Saturday, December 13, 2003

நினைவுத் தடங்கள் - 5

நான் இன்று பிழையின்றி எழுதவும் சரளமாய்ப் படிக்கவும், நான் துவக்கக் கல்வியில் பெற்ற பயிற்சிதான் என்றால் இன்றைய கல்வி முறையில் நம்ப முடியாதுதான். அப்போது ஐந்து வகுப்புகளுக்கு முன் `அரிச்சுவடி` என்றொரு வகுப்பு இருந்தது. அந்த ஆண்டு முழுதும் மொழிப் பயிற்சிதான். மணலில் தமிழ் எழுத்து 247 ஐயும் ராகம் போட்டு சொல்லி சொல்லி எழுத வேண்டும். அது அத்துபடி ஆனபிறகே ஒன்றாம் வகுப்பு. அதில் ஓரெழுத்துச் சொல், ஈரெழுத்துச்சொல், மூவெழுத்துச் சொல், நாலேழுத்துச் சொல்.. என்று படிப்படியாக சிலேட்டில் எழுதிப் பழகி, பிறகு இருசொல் வாக்கியம், மூன்று சொல் வாக்கியம் என்று தொடங்கி, பெரிய வாக்கியங்கள் படிக்கப் பயிற்சி தரப்படும். ஒன்றாம் வகுப்பில் `உலகநீதி`, இரண்டாம் வகுப்பில் `ஆத்திச்சூடி`, மூன்றாம் வகுப்பில் `கொன்றைவேந்தன்`, நான்காம் வகுப்பில் `வெற்றிவேற்கை`, ஐந்தாம் வகுப்பில் `விவேக சிந்தாமணி`, `மூதுரை`, `நன்னெறி`.....என்று ஐந்து ஆண்டுகளில் பிற்கால நீதி நூல்கள் அனைத்தும் பாடம் ஆகிவிடும். 4, 5வது வகுப்புகளில் ஆண்டுக்கு ஒரு சதகம்- புரிந்தாலும் புரியாவிட்டாலும் பதம் பிரித்துப் போடப்படாத பிரதிகளிலிருந்து நெட்டுருச் செய்ய வேண்டும். அப்படி மனப்பாடம் செய்தவைதான் இன்று பேச்சுக்கும் எழுத்துக்கும் அழைக்கு முன்னே வந்து கை கட்டி நிற்கின்றன. பின்னாளில் அர்த்தம் புரிந்து கல்லூரிகளில் படித்தவை எல்லாம் சமயத்துக்கு காலைவாரி விட்டுவிடுவதைப்
பார்க்கிறோம். அப்படிக் கிடைத்த பயிற்சியினால்தான் ஐந்தாம் வகுப்பில் படிக்கும்போதே தலைணை போன்ற பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதையைத் தடங்கலின்றிப் படிக்க முடிந்தது.

பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதை பிள்ளைப் பிராயத்திற்கு ஒரு வசீகரமான நூல். ஏன்- எந்த வயதிலும் வசீகரமானது தான். நான் குறிப்பிடுவது இன்றைய மறு ஆக்க விக்கிரமாதித்தன் அல்ல. அந்தக் காலத்துப் பழைய பதிப்பு. பழைய பாணி ஓவியங்களுடன், பெரிய எழுத்தில் பாமர மக்கள் படிக்கும்படி வெளியாகி, திருவிழாக் கடைகளில் விற்ற பதிப்பு. கதைக்குள் கதை, அதற்குள் அனேக கதைகள் என பிரமிப்பூட்டும் யுக்தியாலானது. அராபிய இரவுகளின் ஆயிரத்தோரு கதைகளுக்கு எவ்வகையிலும் சோடை போகாத கதைகள். அது என் கதைபடிக்கும் ஆர்வத்தைத் தூண்டி விட்டது. அதன் தொடர்ச்சியாய் கிராமத்துப் பெரியவர்கள் கனத்த அட்டை போட்டுப் பாதுகாத்துவருகிற நூல்களில் ஒன்றான `ஆயிரம் தலை வாங்கி
அபூர்வ சிந்தாமணி`யும் வடுவூர் துரைசாமி அய்யரின் துப்பறியும் நாவல்களும் எனக்குப் பனிரெண்டு வயதுக்குள்ளேயே
படிக்கக் கிடைத்ததும் என் மொழ்? ஆளுமைக்கு உரமாக அமைந்தது. அது போன்ற கதைகள் எழுதவும் ஆவல் ஏற்பட்டது.


உயர்நிலைப் பள்ளிப் படிப்பின் போது அண்ணாமலையில் பி.ஓ.எல் படித்துக்கொண்டிருந்த என் உறவினர் ஒருவரின்
தூண்டுதலால் டாக்டர் மு.வ வின் நாவல்களைப் படிக்க நேர்ந்த்து. அது -1950கள்- மு.வ வின் யுகம். திருமணங்களில்
மணமக்களுக்கு மு.வ வின் நூல்கள் பரிசாக அளிக்கப்பட்டன. ஒரே தலைப்புக் கொண்ட நூல் நான்கு ஐந்து கூடப்
பரிசாகக் கிடைத்திருக்கும். மு.வ வின் முதல் நாவலான-எதிலும் வெளியாகாமல் நேரடியாகவே நூலாகப் பிரசுரமான - `கள்ளோ காவியமோ?`தான் அதிகமும் பரிசளிக்கப் பட்டது. அந்தக் காலகட்டத்தில் அமோக விற்பனை கண்டு சாதனை படைத்த நூல். ஒவ்வொரு அத்தியாயமும் கதைத் தலைவனும் தலைவியும் மாறி மாறிக் கதை சொல்லும் புதிய யுக்தியோடு எழுதப் பட்டதோடு சாதாரண தாம்பத்ய சச்சரவு எப்படிப் புரிந்து கொள்ளாமையால் பெரிய சிக்கலை வாழ்க்கையில் ஏற்படுத்துகிறது என்பதை இனிய புதுமையான தமிழ் நடையில் மு.வ அற்புதமாகச் சொல்லியிருந்தார். உயர்நிலைப் பள்ளி வயதிலும், கல்லூரி வயதிலும் பின்னர்
திருமணம் ஆனபிறகும் பலமுறை அதை நான் படித்திருக்கிறேன்.மண்ணுக்கேற்ற மணம் போல வயதுக்கேற்ற சுவையுடன் `
நவில் தொறும் நூல் நயம்` என்பதற்கு எடுத்துக் காட்டாக எனக்கு அந் நாவல் வெவ்வேறூ அர்த்தங்களைத் தந்து
மகிழ்வூட்டியது. அப்போது வங்காள நாவல்கள் அதிகமும் த.நா.குமாரசாமி. அ.கி. நடராஜன் போன்றோரால் மொழிபெயர்க்கப் பட்டு தமிழ் வாசகர்களைப் பெரிதும் ஈர்த்தன. தாகூர், சரத்சந்திரர், பக்கிம்சந்திரர் நாவல்கள்- அனேகமாக அப்போது வெளியான எல்லா வங்காள நாவல்களையும் புகழ் பெற்ற `ஆனந்த மடம்` உட்பட அந்த வயதில் பள்ளி இறுதி வகுப்புக்கு முன்னரே படித்து விட்டேன். எட்டாம் வகுப்பில் படிக்கும் போது 1948-1949 களில் நிறைய குழந்தைப் பத்திரிகைகளான வை.கோவிந்தனின் `அணில்`, அழ.வள்ளியப்பாவின் `பாலர்மலர்`, திஜ.ர வின் `பாப்பாமலர்`, தமிழ்வாணனின் `கல்கண்டு`, வானதி திருநாவுக்கரசின் `ஜில்ஜில்`, குமுதம் வெளியீடான `ஜிங்லி`, ஆர்வி ஆசியராக இருந்த `கண்ணன்`, மற்றும் டமாரம், குருவி, யுவன் என்று அப்போது எத்தனை அருமையான பிரசுரங்கள்- என் தீராத வாசிப்பு வேட்கைக்கு விருந்தளித்தன. எல்லாம் ஒரு அணா. அரையணா விலையில்! `யுவன்` என்ற கையகலப் பதினாறு பக்கப் பத்திரிகை காலணாதான். ஒரு அணா, இரண்டணா விலையில் கையகலத்துக்கு தமிழ்வாணனும் வானதி திருநாவுக்கரசும் வெளியிட்ட சிறுசிறு கதைப் புத்தகங்கள் என்னைப் போல எத்தனையோ பேர் பின்னாளில் எழுத்தாளராகப் பரிணாமம் கொள்ள வித்திட்டன என்பதை எண்ணும்போது அந்த நாட்களுக்கு மனம் ஏங்குகிறது. இதன் தாக்கம்தான் பள்ளி இறுதி வகுப்பிலேயே நான் எழுத்தாளனாக உருவானதற்கும் என் முதல் கதையே பத்திரிகையில்
பிரசுரமானதற்கும் காரணமாக அமைந்தது.

- தொடர்வேன்.

- வே.சபாநாயகம்.

No comments: