சென்னை செல்லும்போதெல்லாம் திரு. கஸ்தூரி ரங்கன் அவர்களைச் சந்தித்துப் பேசுவேன். ஆரம்பத்தில் அவர் அதிகமும் நெருக்கமாகப் பேசியதில்லை. என் குறுநாவல்கள் கணையாழியில் பிரசுரமாகத் தொடங்கிய பிறகுதான் மனம் விட்டுப் பேச ஆரம்பித்தார். தி. ஜா நினைவுக் குறுநாவல் போட்டியில் பரிசுபெற்ற என் `இனியரு தடவை` என்ற குறுநாவலை மனந்திறந்து
பாராட்டினார். அவருடன் பழகியவர்க்குத் தெரியும்- பாரபட்சம் காட்டாமல், இளையவர் முதியவர் என்றில்லாமல் ஒரு படைப்பு பிடித்திருந்தால் மேட்டிமை இல்லாமல் பாராட்டிப் பேசும் உயர்ந்த பண்பாளர். நான் மூன்று தடவை தொடர்ந்து தி.ஜா. நினைவுக் குறுநாவல் போட்டியில் பரிசு பெற்றேன். கணையாழியால் அவருக்குப் பெருத்த நஷ்டமே தவிர லாபமில்லை. அந்த நிலையிலும் படைப்புகளுக்கு சன்மானம் வழங்கி வந்தார். சிற்றிதழ்களில் படைப்பாளி?க்குப் பணம் கொடுத்தவர் அவர் மட்டுமே என்
நினைக்கிறேன். கணையாழியில் வெளியான என் ஒரு கவிதைக்கும் 4 குறுநாவல்களுக்கும் சன்மானம் கிடைத்திருக்கிறது. தி.ஜானகிராமன் என் ஆதர்ச எழுத்தாளர். கதை முழுவதையும் ஆசிரியன் குறுக்கீடு இன்றி பாத்திரங்களின் உரையாடல் களாலேயே அலுக்காமல் நடத்திச் செல்லும் அவரது அற்புதத் திறன் என்னைப் பரவசப்படுத்தும். அதன் தாக்கம் என் கதைகளில் என்னையறியாமலே வெளிப்பட்டது. அவரது`சத்தியமா` என்ற கதை என்னைக் கிறங்க அடித்தது. அந்த பாணியில் `இனியரு தடவை` குறுநாவலை முழுதும் உரையாடல்களாலேயே அமைத்தேன். தி. ஜாவின் எழுத்தில் மோகம் கொடிருந்த எனக்கு அவர்
பெயரால் நடத்தப் பட்ட போட்டியில் பரிசு கிடைத்ததைப் பெரும்பேறாகவே கருதுகிறேன். அதைவிடப் பெரிய பேறு கணையாழியின் பரிணாம வளர்ச்சியை, தொடர்ந்து 5 ஆண்டுகள் எழுதியது. தொடர்ந்து அவ்வளவு நீண்ட காலம் கணையாழ்?யில் எழுதியது நானாகத்தான் இருக்கும். கஸ்தூரிரங்கன் பொறுப்பில் இருந்திருந்தால் இன்னமும் அத் தொடரை தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பேன்.
1965ல் தொடங்கப் பட்ட கணையாழிக்கு 1995ல் 30 ஆண்டு முடிந்திருந்தது. இவ்வளவு நீண்ட காலம் எந்த இலக்கியப் பத்திரிகையும் விடாமல் நடந்ததாக வரலாறு இல்லை. 1995 ஏப்ரலில் நான் கி.க அவர்களைச்சந்தித்த போது முப்பது ஆண்டுகள் முடிந்ததையட்டி சில புதிய அம்சங்களை வெளியிட விரும்பினார். அதில் ஒன்றாக கணையாழியின் வளர்ச்சியைச்
சொல்லும்படி முதல் இதழிலிருந்து ஒவ்வொரு இதழாகத் தொடர்ந்து விமர்சித்து எழுதும்படி என்னைக் கேட்டுக் கொண்டார். 25ஆண்டு முடிந்தபோது மாலன் அவர்கள் `கணையாழி-25 என்று ஒரு தொடர் எழுதினார். நான் அதைக் குறிப்பிட்டபோது,`அது ஒட்டு மொத்தமான விமர்சனம். இப்போது நீங்கள் இதழ் இதழாக எழுதுங்கள்` என்றார். `மாதம் ஒரு இதழ் என்றால் இன்னொரு 30 வருஷம் ஆகுமே சாத்யமா? அதற்குப் பதிலாக ஒரு மாதத்துக்கு ஒரு ஆண்டு என்று எழுதினால் 30 மாதங்களில் முடித்து விடலாமே` என்றேன். `அதனால் என்ன/ முடிந்தவரைஎழுதலாம். மாதம் ஒரு இதழ் என்றே எழுதுங்கள்` என்றார்.
இதை மாலன்கூட அவர் தினமணி ஆசிரியராக இருந்தபோது தினமண்? கதிரில் எழுதினார். `படித்ததில் பிடித்தது- படித்ததில் இடித்தது` என்ற தலைப்பில் வாரா வாரம் கட்டம் போட்டு எழுதிய போது, ஒரு வாரம் `படித்ததில் இடித்தது` என்ற பகுதியில் `கணையாழியில் மாதம் ஒரு இதழ் என்று தொடங்கியது முதல் எழுதுகிறார்கள். அப்படியானால் இது வந்த இதழ்கள் எழுத 30 ஆண்டுகள் ஆகும். அதற்குள் அடுத்து 30 ஆண்டுகள் ஆகியிருக்கும். எப்படி- இடிக்கிறதே!` என்று எழுதினார். ஆனாலும் கி.க விரும்பியபடியே மாதம் ஒரு இதழ் வீதம் எழுதினேன். அட்டையையும் சுவையான பகுதிகளையும் ஒளி நகல் எடுத்து இணைத்து இதழ் முழுதும் ஒரு அம்சமும் விட்டுப்போகாமல் எழுதினேன். அதற்கு நல்ல வரவேற்பிருந்தது. கணையாழியின் ஆரம்ப காலம் முதல் அது சாதித்ததை இளைஞர்கள் அறிந்து கொள்ள `கணையாழியின் பரிணாம வளர்ச்சி` என்ற அத் தொடர் உதவியது. அதைப் படித்த ஆய்வு மாணவர்கள் பலர் தொடர்பு கொண்டு பயன் பெற்றார்கள். மயிலாடுதுரையில் ஒரு ஓய்வு பெற்ற அஞ்சல் துறை அதிகாரி 1967ல் நடைபெற்ற அகில இந்திய அஞ்சல் துறை மாநாடு பற்றிய அறிக்கை வந்ததை நான்
குறிப்பிட்டதைப் பார்த்துவிட்டு 30 ஆண்டு கழிந்தபின் அதை நினைவு கூர்ந்ததில் நெகிழ்ந்து தான் அதில் பங்கேற்றதைக் குறிப்பிட்டுப் பா?ட்டி அக் கட்டுரையின் பிரதி கேட்டு எழுதினார். கி.க அவர்களும் `நன்றாக வருகிறது. எனக்கே இதையெல்லம் நாமா செய்தோம்` என்று மலைப்பாய் இருக்கிறது. இ.பா கூடப் பாராட்டினார்` என்றார். அவ்வளவு பெரிய பத்திரிகையாளர் என்மீது நம்பிக்கை வைத்து அப் பெரும் பணியை ஒப்படைத்ததுடன் பாராட்டியும் உற்சாகப்படுத்தினார் என்பது சாதாரண விஷயமா?
ஆனால் அதை சுஜதா கொச்சைப் படுத்தி அவருக்காந `கடைசிப்பக்கத்` தில் ஒருமுறை எழுதினார். நான் ஒவ்வொரு இதழிலும் அவரது கடைசிப்பக்கத்தைக் குறிப்பிட்டு ரசமான பகுதிகளை எடுத்துத் தந்து பாராட்டியே எழுதி வந்திருக்கிறேன். ஒரு மாதம் ` பெர்?யாரின் ஆணவப் பேச்சு` என்ற தலைப்பில் கடைசிப்பக்கத்தில் `தமிழ் காட்டுமிராண்டி பாஷை` என்று அவர் சொன்னதை விமர்சித்து எழுதப்பட்டிருந்தது. அடியில் `தொடித்தலை விழுத்தண்டினார்`என்று குறிப்பிடப்பட்டிருந்தது. வழக்கமாக கடைசிப்பக்கம் எழுதுவது சுஜாதா என்பதால் நான் அதை உறுதி செய்து கொள்ளாமலே- கி.க அல்லது சுஜாதாவைத்தான் கேட்டிருக்கமுடியும். அதற்கான நேரமோ சந்தர்ப்பமோ இல்லாத நிலையில்- சுஜாதா தான் அதை எழுதினார் என்று எழுதிவிட்டேன். அது நானில்லை என்று அவர் மறுப்புக் கொடுத்ததோடு நிறுத்தி இருக்கலாம். அவர் எழுதினார்: `சபாநாயகம் 30 ஆண்டு கணையாழி அவரிடம் உள்ள ஒரே தகுதியில் நக்கலாக கணையாழியில் எது வந்தாலும் அது நான் எழுதியது தான் என்று என் தலையில் போட்டு விடுகிறார். சத்தியமாக அதை எழுதியது நான் இல்லை`. நான் அவரது கதை பின்- னும் திறத்திலும் ரசமான நடையழகிலும் மனம் பறிகொடுத்தவன். அவரைக் குறைகூறி நான் ஏதும் எழுதி?விடவில்லை. ஆனாலும் ஏதோ ஈகோ பிரச்சினை-அப்படிக் கொச்சைப்படுத்தி எழுதிவிட்டார். பிறகு விசாரித்ததில் `தொடித்தலை
விழுத்தண்டினார்` என்ற பெயரில் எழுதியது நா.பா என்று கேள்வி?ப் பட்டேன். நான் சுஜாதாவுக்கு `நான் உங்கள் ரசிகன். உறுதிப் படுத்திக் கொள்ளாமல் எழுதியது தவறுதான். ஆனால் உங்களை மலினப்படுத்தும் நோக்கத்தில் நான் அதை எழுதவில்லை` என்று எழுதினேன்.அவரிடமிருந்து பதில் வரவில்லை. அதிலெனக்கு வருத்தமும் இல்லை. நான் இன்னும் அவரது ரசிகன்தான்.
பொருளதார நெருக்கடி அதிகமாகி தொடர்ந்து நடத்த முடியாத நிலையில் `தசரா` தமன் பிரகாஷ் அதை ஏற்று நடத்த முன் வந்தபோது எப்படியாவது தான் தொடங்கியது இல்லாமலே போவதைவிட யாராவது நடத்தட்டுமே என்று சிறிதும் வருத்தமின்றி கி.க கொடுத்துவிட்டார். அதற்குப்பின்னும் நான் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தேன். கி.க போல அல்லாமல் என் கட்டுரைகளில் அவ்வப்போது வெட்டு விழுந்தது. 2 பக்கம் ஒரு பக்கமாகக் குறைக்கப்பட்டது. கி.க தொடங்கியதை நிறுத்தத் தயங்கியமாதிரி தெரிந்தது.அடுத்து ஒரு மாதம் பெட்டிச் செய்திபோலச்சுருக்கி என் பெயரும் இல்லாமல் அரைப் பக்கத்தில் வந்தது. அதற்கு மேலும் பொறுக்காமல் நான் ஆசிரியர்க்கு,` என் கட்டுரையைத்தொடர விருப்பம் இல்லையென்றால் நேரடியாகவே சொல்லி?விடுங்கள்.எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் இப்படி மலினப்படுத்த வேண்டாம்` என்று எழுதினேன். `இல்லை. நீங்கள் எப்போதும் போலவே எழுதலாம். அப்படியே வெளியாகும் ` என்று வருத்தம் தெரிவித்து பதில் வந்தது.
அப்புறம் தொடர்ந்து ஏப்ரல் 2000 வரை எழுதினேன். அம்மாதக்கடைசியில் உதவி ஆசிரியரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. ` கணையாழியில் புதிய பகுதிகள் வரவிருப்பதால் தங்களது தொடரை தற்போதைக்கு நிறுத்தி வைக்க ஆசிரியர் குழு எண்ணுகிறது. உங்கள் ஒப்புதலை எதிர்பார்க்கிறோம்`. ஒப்புதல் இல்லை என்றா சொல்லமுடியும்? `ஆகா! அப்படியே செய்யலாம்`
என்று எழுதினேன். இப்படி 58 மாதங்கள் தொடர்ந்து வந்த `கணையாழியின் பரிணாம வளர்ச்சி` நிறுத்தப்பட்டது. கி.க அவர்களுக்கும் தொடர்ந்து அதைப் படித்து வந்தவர்களுக்கும் வருத்தந்தான். ஆனால் பத்திரிகை நடத்துபவர்கள்
விருப்பம் அது. அதில் வருத்தப்பட என்ன இருக்கிறது? என்னைப் பொறுத்தவரை அத் தொடர்மூலமே நான் இலக்கிய உலகில் பெரிதும் அறியப்பட்டேன் என்பதில் மன நிறைவு கொள்கிறேன்.
பின்னர் கி.க அவர்கள் `அம்பலம்` மூலம் கணையாழியின் 30 ஆண்டு இதழ்களையும் இணைய தளத்தில் கொண்டுவர இருப்பதால் 30 பைண்டுகளையும் அனுப்பி வைக்கும்படியும் வேலை முடிந்ததும் பத்திரமாக திருப்பி அனுப்புவதாகவும் கேட்டார்கள். பிரிய மனம்?ல்லை என்றாலும் அதன் சாசுவதம் கருதி அனுப்பி வைத்தேன். கொஞ்சம் வலைஏற்றம் நடந்த பிறகு ஏதோ காரணத்தால் அம் முயற்சி கைவிடப்பட்டது. பிறகு கலைஞன் பதிப்பகம் தொகுப்பாக வெளியிட விரும்பிக் கேட்டதால் கி.க அவர்கள் என்னையே முதல் பத்தாண்டுகளைத் தொகுத்துத் தர வேண்டினார். அதன்படி 1965 முதல் 1974 வரை முதல் தொகுப்பாக எனது தேர்வில் `கணையாழி களஞ்சியம்`வெளியாயிற்று. தொடர்ந்து 1975 முதல் 1984 வரையிலான 10 ஆண்டு
கள் இ.பா அவர்களது தேர்வில் `கணையாழிக் களஞ்சியம்`-2 வெளியாகி உள்ளது. 3வது தொகுதி 1985 முதல்
1994 வரை என்.எஸ்.ஜெகந்நாதன் அவர்களது தேர்வில் வெளியாக உள்ளது.
அதே கலைஞன் பதிப்பகத்தார் இப்போது `தீபம் இதழ்த் தொகுப்பை` 2 பாகங்களாக என் தேர்வில் கொணர இருக்கிறார்கள். முதல் தொகுப்பு அச்சாகிக் கொண்டிருக்கிறது. 2வது தொகுப்பைத் தயாரித்துக் கொண்டிருக்கிறேன். இலக்கிய ஆர்வலர்களுக்கு இதுவும் பெருவிருந்தாக அமையும்.
- வே.சபாநாயகம்.
Thursday, December 11, 2003
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
<< ஆனால் அதை சுஜதா கொச்சைப் படுத்தி அவருக்காந `கடைசிப்பக்கத்` தில் ஒருமுறை எழுதினார் >> நீங்கள் செய்த தவறை அவர் கோபமாகச் கட்டிக் காட்டி இருக்கிறார் என்று தான் தோன்றுகிறது.
Post a Comment