நான் எழுத்தாளனாக உருவானதற்கு முந்தைய கட்டமான பேச்சாளன் ஆன சூழ்ந்?லையை முதலில் சொல்ல வேண்டும். உள்ளூரில் ஐந்தாம் வகுப்பு முடித்து பக்கத்து சிறிய நகரான பெண்ணாடம் போய் நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்ந்தேன். தரையில் பிள்ளைகள் உட்கார ஆற்றுமணல் பரப்பிய எங்களூர்ப் பள்ளிக்கும் புதிய பள்ளிக்கும் பெரிய மாற்றம் தெரிந்தது. முதல் தடவையாக பெஞ்சில் அமர்ந்தேன். ஒவ்வொரு வகுப்புக்கும் தனி அறை; ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனி ஆசிரியர். வகுப்பறையின் வெள்ளை வெளேரென்ற சுவற்றின் மேல்பகுதியில்- `தாழ்ந்து நின்றால் வாழ்ந்து ந்?ற்பாய்` என்பது போன்ற, இளம் நெஞ்சில் சிலா சாசனமாய்ப் பத்?யும் எளிய கருத்துரைகள் எழுதப் பெற்று வகுப்பினுள் நுழைந்ததுமே ஒரு பரவசத்துக்கு ஆளானேன். சனிக்கிழமை அரை நாள் பள்ளி. அன்று இலக்கிய மன்றம். அதுதான் எனக்குப் பேச்சுப் பயிற்சியை அளித்தது. அதை இயக்கிய தமிழாசிரியர் வித்வான் சாம்பசிவ ரெட்டியார் தான் நான் பேச்சாளன் ஆனதற்கும் எழுத்தாளனாய் ஆனதற்கும் தூண்டுதலாய் இருந்தவர். வாரந்தோறும் தரப்படும் தலைப்புகளில், அவர் எழுதித் தந்த பேச்சை நான் ஒரு கூட்டங்கூட விடாமல் பேசி வந்தேன். அவர் ஒரு புதுமையையும் புகுத்தினார். அதுவரை ஆசிரியர்களில் ஒருவர் தலைமை வகித்து நடத்திய கூட்டத்திற்கு மாணவர்களைத் தலைமை ஏற்கச் செய்தார். முதல் வாய்ப்பை எனக்களித்தார். அப்போது எனக்குப் பனிரெண்டு வயதுதான். ஆறாம் வகுப்பின் இறுதியில் அந்தப் பள்ளிக்கு மட்டுமல்ல வேறு எந்தப் பள்ளிக்கும் புதுமையான அந்த அனுபவம் எனக்குப் பெரிய தன்னம்பிக்கையை அப்போது ஊட்டியது.
அப்போது அந்த ஊர்வழியே காமராஜர் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். 1945 ஆம் ஆண்டு. வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நாடே கொந்தளித்துக் கொண்டிருந்த நேரம். காமராஜர் அங்கு இறங்கிப் பேசத் திட்டமில்லை. ஆனாலும் உள்ளூர் மக்கள் அவர் வரும் சாலையின் குறுக்கே நின்று வழிமறித்து ஒரு ஐந்து நிமிஷம் பேசிச் செல்லுமாறு அடம் பிடித்தார்கள். முதலில் கோபப் பட்டாலும் மறுக்க முடியாது சாலையோரம் போட்டிருந்த திறந்தமேடை மீது நின்று ஐந்து நிமிஷம் பேசினார். அப்போது அவருடன் வந்த ஒரு துடிப்பான இளைஞர்-ராஜகோபாலன் என்பவர் பின்னாள்?ல் தமிழ்நாடு காங்கிரஸ் செயலாளராகவும் தூக்குமேடை ராஜகோபாலன் என்றும் அறியப்பட்டவர் என்று ஞாபகம்- `இரண்டே நிமிஷம்` என்று கமராஜரிடம் அனுமதி வாங்கிக் கொண்டு மிக ஆவேசமாய் எச்சில் தெறிக்க இரண்டே நிமிஷத்தில் ஒரு உணர்ச்சிப் பெருக்கை பார்வையாளர்களிடையே உருவாக்கினார். `வெள்ளைக்காரனை புட்பாலை உதைக்கிற மாதிரி உதைத்து வெளியேற்ற வேண்டும் என்று புட்பால் உதைக்கிறமாதிரி வலது காலை முன்னோக்கி விசிறிக் காட்டினார். அப்போது என்னுள் குபீரென்று சுதந்திரக் கனல் மூண்டது. `வந்தேஏஏஏ மாதரம்` என்று எனையறியாமலே ஆவேசமாய்க் கூவினேன். கூடி இருந்த எல்லோரும் ஆவேசமாய் என்னைப் பின்பற்றிக் கூவினார்கள். அது முதல் அவரைப்போலவே பேசத் தொடங்கினேன். என் வயதொத்த சிறுவர்களைக் கூட்டி வைத்து நானே தயாரித்த சின்ன மூவர்ணக்கொடியை ஒரு சாரணர் கழியில் ஏற்றி ஆவேசமாய்ப் பேசுவேன். அந்தக் கூட்டத்தில்தான் காமராஜர் வருவதற்கு முன் ஒரு ஆசிரியர் பாரதியின் வ.உ.சிக்கும் ஜாக்ஸன் துரைக்குமிடையே நடப்பதாக கற்பனையில் எழுதிய வாக்குவாதத்தை நெஞ்சை உருக்குகிறபடி உணர்ச்சிகரமாய்ப் பாடினார். அதுதான் நான் முதன்முதலாகக் கேட்ட பாரதியின் சுதந்திரக் கனலெழுப்பிய பாட்டு. அது பாரதியின் மற்றப் பாடல்களையும் தேடிப்பாட வைத்தது. இதன் தொடர்ச்சியாக காந்தி நேரு ஆகிய தலைவர்கள்மீது ஆவேசமான பக்தி எழுந்தது; கூட்டங்களில் அவர்களது பெருமையைப் பேச வைத்தது. 1947 ஆகஸ்ட் 15ல் சுதந்திரம் பெற்றபோது கோலாகலமாக ஊரே கொண்டாடியது. சிறுவர்களாகிய நாங்களும் உணர்ச்சி வசப்பட்டுக் கொண்டாடினோம். அந்த உணர்ச்சிக்கொந்தளிப்பு அடங்கு முன்னர் 1948 ஜனவரி இரவு நடுநிசியில் தலையில் இடிவிழுந்த மாதிரி தமுக்குச் சத்தம் கேட்டது. காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியை தண்டோரா போட்டுத் தெருத்தெருவாகச் சொல்லிக் கொண்டு போனார்கள். வானொலி மைதானத்தில் ஊரே திரண்டு ஓலமிட்டது. வானொலியின் பரபரப்பான செய்தியைக் கேட்டு எல்லா மக்களும் துடித்தார்கள். சோக உணர்வு உந்த வீட்டுக்கு வந்த நான் ஆவேசமாய் காந்தியடிகளின் படுகொலை பற்றிப் பரபரவெனப் பத்துப் பக்கங்களுக்குமேலாக என் சோகத்தை இடம் மாற்றிய பிறகுதான் ஓய்ந்தேன். அதுதான் நான் எழுதிய முதல் படைப்பு. நான் எழுத்தாளன் ஆக முதல் விதை அப்போதுதான் ஊன்றப் பட்டிருக்க வேண்டும். அப்போது நான் எட்டாம் வகுப்பில்படித்துக் கொண்டிருந்தேன்.
- தொடர்வேன்
-வே.சபாநாயகம்.
Friday, December 19, 2003
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment