அபூர்வமும் அருமையுமாய் நாம் நினைப்பவை அதிக நாள் நீடிப்பதில்லை என்பது ஒரு சோகமயமான யதார்த்தம். இலக்கியத்திலும் அப்படித்தான். பாரதியும், புதுமைப்பித்தனும் மிக அபூர்வமான மேதைகள். அவர்கள் 50 வயதுக்குள் மறைந்து விட்ட மாதிரி நம் தலைமுறையின் அபூர்வ படைப்பாளியான ஆதவனும் 45 வது வயதில் அகால மரணமுற்றது தமிழ் இலக்கிய உலகின் ஈடு செய்ய முடியாத இழப்பு. 1965 வாக்கில் 'தீபம்', 'கணையாழி'யில் எழுதத் தொடங்கிய அவர் மிகக் குறுகிய காலத்தில் தனித்தன்மை கொண்ட சாதனைகளை தமிழ்ப் படைப்புலகில் நிகழ்த்தி தனக்கென ஒரு அழியாத இடத்தை வாசகர் நெஞ்சில் பிடித்துக்கொண்டவர்.
சமூகத்தின் அகமனப் பிரச்சினைகளை கூர்ந்து நோக்கி அவற்றை மையமாக வைத்து யதார்த்தமும், ரசனையும் மிக்க கதைகளை எழுதிய அவரது படைப்புகளை
தற்போது மறுபிரசுரம் செய்து வரும் 'கிழக்கு பதிப்பகம்', முதல் முயற்சியாக அவரது ஆறு குறுநாவல்கள் கொண்ட 'இரவுக்கு முன்பு வருவது மாலை' என்கிற தொகுப்பைக் கொணர்ந்திருப்பது அவரது ரசிகர்களுக்கு உவப்பளிக்கும் செய்தியாகும்.
தன்னைப்போலவே, பிழைப்பை முன்னிட்டு டில்லி போன்ற பெருநகரங்களின்
வாழ்க்கைப் பொறியில் சிக்கிக் கொண்டு, தமது வேர்களுக்காக ஏங்குபவர்களின் சமூக ஒவ்வாமைகள், தங்களுக்குத் தாங்களே அந்நியப்பட்டுப்போதல், அதன் காரணமாய்ப் படும் அல்லல்கள், இளம் தலைமுறையினரின் முகம் தேடும் முயற்சிகள், அவர்களது பாலுணர்வுச் சிக்கல்கள் ஆகியவைகளே அவரது கதைகளில் அதிகம் காணப்படுபவை.இத்தொகுப்பில் உள்ள ஆறு குறுநாவல்களிலும் அத்தகைய மனச்சிக்கல்கள் மனித நேயத்தோடு வெகு நுட்பமாகச் சித்தரிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
'இரவுக்கு முன்பு வருவது மாலை' என்ற முதல் குறுநாவல், வாழ்வின் அந்தக் கணத்துக்குமேல் எதையும் நிச்சயம் செய்ய முடியாத மனநிலையில் உள்ள ஒரு இளைஞனது ஒருமாலை நேரத்து அனுபவத்தைச் சொல்கிறது. ஒரு நோக்கமும் இன்றி ஒரு மாலை நேரத்தில் ஒரு சிக்னல் சந்திப்பில் சாலையைக் கடப்பதற்காக நின்று கொண்டிருப்பவன் சிக்னலில் காத்திருப்போரது அவசரம், பொறுமை இன்மை,அலுப்பு ஆகியவற்றைப் பொறுமையாய் அவசரமின்றி பார்த்துக் கொண்டிருக்கிறான். 'மனிதனால் மனிதனுடைய சௌகரியத்துக்காக ஏற்படுத்தப்படும் விதிகளும் சட்ட திட்டங்களும் இறுதியில் அவனுக்கே எஜமானனாக மாறி அவனுக்கு சங்கடத்தையும் வெறுப்பையும் அளிக்கும் ஒரு அந்தஸ்தையும் பலத்தையும் பெற்றுவிடும் வேடிக்கை'யை ரசித்துக்கொண்டிருக்கிறான்.
பச்சைவிளக்கு விழுந்து சாலை நெருக்கடி குறைந்தும் - அவன் சாலையைக் கடந்துதான் ஆகவேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லாததால், வேகமாக விரைந்து கொண்டிருக்கும் மனிதர்களுக்கு மத்தியில், பதற்றமின்றி நின்ற இடத்திலேயே தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டவனாக நிற்கிறான். தன்னுடைய இந்தத் தனித்தன்மை, தன்னால் நிராகரிக்கப்பட்ட சமூகத்தினரிடையே ஒரு சலசலப்பை ஏற்படுத்தவேண்டும் அல்லது குறைந்தபட்சம் கவனிக்கப்பட வேண்டுமென்றும் அவனுக்குள்ளே ஒரு ரகசிய மூலையில் இருக்கும் விருப்பம்' துரதிர்ஷ்டவசமாக
கவனிப்பாரின்றி வீணாகிக் கொண்டிருந்தது.
அப்போது எதிர்ச்சாரியில் தன்னைப் போலவே சாலைக் கடக்கும் அவசரத்தில் இல்லாத, அவனைப் போலவே தனித்தன்மை வாய்ந்த, சமூகத்துடன் ஒத்துப்போகாத ஒரு பிரகிருதியாய் நின்று கொண்டிருக்கும் ஒருத்தியைப் பார்க்கிறான். அவளும் இவனைக் கண்கொட்டாமல் பார்த்தபடியே நின்று கொண்டிருந்தவள், சற்றுப் பொறுத்து சாலையைக் கடந்து இவனை நோக்கி வருகிறாள்.
இருவரும் புன்னகை செய்தபடி பரஸ்பரம் அறிமுகம் செய்து கொண்டு
நடக்கிறார்கள். பிறகு பரஸ்பர விருப்புவெறுப்புகள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.
தொடர்ந்து பரஸ்பர ஈர்ப்பு, கைகோர்ப்பு என நெருக்கம் அதிகமாகி அர்த்தமில்லாமல் எதிர்காலத் திட்டமேதுமின்றி அந்த மாலைப்பொழுது கேளிக்கையிலும் அசட்டு நெருக் கத்திலும் கழிகிறது. டில்லி போன்ற நகரக்குக்கு வரும் இளைஞர்களும் யுவதிகளும் இப்படி தனித் தன்மைக்கும் தன் வேர்களுக்கும் ஏங்கி தமக்குத்தானே சுமையாகிக் கொண்டிருக்கும் அவலத்தை மென்னகை பூக்கவைக்கும் தன் எழுத்தால் ரசமாகச் சித்தரிக்கிறார் ஆதவன்.
'சிறகுகள்' என்கிற அடுத்த குறுநாவல், பெண்மைச் சிறகுகள் முளைத்துப்
பிறந்த வீட்டின் சுவர்களுக்கு அப்பால் பறக்கத் துடிக்கும் இளம் பெண்ணொருருத்தி
யின் படிப்படியான அகபுற மாற்றங்களைச் சித்தரிக்கிறது. குஞ்சு என்கிற அந்தப் பெண்ணின் பாத்திரப்படைப்பு மிகச் சிறப்பானது. கல்லூரிப் படிப்பின் கடைசி நாள் முதல், பின்னர் வீட்டில் சும்மா இருக்க முடியாமல் வேலைக்கு முயற்சிப்பதும், அதற்கான யதார்த்தமான தடைகளும், பின்னர் வேலைக்குப் போனதும் அங்கு சந்திக்கும் பிரச்சினைகளும், அடுத்து திருமண ஏற்பாட்டை அவள் எதிர்கொள்வது வரையிலான இன்றைய இளம் உள்ளங்களின் தேடல்களையும் தனித்தன்மைக்காகப் போராடும் மனப்போக்கையும் இயல்பாய், வலிந்து கட்டாமல் ரசமாய்ச் சொல்கிறது கதை. பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமான இன்றைய தலைமுறை இடைவெளிச் சிந்தனைகளின் பிரச்சினைகள் மிகையின்றி சித்தரிக்கப்படுகிறது. ஆதவன் பெண் பாத்திரமாகவே மாறி அவளது சிந்தனை, பேச்சு எல்லாவற்றையும் அசலாய் எழுதியுள்ளார் .
தலைமுறை இடைவெளிச் சிந்தனைக்கு ஒரு எடுத்துக்காட்டாய் இதைச்
சொல்லலாம்:
"நம் நாட்டில் பெரியவர்கள் சிறியவர்கள் வாழ்க்கையில் ரொம்பக் குறுக்கிடு
கிறார்கள். இல்லை?" என்றாள் ருக்கு. "குழந்தைகளை ஒரு குறிப்பிட்ட வயதுவரை வளர்த்துவிட்டு அவர்கள் போக்கில் விட்டுவிடவேண்டியதுதானே! அது கிடையாது. அவர்களுடைய உத்தியோகம், கல்யாணம், குடித்தனம், குழந்தை வளர்ப்பு எல்லாவற்றிலும் இடைவிடாமல் குறுக்கிட்டுக் கொண்டே இருகிறார்கள். அமெரிக்காவிலோ, ஜெர்மனியிலோ, ஜப்பானிலோ ஏற்பட்டிருப்பது போன்ற பிரமிக்கத்தக்க முன்னேற்றங்களோ மாறுதல்களோ, நம் நாட்டில் ஏற்படாததற்கு இதுதான் காரணம். ஒவ்வொரு தலைமுறையும் பிந்தைய தலைமுறைகளின் நிழலிலேயே வளருகின்றன. சுதந்திரமான மனோபாவங்களும் புதிய சிந்தனைகளும் வாய்ப்போ ஊட்டமோ இன்றிப் பழைமையின்
சுமைக்கடியில் நசுங்கிப் போகின்றன. ஒரு ஆயிரம் பேராவது துணிந்து இந்தச் சுமையைத் தலையைச் சுற்றி எறிந்துவிட்டுப் புத்தம் புதிதாகத் தொடங்கினால்தான் நமக்கு விடிவுகாலம்".
'பழைமையின் சுமை, புதுமையை நசுக்கப் பார்க்கிறது. புதுமை சுமையை இறக்கிவிட்டு தலை தெறிக்க ஓடப்பார்க்கிறது. சுமைக்குச் சுமப்பவர்களிடம் ஏன் இந்த அலட்சியமும் அவநம்பிக்கையும்? சுமப்பவர்களுக்குச் சுமையின்மீது ஏன் இந்த மிரட்சியும் வெறுப்பும்? இப்படிப் பிடிக்காமல் ஒருவருக்கொருவர் தொத்திக் கொண்டிருப்பானேன்? சுமப்பவர்கள் சுமையை அவ்வப்போது இறக்கி வேண்டாதவற்றை எடுத்தெறிந்துபளுவைக் குறைக்கட்டும்; அல்லது சுமையே சுமப்பவர்களை அனுசரித்து தன் பளுவைக் குறைத்துக் கொள்ளட்டும்; உருவை மாற்றிக் கொள்ளட்டும்; தானும் இறங்கி வந்து சற்று நடக்கட்டும்...' என்கிறார் ஆதவன் அந்தப் பாத்திரத்தின் மூலமாக.
'மீட்சியைத்தேடி' என்கிற குறுநாவல் டில்லி வாழ்க்கைபற்றியும் அது பற்றிய
மிகையான கற்பனையும் மிகையான அலுப்புமான இரு வேறு பார்வை பற்றியும்
சித்தரிப்பது.
இயந்திரமாய்ப்போன டில்லி வழ்க்கையில் அலுத்துப்போயிருக்கிற சங்கர்
விடுமுறையில் தன் சொந்த மண்ணான திருவையாறுக்கு வருகிறான். ரயிலை விட்டு இறங்கிய கணத்திலிருந்து அவன் பார்க்கிற முகங்களும், நுகர்கிற மணங்களும், ஓசைகளும் அவன் மனதில் ஒரு அழகிய அமைதியையும், விடுதலை உணர்வையும் ஏற்படுத்துகின்றன. 'இந்தக் கணத்தை நிரந்தரமாக்க முடியுமானால்!' என்ற ஏக்கம் எழுகிறது. இறங்கியதும் குடிக்கிற காப்பி, வழியில் தென்படுகிற வயல்களின் செழிப்பு, குறுக்க்¢டுகிற ஆற்றுப்பாலம், அதனடியில் சுழித்துக்கொண்டு ஓடும் நீர் எல்லாமுமே 'இங்கேயே இருந்துவிடலாம் போலிருக்கிறது' என்று சொல்ல வைக்கிறது. அதைக் கேட்கிற - அவனை அழைக்க வந்திருக்கும் அவனுடைய சித்தப்பா மகன் கிச்சாவுக்கு
அது ரசிக்கவில்லை. அவன் படித்துவிட்டு பம்பாய்க்கும் டில்லிக்கும் வேலைக்கு மனுப்
போட்டு இண்டர்வியூகளுக்குப் போய், முடிவு தெரியாமல் அலுத்துப்போய் இருப்பவன். "நீ அப்படித்தான் சொல்வாய். இந்த ஊர், இந்த வாழ்க்கை - இவற்றுக்கு வெளியில் நீ இருக்கிறாய். இதை ஏற்றுக் கொண்டாக வேண்டிய கட்டாயம் உனக்கு இல்லை. எனக்கோ, இது என் மேல் திணிக்கப்பட்ட ஒரு நிர்ப்பந்தம். ஒரு தளை" என்கிறான். 'நிர்ப்பந்தமாகிவிடும்போது, எந்த விஷயமுமே சுவாரஸ்யம் அற்றதாகி விடுகிறதோ?' என்று இவனுக்குத் தோன்றுகிறது. ஆபீஸ் வேலை, நகர வாழ்க்கையின் பரபரப்பு அவசரம், காதலி மீராவின் புன்னகை - இவற்றையெல்லாம் விட்டு ஓடிப்போக வேண்டும் என்று அவனுக்கு ஏன் தோன்ற வேண்டும்?
இப்படி அவன் சந்திக்கிற ஒவ்வொன்றும் - தியாராஜர் சமாதியின் அழகான அமைதி, அருகில் யாருக்கும் எதற்கும் கவலைப்படாமல் தன் சொந்தப் போக்கில், சொந்த நியமங்களுக்கு உட்பட்டு ஓடும் காவிரி - எல்லாமும், 'படிப்பு, நாகரிகம், வக்கணையான பேச்சும் பாவனைகளும் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையிலும் மட்டத்திலும் புழங்குவதற்காக அவன் அணிய வேண்டியிருந்த எண்ணற்ற போர்வைகளைக் கழற்றி எறிந்துவிட்டு இந்த நதிக்கரையில், இந்த ஓசைகளின் மத்தியில், பெயர் இல்லாமல், டெலிபோன் நம்பர் இல்லாமல் உட்கார்ந்திருக்க முடியுமானால்!' என்று ஏங்க வைக்கிறது. சித்தப்பா வீட்டுக்குப் போனதும் சித்தப்பா, சித்தி சித்தப்பா மகள் எல்லோரும் காட்டும் பாசம், விருந்தோம்பல் அனைத்தும் அந்த ஏக்கத்தை வலுப் படுத்துகின்றன. மாறாக அவனுடைய சித்தப்பா மகன், அவனது இந்த மன அவசம் எல்லாம் 'இக்கரைக்கு அக்கரைப் பச்சை' என்பது போலத்தான் என்று உணர வைக்கிறான். அவனுடைய சித்தப்பா சொன்ன, "எதிலுமே நீ உன்னைப் பூரணமாக ஆழ்த்திக்
கொள்ள வேண்டும். பூர்ண சமர்ப்பணத்தில் பந்தங்களே இருக்காது. பந்தங்களைப் பற்றி நினைப்பது ஒரு பக்குவமற்ற நிலை" என்பதும் அவனைச் சிந்திக்க வைக்கிறது. 'என்னை உருவாக்கிய, என் சிந்தனைகளை உருவாக்கிய வாழ்க்கை முறையை திரஸ்கரிக்க நினைப்பது எவ்வளவு மோசமானது! எவ்வளவு நாட்கள் இங்கே தங்கினாலும் அவன் என்றைக்காவது ஒரு நாள் திரும்பிப் போக வேண்டியவன்தான்; ஒரு அன்னிய உலகத்தின் பிரஜைதான். இதை ஒப்புக் கொள்வதைத் தவிர வேறு
வழியில்லை' என்பதை உணர்ந்து திரும்புகிறான்.
'கணபதி கீழ்மட்டத்து ஊழியன்' என்கிற குறுநாவலில் எல்லா அலுவலகங்
களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் ஆரோக்கியமற்ற இன்றைய சூழ்நிலைகளின் எரிச்சல் அதிகமும் காட்டப்படுகிறது. கீழ்மட்டத்து ஊழியர்களின் சோம்பல், அலட்சியம், மேலதிகாரிகளின் ஆணவம், அடுத்த நிலை ஊழியர்களிடம் காட்டும் உதாசீனம், செய்யும் அவமதிப்பு ஆகியவை ஆதவனுக்கே உரிய மென்மையான நகைச்சுவையுடன் சித்தரிக்கப்படுகின்றன. புதுமைப்பித்தனைபோலவே நடுத்தர வர்க்கத்தின் விரக்தியை, வாழ்வின்மீதான அதிருப்தியை இக்கதையில் வரும் கணபதி போன்ற பாத்திரங்கள் கசப்போடு வெளிப்படுத்துகிறார்கள். அவர்களுக்கு எல்லோர் மீதும் எதற்கும் ஊமைக்கோபம் பீரிட்டு, சிறுமையாக உணர்கிறார்கள். அதிலும் டில்லி போன்ற வெளி மாநிலங் களில் வேற்றுமொழி அதிகாரிகளிடம் காணப்படும் தென்னிந்தியர் மீதான இளக்காரம், எள்ளல் எல்லாம் இவர்களை எரிச்சலூட்டி இயலாமையால் சோர்ந்து போகிற சுயபரிதாபத்தைச் சித்தரிக்கின்றன.
இவர்கள் வெளியில் மட்டுமின்றி வீட்டுக்குள்ளும் அவமதிப்பையே அதிகமும் உணர்கிறார்கள். இக்கதையில் வரும் கணபதிக்கு, 'வீட்டில் அண்ணன் சம்பாத்தியத்தில்
சாப்பிடுகிற தாழ்வுணர்ச்சி, பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ள மறுத்து அவனது
பாதுகாப்பில் அவனிருப்பதாக மறைமுகமாக உணர்த்தும் அண்ணனின் செயல், அலுவலகத்தில் தன்னிடம் அன்பாக இருப்பதுபோல் காட்டிக்கொள்ளாமலே வேலை வாங்கும் மேலதிகாரி போலவே அவனிடம் வேலை வாங்கும் அண்ணி, மாதாமாதம் பணம் அனுப்புவதற்குப் பிரதி உபகாரமாய் அவனுக்கு மனைவி தேடி அவமானப்படுத்தும் அப்பா'-எல்லாமும் தன்னை அவமதிப்பதாகவே படுகிறது. அவன் அலுவலகப் பொறுப்பில் இருக்கும்போது அவனை லட்சியம் செய்யாத அடுத்தநிலை ஊழியர்கள், மேலதிகாரியு டனான கௌரவமற்ற விவாதம், விதிகளைமீறிய விளையாட்டு - இவ்வளவும் எதனால்?' என்று குமைகிறான். கிராமத்தைவிட்டு வந்து இங்கே டில்லியில் அவனுக்கென்று
யாருமில்லாதது போன்ற பிரிவுணர்ச்சி, சமூகத்தின் ஜாதியமைப்பால் தனக்கு விரும்பிய கல்லூரியில் படிப்பில் இடம் கிடைக்காது போன ஆற்றாமை என்று எதிலும் அவனுக்கு ஏமாற்றமும் விரக்தியுமே மிஞ்சுகின்றன. எல்லோருக்குமான இந்த யதார்த்தமான ரசபேதமான அனுபவங்கள் கணபதி என்கிற கீழ்மட்டத்து ஊழியனுக்கு அதீதமாகத் தோன்றுவதை எள்ளல், நையாண்டி நிறைந்த சமூக விமர்சனங்களுடன் காட்சிப்படுத்தியுள்ளார் ஆதவன் இக்கதையில்.
'நதியும் மலையும்' என்கிற தலைப்புடனான குறுநாவல் நதியை நாடி மலை செல்வதான உருவகத்தைக் கருவாகக் கொண்டது. புதுமைப்பித்தனையே படிக்கிற மாதிரியான உணர்வவைத் தரும் அசல் திருநெல்வேலி வட்டார வாழ்வு முறை, சொல்லாட்சிகள் கொண்ட படைப்பு. இசக்கியாப் பிள்ளை என்பவரின் இளமை முதல் அவரது ஈடேறாத காதலின் மறுபிறப்பு ஈறாக, மரபுவழிப்பட்ட எதிர்பார்ப்பு, பெற்றவரால் கிட்டும் ஏமாற்றம், நிறைவேறாத காதலின் உயிர்ப்பு பற்றிய கனவு என கதை விஸ்தார மாக ரசமாகப் பின்னப்பட்டுள்ளது. டில்லி வாழ்வில் பிணைக்கப்பட்ட தமிழ்நாடு இளைஞனின் சுயபரிதாபத்துக்கு சற்றும் குறைவில்லாமல் திருநெல்வெலி கிராமத்து இளைஞனுக்கும் ஏற்படும் விரக்தி, எங்கும் எதிலும் பிடிப்பில்லாத மனப்போக்கு, தன்னையே தண்டித்துக் கொள்ளும் கோபம், எல்லோர்மீதும் ஏற்படுகிற கோபம் என ஆதவனின் எல்லாக் கதைகளையும் போலவே இதுவும் விரக்தியின் கசப்பையே அதிகமும் காட்டுகிறது. இவ்வுணர்வு திரும்பத் திரும்ப அவரது எல்லாப் படைப்புகளிலும் காணப்பட்டாலும், யதார்த்தமான வாழ்வின் சித்தரிப்புகளாலும் அவரது ரசனை மனதின் கூர்மையான அவதானிப்புகள் தரும் வாசிப்பு சுகத்தாலும் அது ஒரு குறையாகப் படவில்லை. கதையினூடே வரும் தலவருணைகள் அற்புதமானவை.
உதாரணத்துக்குச் சுட்டுவதானால்: காந்திமதி என்பவளின்மீது கொண்ட இளம் பருவத்து நேசம் அவள் மீது காதலாகப் பரிணமித்து, பெற்றவர்களின் கௌரவப்பிரச்சினையால் அக்கனவு தகர்க்கப்பட்டு இருவரும் வெவ்வேறு துணையுடன் பிணைக் கப்பட்டு, வாழ்க்கை திசை மாறிப்போய் இருவரும் தம் துணையின்றி வாழும் சூழ்நிலை யில், விதியின் விளையாட்டு மீண்டும் அவர்களை நெருங்கச் செய்கிறது. கணவனால் கைவிடப்பட்ட காந்திமதி, மனைவியை இழந்த இசக்கியாப் பிள்ளையைப் பார்க்க குற்றாலத்திலிருந்து அழைக்கிறாள். அவளது அழைப்பைப்பற்றிச் சிந்திக்கிற பிள்ளையின் மனவோட்டம் இப்படிச் சித்தரிக்கப்படுகிறது: 'சோ'வேன விழும் குற்றாலம் நீர்வீழ்ச்சி அவர் கற்பனையில் தெரிந்தது. நதி தன் பாதையில் வரும் மலையைத் தழுவி வசப் படுத்திக் கொள்ள முயலுகையில் நீர்வீழ்ச்சி உண்டாகிறது. தன் பாதையில் குறுக்கிடு பவற்றை அரவணைத்துக்கொள்ளத்தான் நதி முயலுகிறதே தவிர எதையும் அணைத்துக் கொள்வதற்கென்று தன் போக்கைவிட்டு விலகிச் செல்வதில்லை. மலை இல்லாவிட்டால் அது சமவெளியில் ஓடிக் கொன்டிருப்பதில்தான் நதியின் அழகும் கம்பீரமும் இருக்கிறது. பெண்கள் கூட நதியைப் போன்றவர்கள்தாமோ? ஆனால் நதிகள் கரைகளுக்கிடையில் செல்லும்போது மதிப்புப் பெறுகின்றனவென்றால், மலைகளும் தனியே இருக்கும்போது தானே மதிப்புப் பெறுகின்றன?'
கடைசியில் மலை நதியை நோக்கிப் போகிறது என்பதாகக் கதை முடிகிறது. வழக்கமான நகர்ப்புறச் சிந்தனைக்கு மாற்றாக இக்கதையில் கிராமத்து வாழ்வினைச்
சித்தரித்திருக்கிறார் ஆதவன்.
'பெண், தோழி, தலைவி' என்கிற கடைசிக் குறுநாவல் நடுத்தர வர்க்கத்துப் பெண் ஒருத்தி வேலைக்குப் போவது, அங்கு அவளுக்கு ஏற்படுகிற அனுபவங்கள் பற்றியும் வீட்டில் உள்ளவர்களுக்கு அவள் பெண்ணாகவும், அலுவகத்தில் உள்ளவர்களுக்குத் தோழியாகவும், பின்னர் அலுவலக சங்கத்தின் தலைவியாகவும் படிப்படியாய் பரிணாமம் பெறுவது பற்றியும் சொல்கிறது. லல்லிக்கு அலுவலகத்தில் சக ஊழியர்களான பெண்களின் வம்புப் பேச்சும், நேர் மேலதிகாரியான செல்வராஜ் என்பவனின் ஒட்டாத போக்கும் ஆரம்பத்தில் சுவாரஸ்யமற்றதாக இருந்தாலும் போகப் போக அவளுக்கு நடைமுறை அலுவலக யதார்த்தம் புரிந்து சுவாரஸ்யம் ஏற்படுகிறது. செல்வராஜைப் பற்றி மற்றவர் உருவாக்கும் சித்திரம் மெல்ல மெல்ல நாளடைவில் கலைந்து அவனிடம் ஒரு ஈர்ப்பு ஏற்படுவதும் பின்னர் அவள் ஏகமனதாய் சங்கத் தலைவியாய் ஏற்கப்படுவதுமான நிகழ்ச்சிகள் ஆதவனின் வழக்கமான விரக்திப் பாணியில் இல்லாமல் ஆரோக்கியமான நம்பிக்ககயூட்டும் வாழ்வின் பதிவுகளாகக் கதை வளர்ந்து நிறைவு பெறுகிறது.
ஆதவனின் படைப்புகளில் நமக்கு இனிய வாசிப்பு அனுபவம் கிட்டினாலும் ஏன் அவர் வாழ்வின் நம்பிக்கை வறட்சியையே அதிகமாகச் சித்தரிக்கிறார் என்று அவர் மீதான அனுசரணை மிக்க ஒரு அனுதாபம் ஏற்படுவதை தவிர்க்க முடியைவில்லை. அதற்குக் காரணம் அவரே சொல்வது போல "நானென்ன, என்னிடமிருந்தே தப்ப முயன்று கொண்டிருக்கிறேனா, அல்லது என்னைக் கண்டுபிடிக்கவா?" என்பதுவாக இருக்கக் கூடுமோ என்றே சிந்திக்க வைக்கிறது. 0
நூல் : இரவுக்கு முன்பு வருவது மாலை.
ஆசிரியர்: ஆதவன்.
வெளியீடு: கிழக்கு பதிப்பகம், சென்னை.
விலை : ரூ. 120/-
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
வணக்கம் அய்யா, உங்களின் இலக்கிய ஆர்வம் கொஞ்சம் கூட குறையவில்லை.20 வருடங்களுக்கு முன் உங்கள் வீட்டில் நண்பர்கள் துரையப்பன், நாகரஜன்,பெ.கருணாகரன் ஆகியோருடன் ஜெகே வின் சிறுகதைகள் பற்றி நேடில் பேசியது போலவே இருக்கிறது.அகிலன் நலமா?
புகைப்படம் எடுப்பதிலும் சேகரிப்பதிலும் உஙகளுக்கு ஆர்வம் உண்டு எனத் தெரியும்.தங்களின் பழைய இலக்கிய நண்பர்களுடனான புகைப்படங்களை வலைப்பக்கத்தில் வெளியிடலாமே?
வெகு நாட்களுக்கு முன்பு அவருடைய 'என் பெயர் ராமசேஷன்' படித்தேன். நின்று பெய்யும் மழையில் நிற்காது வழியும் கூரை வழித் தண்ணீர் மாதிரியான நடை. முகப்போவியமாக ஒரு ஆணின் பின்பக்க தலை . யார் வேண்டுமானாலும் முகத்தைப் பொதித்துக் கொள்ளுங்கள் என்பதாக. அதை மறுபடி படிக்கவேண்டும்.
- ரமேஷ் கல்யாண்
Post a Comment