Tuesday, December 09, 2003

சிற்றிதழ் அனுபவம்

எனக்கு அறிமுகமான சிற்றிதழ் வ.விஜயபாஸ்கரனின் `சரஸ்வதி` தான். 1957ல், கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிர உறுப்பினராக இருந்த என் மாமா மகன் திரு.ஜே.எம்.கல்யாணம் (பிரபல வழக்கறிஞர் கே.எம். விஜயனின் அப்பா) அவர்கள்தான் `சரஸ்வதி`யை எனக்கு அறிமுகம் செய்தவர். அவர் அப்போது ஜனசக்தி பிர்ஸ்ஸில் மேலாளராக இருந்தார். ஜெயகாந்தன் ஜனசக்தியில் பணியாற்றியதும் அப்போதுதான். சரஸ்வதி தொடங்கி அப்போது மூன்று ஆண்டு போல ஆகியிருந்தது. கட்சியின் இலக்கியப் பத்திரிகையான சரஸ்வதியின் இதழ்கள் சிலவற்றைக் கொடுத்து படிக்கச் சொன்னார்.

நான் அப்போதுதான், விகடனின் முதல் மாணவர் திட்டத்தில் கதை வெளியாகி அறிமுகமாகி உத்வேகத்தொடு எழுதத்
தொடங்கியிருந்தேன். அதனால் என்னை ஊக்குவிக்க சரஸ்வதியை அறிமுகப்படுத்தியதுடன் என்.சி.பி.ஹெச்சில், மலிவுப் பதிப்பில் வந்த பிரபல ருஷ்ய எழுத்தாளர்களின் நாவல்களை வாங்கி கொடுத்துப் படிக்கச்சொன்னார். ஜெயகாந்தனின் இலக்கியத்திறனை இனங்காட்டியவரும் அவர்தான். சரஸ்வதியில் அப்போது ஜெயகாந்தனும் சுந்தரராமசாமியும் அற்புதக் கதைகளை எழுதினார்கள். அக்கதைகள் என்னுள் பெரிய இலக்கிய எழுச்சியை உண்டாக்கின. உடனே சரஸ்வதிக்கு சந்தா செலுத்தினேன். இதழ் 0-25 பைசாதான். ஆண்டு சந்தா 3 ரூ. அது முதல்,சரஸ்வதி நின்று போகிற வரை -1961 பிப்ரவரி வரை- தொடர்ந்து விடாமல் வாங்கினேன். ஆனால் சரஸ்வதி தான் தொடர்ந்து கிடைக்க வில்லை. பொருளாதார நெருக்கடியால் விட்டு வ்?ட்டு வரும். சமயத்தில் தகவலே இல்லாது போகும். பிறகு திடீரென்று உருவமாற்றம் பெற்று புதுப்பொலிவோடும் புதுப் பிரகடனத்துடனும் வரும். சிற்றிதழ் நடத்துவதின் சிரமங்களை வாசகரும் அறிந்து கொள்ளுபடி சரஸ்வதியின் போராட்டம் இருந்தது. பாராட்டு நிறையக் கிடைத்தும் சந்தாபலம் இல்லாமல் 7ஆண்டுப் போராட்டத்துக்குப் பின் ஒரு நாள் எந்த அறிவிப்புமின்றி நின்றே போனது. அந்த 7
ஆண்டுகளில் சரஸ்வதி சாதித்தவை மறக்க முடியாதவை. என்னைப் பொறுத்தவரை எனக்கு இலக்கியப் பிரக்ஞையை
ஊட்டியதுடன் இன்னொரு இனிய அனுபவத்தையும் தந்தது. அப்போதுதான் நான் கணித ஆசிரியனாக விருத்தாசலம் உயர்
நிலைப் பள்ளியில் சேர்ந்திருந்தேன். எனது இலக்கியப் பிரக்ஞையைப் பகிர்ந்து கொள்ளவும் இலக்கியச் சுவையை
வெளிப்படுத்தவும் உற்ற தோழமை கிடைக்கவில்லை. அதனால் பத்து,பதினோராம் வகுப்புக்களில் என் கணக்குப் பாடம்
போக மற்ற ஓய்வு வேளைகளில் நானே வலிய, ஆசிரியர் வராத வகுப்புக்களைக் கேட்டு வாங்கி அப்போதுதான்
படித்த சரஸ்வதி இதழ்க் கதைகளை- குறிப்பாக ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி கதைகளை நான் ரசித்தபடியே
உணர்ச்சிகரமாக என் மாணவர்க்குச் சொல்லுவேன். இப்படித்தான் புதுமைப் பித்தனையும், பாரதியையும், கவிமணியையும்
ஆவேசமாக என் மாணவர்க்கு அறிமுகப் படுத்தி என் இலக்கியத் தினவுக்கு வடிகால் தேடிக் கொண்டேன். அப்போது,
இன்றைய பிரபல கவிஞரான த. பழமலய்யும் கவிஞர் கல்பனாதசனும் என் மாணவர்களாக இருந்தவர்கள். அப்போது
என்னால் பெற்ற இலக்கிய எழுச்சியே தனது வளர்ச்சிக்கு மூலம் என்று பழமலய் இன்றும் தன் நூல்களிலும் பேச்சுக்களிலும்
குறிப்பிடத் தவறுவதில்லை. இது சரஸ்வதியால் கிட்டியது.

பிறகு சரஸ்வதியில் வெளியாகிற சிறு பத்திரிகை வ்?ளம்பரங்களைப் பார்த்து விட்டால் போதும் உடனே அதன் ஆயுட்காலம் பற்றி யோசிக்காமல் சந்தா கட்டிவிடுவேன். அப்படி கட்டியவைகளில் தொடர்ந்து கிடைத்தவையும் உண்டு, ஒரே இதழுடன் நின்று போனவையும் ஏராளம். ஆனால் இடையிடையே சிறிது தள்ளாடினாலும் இறுதிவரை ஏமாற்றம் தராமல் நிறைவளித்தவை- ஒரே சமயத்தில் 1965ல் தொடங்கப்பட்ட `தீபம்`, `கணையாழி`இரண்டும்தான். அவைகளின் முதல் இதழ் முதல் சேகரம் செய்ய- கொஞ்சம் தாமதமாகத்தான் அவை பற்றி அறிய நேர்ந்ததால்- மிகவும் சிரமப்பட நேர்ந்தது. சென்னை வரும்போதெல்லாம் தீபம்,
கணையாழி காரியாலயங்களுக்கு தவறாது விஜயம் செய்து, விட்டுப்போன இதழ்களை வெறியோடு சேகரித்தேன். தீபம் திருமலையும் கணையாழியின் சென்னைப் பொறுப்பாசிரியராயிருந்த அசோகமித்திரன் அவர்களும் ஏஜண்ட்களுக்கெல்லம் எழுதி மிகப் பிரையாசைப்பட்டு என் அந்த யக்ஞத்துக்குப் பேருதவி புரிந்தார்கள். இந்த நேரத்தில் அவர்களை நன்றியோடு நினைவு கூரக் கடமைப்பட்டிருக்கிறேன். அப்படிச் சேகரித்தவைகளை ஆண்டுவாரியாக பைண்டு செய்து வைத்ததுதான் இன்று கணையாழித் தொகுப்பும், தீபம் தொகுப்பும் வர உதவியாக உள்ளது.

தொகுத்த விபரம் அடுத்த மடலில்.......

-வே.சபாநாயகம்

No comments: