Monday, December 01, 2003

நினைவுத்தடங்கள் - 3

அது இரண்டாவது உலக மகாயுத்தம் நடந்து கொண்டிருந்த காலம். 1939-45. எல்லாமே விலை ஏறியதோடு பொருட்களுக்கும் தட்டுப்பாடு. ரேஷன் அமுலுக்கு வந்தது. பேப்பர் கிடைக்காமல் பாடம் பண்ணப்பட்ட வாழைச்சருகுகளில் கல்யாண அழைப்பிதழும் சினிமா நோட்டீஸ்களும் அச்சானதைப் பார்த்திருக்கிறேன். யுத்தவேலைகளுக்காக காண்டிராக்ட் எடுத்தவர்களும், இரும்பு சிமெண்ட் வியாபாரம் செய்து பொருட்களைப் பதுக்கி விற்றவர்களும் ரேஷன்கடையெடுத்தவர்களும் கொள்ளை லாபம் ஈட்டி பெரும் பணக்காரர்கள் ஆனார்கள். சாலைகளில் கிடந்த மாட்டு லாடங்களினால் சரக்குலாரிகளின் டயர்கள் பக்ஞ்சர் ஆகி டயர் கிடைக்காத சிரமம் ஏற்பட ` ஒரு லாடத்துக்கு காலணா தரப்படும் ` எண்று தண்டோரா போட்டார்கள். ஒரு ரூபாய்க்கு 16 அணா, ஒரு அணாவுக்கு 4 காலணா. காலணாவுக்கு அப்போது மதிப்பு அதிகம். ஒரு அணா இருந்தால் 4 பெரிய இட்டிலிகள் சாப்பிட்டுக் காலை ஆகாரத்தை முடித்துக்கொள்ளலாம். அதனால் மக்கள் லாடங்களைச் சேகரித்துப்
பணம் பண்ணினார்கள். நான் ஆரம்பக் கல்வி பெற்றது,எங்கள் ஊரில் லிங்காயத் இன ஆசிரியர் ஒருவர் நடத்தி வந்த தனியார் பள்ளியில். அப்போதெல்லாம் லிங்காயத் என்கிற வீரசைவர்கள்தான் கிராமங்கள் தோறும் திண்ணைப் பள்ளிகளை நடத்தி வந்தார்கள். எங்கள் ஆசிரியர் மூன்று தலைமுறைகளாக எங்கள் ஊரில் கற்பித்தவர். அவருடைய அர்ப்பணிப்பும் கல்விமுறையும் இன்று நம்ப முடியாதது. அவர்தான் என் முதல் கதைக்கும் முதல் நாவலுக்கும் கதாநாயகர். இன்று நான் பிழையின்றித் தமிழ் எழுதுவதும் தமிழறிவு பெற்றிருப்பதும் அவரால்தான். அந்த வயதில் எங்களுக்கு யுத்தம் பற்றியும் அதில் பங்கேற்ற நேசநாடுகள் பற்றியும் அச்சநாடுகள் -ஜப்பான், ஜர்மனி- பற்றியும் சொன்னவர். செம்பழுப்பு வண்ணத்தில்- செப்பியா நிறம்- வெளியாகிய யுத்தசெய்திப் பிரசுரங்களை பக்கத்து நகரத்திலிருந்து கொண்டுவந்து காட்டி அவ்வப்போதைய யுத்த நிலவரங்களைச் சொன்னவர். பள்ளிக்கூட வெளிச்சுவற்றில் ஒட்டப்பட்ட அந்தப் பிரசுரங்களில் புகை மூட்டத்திற்கிடையே டாங்கிகளையும் அவற்றிலிருந்த பீரங்கிகளிலிருந்து நெருப்பும் புகையும் சூழ்வதையும் பார்த்து சிலிர்த்திருக்கிறேன். சிறுத்தையின் வேட்டைக் கண்களை நினைவூட்டும்படியான கூர்மையான தொலைதூரப் பார்வையும், இடப்பக்கம் வகிடெடுத்து வலப்புறம் தூக்கிவாரிய கிராப்பும், கம்பளிப்பூச்சி மாதிரி மூக்கினடியில் தொற்றிகொட்டிருக்கும் முரட்டுக் கட்டைமீசையும் வலது தோட்பட்டையில் ஸ்வஸ்த்திக் சின்னமுமாய் கையுயர்த்தி நிற்கிற ஹிட்லரின் படத்தை அப்பிரசுரங்களில் பார்த்தது இன்னும் கண்முன்னே நிற்கிறது. என் கலையுணர்வும் அந்த வயதில்தான் பரிச்சயம் கொண்டது.
- தொடர்வேன்.
வே.சபாநாயகம்.

No comments: