போற்றினும் போற்றுவர் : பொருள் கொடாவிடின்
தூற்றினும் தூற்றுவர்: சொன்ன சொற்களை
மாற்றினும் மாற்றுவர்: வன்கணாளர்கள்
கூற்றினும் பாவலர் கொடியவர் ஆவரே!
- என்று ஒரு அரசன் புலவர் இயல்பைப் பற்றி பாடினான். இதற்குக் காளமேகம் சரியான உதாரணம். ஒருநாள் பசியோடு நாகைப்பட்டினம் வழியே காளமேகம் போகிறான். அந்த ஊரில் காத்தான் என்பவரது சத்திரத்திற்குப் போனால் சாப்பாடு கிடைக்கும் என்று யாரோ
சொன்னதைக் கேட்டு அங்கே போகிறான். வெகுநேரம் காத்திருந்தும் சாப்பாடு தயாராகிற வழியாகத் தெரியவில்லை. கடும்பசி கண்ணை இருட்டுகிறது. காளமேகத்துக்குக் கடுங்கோபம் வருகிறது. கோபத்தில் ஏதாவது வசைப்பாடு விட்டால் காரியம் கெட்டுவிடும். எனவே சாப்பாடு தயாராகும்வரை பல்லைக் கடித்தபடி காத்திருக்கிறான். ஓரு வழியாக இரவு கழிந்து விடிகிற நேரத்தில்தான் உணவு பரிமாறப்படுகிறது.
ஆத்திரத்தோடு காளமேகம் பாடுகிறான்;
கத்துக்கடல் சூழ் நாகைக் காத்தான் தன் சத்திரத்தில்
அத்தமிக்கும்போதில் அரிசி வரும்; - குத்தி
உலையிலிட ஊரடங்கும் ஓரகப்பை அன்னம்
இலையிலிட வெள்ளியெழும்.
-`என்னய்யா சத்திரம் நடத்துறார் இந்த காத்தான்? காலைலேர்ந்து காத்திருக்கிறோம், அஸ்தமிக்கிற நேரத்துலதான் அரிசி வருது; அப்புறம் அதைக் குத்தி உலையிலே போடும்போது ஊரே அடங்கி தூங்கப் போயிடுது; சாதம் வெந்து ஒரு அகப்பைச் சோறு இலையிலே விழறத்துக்குள்ளே கிழக்கே வெள்ளி நட்சத்திரம் கெளம்பிடுது!` என்று வசை பாடுகிறான். ஆனால் அதற்காக சாப்பிடாமல் இருக்க முடியாதே! சாப்பிடுகிறான். சத்திரத்து நிர்வாகியின் காதுக்கு காளமேகம் பாடிய இந்த வசைப்பாட்டு போகிறது. வந்திருப்பவர் காளமேகம் என்று தெரிகிறது. ஐயோ! இந்த ஆள் பாடினார் என்றால் சத்திரத்துப் பெயர் கெட்டுப் போகுமே என்று பதைத்து புலவரிடம் ஓடி வருகிறார்.`ஐயா! மன்னிக்கணும்!இன்னிக்குக் கொஞ்சம் தாமதமாகிவிட்டது. உண்மைதான். நீங்க புகழ் பெற்ற கவிஞர்1 நீங்க இப்படி வசைபாடினது வெளியே தெரிஞ்சா சத்திரத்துப் பெயர் கெட்டிடும். பெரியமனசு பண்ணிப் பாட்டை மாத்திப் பாடணும்` என்று மிகப் பணிவோடு கேட்டுக் கொள்கிறார். இப்போது பசியாறிவிட்ட நிலையில் கோபம் குறைந்திருக்கிறது காளமேகத்துக்கு. அதோடு சத்திரத்து நிர்வாகியின் பணிவான வேண்டுகோள் நெஞ்சை நெகிழ்விக்கவே மனம் இளகிச் சொல்கிறான்: `பாட்டை மாத்தவேணாம்! அப்படியே இருக்கட்டும்.` என்கிறான். `அது எப்படி ஐயா?` என்கிறார் நிர்வாகி. பொருளை மாற்றி விளக்கம் தருகிறான்:
`நாகைப் பட்டினத்து காத்தான் சத்திரத்துக்குப் போனால் அங்கே சாப்பாடு எப்படிப் போடுறவார்கள் தெரியுமா? காலையிலிருந்து அஸ்தமிக்கும் வரையிலும் அரிசி வந்து கொண்டே இருக்கும்; அவ்வளவையும் உலையிலே இட்டு சமைத்தால் ஊரே சாப்பிடலாம். ஒரு அகப்பை அன்னம் இலையில் விழும்போது பார்த்தால் அப்படியே வெள்ளி நட்சத்திரம்போலப் பளிச்சிடும்! அவ்வளவு வெண்மையாயிருக்கும் சோறு`
`ஆகா!` என உருகிப்போகிறார் நிர்வாகி. `சொன்ன சொற்களை மாற்றினும் மாற்றுவர்` என்றது உண்மையாகிறது.
முத்துராம முதலியார் என்ற கவிஞரின் அனுபவம் வேறு வகையானது! 100 ஆண்டுகளுக்கு முன் சென்னை மயிலாப்பூரில் வாழ்ந்த புலவர் இவர். தனவான்கள் ஊருக்கு விருந்திடுவது பாராட்டுகுரிய செயல்தான். ஆனால் விருந்துண்ண வருவோரை அன்போடு வரவேற்று அடக்கமாக நடந்து கொள்ளாமல் அகம்பாவத்தோடு அவமரியாதையாய் வந்தவரை நடத்துவது பண்பாடில்லாத அற்பரின் செயல். அப்படி நடந்து கொண்டஒரு பணக்காரரைச் சாடுகிறார் கவிஞர்.
`அட்டைக்கேன் மணிமந்த்ரம்? அறுகினுக்கேன் கூர்வாள்? கால் அலம்பிடும்பீக்
குட்டைக்கேன் பொற்படிகள்? குருடனுக்கேன் கண்ணாடி? கொல்லும் கள்ளிப்
பட்டைக்கென் சம்பாரம்? படுபாவி முருகன் எனும் பழந்துடைப்பக்
கட்டைக்கேன் ஊர்விருந்து? புலவர்காள்! நீங்கள் இது கழறுவீரே!`
- நிரில் கிடக்கும் அட்டை கடித்தால் அதற்குப் பரிகாரம் செய்ய மணிமந்திர ஔஷதம் எதற்கு? அறுகம் புல்லறுக்க கூரிய வாள் எதற்கு? கால்கழுவும் குட்டைக்கு எதற்குத் தங்கப்படிகள்? குருடனுக்கு எதற்குக் கண்ணாடி? உயிரைக் கொல்லும் பாலைச் சுரக்கிற கள்ளி என்ன லவங்கப்பட்டையா - அதன் பட்டையைப் போட்டுச் சமையல் செய்ய? அதுபோல முருகன் என்னும் இந்தப் பழையத் துடைப்பக் கட்டைக்கு ஊர்விருந்து எதற்கையா? புலவர்களே! நீங்களே சொல்லுங்கள்!`
( மணிமந்த்ரம் - விஷம் போன்றவற்றைப் போக்குவதற்குப் பயன்படும் கல்மணி¢யும் மந்திரமும்; சம்பாரம் - கறிக்குப் போடும் மசாலைச் சரக்குகள்; முருகன் என்பது சென்னையில் அப்போது வாழ்ந்த முருகப்ப முதலியாரைக்குறிக்கும்)
-மேற்கண்ட பாடலைப் படித்ததும் பலருக்கு சிவாஜி நடித்த -கலைஞர் வசனம் எழுதிய `குறவஞ்சி` திரைப்பட வசனம்
`நெருப்புக்கு ஏன் பஞ்சு மெத்தை? - இந்த
நீதிகெட்ட ஆட்சிக்கு ஏன் மணிவிழா? -
நினைவுக்கு வரக்கூடும்! இது கலைஞருக்கும் கவிஞர் கண்ணதாசனுக்கும் சர்வசாதாரணம். நாம் ரிஷிமூலம் நதிமூலமெல்லாம் பார்க்கக் கூடாது.
இந்தப் பாடலுக்கும் மூலம் ராமச்சந்திரக் கவிராயரின் ஒரு பாடல் என்றால் ஆச்சரியப்பட வேண்டாம்.
`கள்ளிக்கேன் முள்வேலி? கழுதைக்கேன் கடிவாளம்? கறுப்பில்லாத
உள்ளிக்கேன் பரிமளங்கள்? உவர்நிலத்துக்கேன் விதைகள்? ஒடித்துப் போடும்
சுள்ளிக்கேன் கோடாலி? துடைப்பத்திற்கேன் கவசம்? சும்மா போகும்
பள்ளிக்கேன் அதிவீர மழவரங்கப் பூபதியேனும் பட்டம் தானே?
- ராமச்சந்திரக் கவிராயர்.
-நகலைவிட அசல் கலைதன்மை மிகுந்திருக்கிறதில்லையா?
- மேலும் சொல்வேன்.
- வே.சபாநாயகம்.
Monday, August 02, 2004
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
Sir,
My name is Chinmay and I live in Pune, Maharashtra. I cannot read Tamil, but I guess this blogpost has the word சம்பாரம். Can you please tell me in what context this word has been used?
Thank you,
Chinmay
Sir,
My name is Chinmay and I live in Pune, Maharashtra. I cannot read Tamil, but I guess this blogpost has the word சம்பாரம். Can you please tell me in what context this word has been used?
Thank you,
Chinmay
Post a Comment