Sunday, December 07, 2003

நினைவுத்தடங்கள் - 4

அப்பாவுடன் தினமும் போகிற சிவன் கோவிலுக்குப் பக்கத்தில் ஒரு தச்சாசாரியின் வீடு இருந்தது. அவர் கிராமத்துத் தச்சு வேலை தவிர மரத்தில் சாமி சிலைகளும் சுதை வேலைகளும் செய்பவர்.எங்கள் ஊர் பாரத பூசாரியும் அவர்தான். திரௌபதி அம்மன் கோவிலில் உள்ள பஞ்ச பாண்டவர் சிலை எல்லாம் அவர் செய்தது தான். சிவன் கோவில் ரிஷப வாகனம் மயில் வாகனம், அன்னப் பட்சி எல்லாம்கூட அவர் செய்ததுதான். ரிஷப வாகனம் செய்தபோது அருகே இருந்து பார்த்த ரசித்தது இன்னும் மறக்கவில்லை. அதுதான் எனக்குள் இருந்த கலைஉணர்வைத் தூண்டியது எனலாம். முதல்நாள் பார்த்தால் வெறும் கட்டைகளாகக்கிடப்பவை மறுநாள் ஒரு சிற்பவடிவின் முழுமையற்ற தோற்றம் கொண்டிருக்கும். நான் பள்ளிவிட்ட நேரம் போக அங்கேதான் இருப்பேன். ரிஷப வாகனம் செய்தபோது நான் முழுதும் அருகிருந்து பார்த்திருக்கிறேன். முதலில் ரிஷபத்தின் தலை பிறகு உடல், கால்கள் என்று தனித்தனியாய் உருவாக்கிப் பின் இணைத்து பீடத்தில் பொருத்தி, திமிறிக்கொண்டு பாயத் தயாராய் நிற்கிற ஒரு கம்பீரமான ரிஷபமாய் ஆன அற்புதம் என்னுள் பரவசத்தை ஏற்படுத்தியது. கழுத்தில் சலங்கைகள் மாலையாகத் தொங்க சின்னச் சின்ன மரசலங்கைகளைக் கடைந்து தைத்து மக்குவைத்து வண்ணம் பூசியது எல்லாம் என் கலாரசனைக்கு மேலும் எழுச்சி தந்தது. அப்போது அவர் தீட்டிய வண்ணத்தின் வாசனை கூட இன்று நினைக்கும்போது நாசியில் மணக்கிறது. சில நினைவுகளுடன் அந்த நேரத்து வாசனையும் உடன் உணர்வது எனக்கு அடிக்கடி நேரும்.

அப்புறம் விடுமுறையின்போது என் மாமா வீட்டிற்குச் செல்லும் போதெல்லாம் நான் உடனே செல்வது நிறைய ரவிவர்மாவின் ஓவியங்கள் மாட்டியிருந்த ஹாலுக்குத்தான். என் மாமா பெரிய ரசிகர். ரவிவர்மாவின் புகழ்பெற்ற ஒவியங்களை எல்லாம் வாங்கி காலரிஹால் போன்ற பெரிய கூடத்தில் மாட்டி வைத்திருந்தார். இடுப்பளவு உயரமிருந்த அந்த பகீரதன் தவம், தமயந்தியும் அன்னமும், ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் இன்னும் பல அற்புத வண்ண ஓவியங்கள் பார்க்க அலுக்காதவை. அவை என் ஓவியரசனையைத் தூண்டி விட்டன. இதெல்லாம்தான் நான் பின்னாளில் ஓவியனாகப் பரிணமிக்கவும் காரணமாய் இருந்தன. சின்ன வகுப்புகளிலும் பின்னர் கல்லூரி வகுப்புகளிலும் பாடம் நடக்கும்போதே ஆசிரியர்களை கோட்டோவியமாக வரைந்து அதற்காகத் தண்டனையும் பாராட்டும் பெற்றிருக்கிறேன்.

பின்னர் அறுபதுகளில் நான் கணித ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் பள்ளி இலக்கிய மன்றத்துக்கு பேச வந்த கி.வா.ஜ, அ.சிதம்பரநாதன் செட்டியார், தேவநேயப்பாவணர், உலகஊழியனார், கி.ஆ.பெ.விசுவநாதம், மயிலை சிவமுத்து, குன்றக்குடி அடிகளார் எல்லோரையும் சில்பி போல நேரே பார்த்து வரைந்து அவர்களிடம் கையப்பம் பெற்றதை இன்னும் பொக்கிஷமாய்ப் பேணி வருகிறேன். விகடனில் பார்த்த சில்பி.,மாலியின் ஓவியங்கள் என் கலைரசனைக்குத் தூண்டுதலை அளித்தன. கையெழுத்திட்டபோது உலகஊழியனார் தத்ரூபமான தன் படத்தைப் பார்த்து நெகிழ்ச்சியுற்று மேடையிலேயே கட்டித்தழுவியதும் `ஓவியம் உணர்ந்தவன் இறையனக் கருதப்படுவான்` என்று அவரது படத்தின் மீது எழுதி கையப்பமிட்டுத் தந்ததும் என் கலை ரசனை பெற்றுதந்த பேறுகளாகும். இது போலவேதான் நான் எழுத்தாளனாகப் பரிணாமம் கொள்ளவும்
அந்த வயதில் அனுபவங்கள் கிட்டின. எழுத்தாளனாகு முன் நிறைய வாசிக்கவும் துவக்கக்கல்வி முடிந்து நடுநிலைப் பள்ளி வந்ததும் தூண்டுதல்கள் கிடைத்தன.

- தொடர்வேன்.

வே.சபாநாயகம்.

No comments: