தனியா வந்திருக்கா. குறுக்கே ஆத்தத் தாண்டி இந்த மணலு வழியா வந்தப்போ இப்பிடித்தான் கொமட்டிக்காய் வழியிலே நெறையக் கெடந்திருக்கு. அதுல ரெண்டு மூணை எடுத்து, மாத்தி மாத்தி மேலே எறிஞ்சிப் பிடிச்சி அம்மான ஆட்டம் ஆடிக்கிட்டே வந்திருக்கா. அப்போ அங்க மாடு மேச்சிக்கிட்டிருந்த பையன் ஒருத்தன், காய்களுக்குக் குறுக்கெ மாடுமேய்க்கிற கோல வெளையாட்டா நீட்டி இருக்கான். ஆட்டம் தடப்பட்டு காயெல்லாம் கீழேவுழுந்துடிச்சி. மாட்டுக்காரப் பையன் அதப் பாத்துக் கெக்கலி கொட்டிச் சிரிச்சிருக்கான். இவுளுக்கு ரோஷம் தாங்கல. 'நாம வெளையாடுறத ஒரு மாட்டுக்காரப் பையன் தடுக்கறதா! இத ஆரும் அக்கரையிலிருந்து பாத்துக்கிட்டிருந்து புருஷன் வீட்டுல சொன்னா அங்க மாமியாரும் புருஷனும் என்ன நெனைப்பாங்க! முன்னியே புடிக்கல, தகறாரு. இப்போ கேக்க வாணாம்! யாரோ முன்னபின்ன பழக்கமில்லாமியா கோலக் குறுக்க நீட்டியிருப்பான்னு கதே கட்டிப்பிடுவாங்களே' ன்னு கவலையாப்போச்சு அவுளுக்கு. அப்பிடி அவதூறு கெளம்பிட்டா இந்த உசிர வச்சிக்கிட்டு எப்பிடி நடமாடுறதுன்னு ஆவேசம் உண்டாயிடுச்சு.

"ஒடனே நெருப்ப மூட்டி அதுலெ எறங்கப் போறேன்னிருக்கா. அந்த மாட்டுக்காரப் பையன் பயந்து போய்ட்டான். 'என்னடாது! நாம வெளையாட்டா செஞ்சது வெனையாப் போயிடுச்சேன்'னு பதறிப்போயி, 'தாயி! ஏதோ வெளையாட்டுப் புத்தியிலே இப்பிடிப் பண்ணிப்பிட்டேன். நீ மனசுலே வச்சுக்க வேணாம். இதுக்காகப் போயி உசுர விடுறதா? பத்திரமா ஆயா ஊடுக்குக்குப் போய்ச்சேரு"ன்னு கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டுக்கிட்டான்.

'அதெல்லாம் முடியாது! இனிமெ நான் இதத் தாண்டி ஊடு போயிப் படியேற யோக்கித இல்லே! நெருப்புலே எறங்கியே தீருவேங்' கறா.

"அதுக்குள்ள, மத்தப் பசங்க எல்லாம் ஓடி அண்ட அயல்ல சொல்லி ஊரே தெரண்டு வந்துடுச்சி. அக்கம் பக்கத்து ஊர்க்காரங்களும் ஞாயம் பேசவும், வேடிக்கை பாக்கவும் கூடிட்டாங்க.

"வந்தவுங்க கிட்டெல்லாம் ஞாயம் கேக்குறான் மாட்டுக்காரப் பையன். 'அவன் சொல்றதும் ஞாயந்தான். ஏதோ வெளையாட்டுத்தனம்! இப்ப என்ன ஆயிடுச்சு? அதுக்காக நெருப்புலே எறங்கறதாவுது?' ன்னு ரெண்டு மூணு பேர் சொன்னாங்க. அவங்கெல்லாம் அவ பொறந்த புத்தூருக்காரங்களும் எதிர்க்கரையிலே இருக்கிற நேமத்துக்காரங்களும்தான்.

"ஆனா அவளுக்கு ஒத்துப் பாடறவங்களும் இருந்தாங்க. அவ வாக்கப்பட்ட சத்தியவாடிக்காரங்களும், இக்கரையிலே புத்தூருக்குப் பக்கத்துலே இருக்குற கிளிமங்கலத்துக்காரங்களும், நேமத்துக்குப் பக்கத்துலே இருக்குற கார்மாங்குடிக்காரங்களும் அவ பக்கம் பேசுனாங்க. 'பொண்ணு சொல்றது சரிதான். ஒரு மாட்டுக் காரப் பையன் எப்பிடி ஒரு குடுத்தனக்காரப் பொண்ணு வெளையாட்டுலே குறுக்கே வரலாம்? அதனால குல ஆசாரம் கெட்டுப் போச்சு! கட்டுன புருஷனத் தவிர வேத்து ஆம்பிள அவகூட வெளையாடுனதாலே அவளோட புனிதம் கெட்டுப் பொச்சு! நெருப் புலே எறங்கி அதுக்குப் பரிகாரம் காண வேண்டியதுதான்' னு சொன்னாங்க.

"புத்தூரும் நேமமும் விடலே. 'இதுலே புனிதம் கெட்டுப் போறதுக்கு என்ன இருக்கு? அநியாயமா, ஆண்டவன் கொடுத்த உசுர இப்பிடி அர்த்தமில்லாம உணர்ச்சிக்கு பலியாக்கக் கூடாது!' ன்னு மறுத்துப் பேசுனாங்க.

"ஆனா அவ அத ஏத்துக்க மாட்டேன்னுட்டா. தன்ன நெருப்புலே எறங்கக் கூடாதுங்கிறவங்க, தான் பொறந்த ஊட்டுக்குக்கும் குலத்துக்கும் தலமொற தலமொறைக்கும் பழி சேக்கறத்துக்காக சொல்றாங்கன்னு கோவப்படுறா. கோவத்துல அந்த ரெண்டு ஊர்க்காரங்க மேலியும் சாபங் கொடுக்குறா.

'நேமம் நெருஞ்சி மொளைக்கட்டும்; புத்தூரு பொகைஞ்சு போகட்டும்' ன்னு சாபங் குடுக்குறா. தன்ன நெருப்புலே எறங்கிப் பத்தினியின்னு நிருபிக்க ஆதரவு காட்டுன மத்தவங்கள வாழ்த்திச் சொல்லுறா. 'கிளிமங்கலம் எளமங்கலம் ஆகட்டும்; கார்மாங்குடி கனகதண்டி ஏறட்டும்; சத்தியவாடி சரக்கெடுத்துப் பெருகட்டும்'.

"புத்தூருக்காரங்களும் நேமத்துக்காரங்களும் வாயடைச்சுப்போயி நிக்குறாங்க. அவ நெருப்ப மூட்டி எறங்கிட்டா. 'அய்யோ, நம்மளாலதான ஒரு பத்தினிப் பொண்ணு நெருப்புல ஏறங்கிடுச்சு! நானும் கூடப்பொறந்த அண்ணனா இதே நெருப்பிலே எறங்கிடுறேன்' ன்னு அந்த மாட்டுக்காரப் பையனும் அவ பின்னாலியே நெருப்புலே எறங்கிட்டான். எரிஞ்சுப்போன அவங்க ரெண்டுபேருக்கும் இங்கே பக்கத்து இலுப்பத் தோப்புலே செல எழுப்பி வச்சாங்க. அந்த எடம் கோயிலாயிடுச்சு. அண்ணங்காரன் மாதிரி உருகி உசுரவிட்டதால 'அண்ணன் - பெரியநாயகி' ன்னு அவம் பேரையும் சேர்த்துப் பேரு வந்துடுச்சு. அண்ணையிலேர்ந்து அந்தப் பொண்ணு கோத்திரத்துலப் பொறந்த பொண்ணுங்க யாரும் இந்தக் கொமட்டிக்காயை தொடறதில்ல. எங்கெங் கெல்லாம் 'விழுப்பதரிய' கோத்தரத்துக்காரங்க இருக்காங்களோ அவங்கெல்லாம் அப்பப்ப வந்து குலதெய்வமா இதக் கும்புடுறாங்க!"ன்னு அம்மா கதைய முடிச்சாங்க.

'அப்புறம் அந்த் சாபம் என்னம்மா ஆச்சு?" என்று தங்கை கேட்டாள்.

"பத்தினிப் பொண்ணு விட்ட சாபமாச்சே - பலிக்காமப் போவுமா? இண்ணிக் கும் நேமத்துக்குப் போனா ஒரே நெருஞ்சி முள்ளாத்தான் இருக்கு. புத்தூரு அடிக்கடி நெருப்புப் புடிச்சிக்கிட்டு புகைஞ்சபடிதானே இருக்கு. கிளிமங்கலம் எப்பிடி வறண்டு காடாக் கெடந்த ஊரு? முன்னல்லாம் நெல்லுக்கு நம்ம ஊருக்குத் தானே வருவாங்க வாங்கிப் போறதுக்கு? இப்போ நெலம ரொம்ப மாறிப்போச்சு.கேணி வெட்டி, ஆயில் இஞ்சின் போட்டு முப்போகமும் நெல் வெளைச்சி ஊருக்கே இளமை வந்துட்டாப்பல - இளமங்கலம் ஆயிப்போச்சு! கார்மாங்குடியும் இண்ணைக்கு வச்தி பெருகி, கல்லுக் கட்டமெல்லாம் மெத்தை வீடாமாறி, பொன்னும் பொருளுமாக் கொழிக்குது. சத்தியவாடியும் கரும்பு போட்டு, வெல்லம் காய்ச்சி, சரக்கெடுதுக்குக்கிட்டு நாடுகண்ட மட்டும்போயி, வித்துக் கொழிக்குது. பொறந்த ஊருதான் போக்கத்துப் போச்சி!"

இப்பொழுது நினைத்துப் பார்த்தால், ஊருக்கு ஊர் இப்படி ஒரு பத்தினிக் தெய்வம் இருப்பது தெரிகிறது. எதற்கோ, எந்தக் கொடுமை காரணமாகவோ தீக்குளித்த பெண்களுக்கு இப்படி ஒரு அங்கீகாரம்! சேத்தியாத்தோப்புக்கு அருகே சென்னை- கும்பகோணம் சாலையில் இப்படி ஒரு பத்தினிக் கோயில் - 'தீப்பாய்ந்த நாச்சியார் கோயில்' இருப்பது நினைவுக்கு வருகிறது. இந்தக் காலத்தில் இப்படி தீகுளிக்கிற அல்லது தீக்குளிக்க வைக்கப்படுகிற பெண்களுக்கெல்லாம் கோயில் எழுப்புவதானால் இடம் காணாமல் போய்விடுமோ என்று சிந்தனை ஓடுகிறது.

(தொடரும்)

No comments: